முத்தான 3 விஷயங்கள்



வேண்டாம் சர்!

இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றவர் தாகூர். ஆரம்பத்தில் தாகூர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் கல்கத்தா பல்கலைக்கழகம் நடத்திய மெட்ரிகுலேஷன் தேர்வில் இலக்கணப் பிழை திருத்துவதற்காக மாணவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற ‘கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்பை முதலில் தாகூர் வங்க மொழியில் எழுதினார். பின்னர் அவரே ஆங்கில மொழியாக்கம் செய்தார். ஆங்கில மொழிபெயர்ப்பினைப் படித்த ஐரிஷ் கவிஞர் ஏட்ஸ் பாராட்டியதுடன், இங்கிலாந்தின் மேக்மில்லன் கம்பெனி மூலம் (ஆங்கிலம்) வெளியிட ஏற்பாடு செய்தார்.

தாகூரின் கட்டுரைகளை ஆரம்பத்தில் இலக்கணப் பிழை திருத்த மாணவர்களிடம் கொடுத்த கல்கத்தா பல்கலைக் கழகம், பின்னாளில் அவருக்கு இலக்கியத்திற்கான டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தாகூருக்கு ‘சர்’ பட்டம் கொடுத்தனர்.

பஞ்சாபிலுள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் வெள்ளை ராணுவத் தளபதி டயர் இந்தியர்களைச் சுட்டுக் கொன்றார். பிரிட்டிஷாரின் இந்தக் காட்டுமிராண்டிப் போக்கைக் கண்டித்தார் தாகூர். படுகொலைக்குக் காரணமான ஆட்சியினர் கொடுத்த சர் பட்டத்தை இனியும் வைத்திருப்பது சுயமரியாதையுள்ள தேசபக்தனுக்கு இழுக்கு என நினைத்து அதைத் துறந்தார்.

அப்போதைய பிரிட்டிஷ் வைஸ்ராய்க்கு அவர் எழுதிய கடிதம், உணர்ச்சிமிக்க ஆங்கில நடைக்கு இன்றும் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

அதிபர்கள்... ஒற்றுமை!

அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் பதவியில் இருக்கும்போதே சுட்டுக் கொல்லப்பட்டதைப் போலவே அமெரிக்க அதிபர் கென்னடியும் பதவியில் இருக்கும்போதே சுட்டுக் கொல்லப்பட்டவர்.
இரு அதிபர்களின் துயர முடிவுகளுக்கும் ஒற்றுமை இருப்பதைப் போலவே வேறு பல ஒற்றுமைகளும் இருவருக்கும் உண்டு.

1. லிங்கன் அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட ஆண்டு: 1860. கென்னடி அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட ஆண்டு 1960.

2. ஃபோர்டு திரையரங்கில் நடைபெற்ற நாடகத்துக்குச் செல்ல வேண்டாம் என்று லிங்கனுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. அலட்சியப்படுத்திவிட்டு நாடகம் பார்க்கச் சென்றார்; சுட்டுக் கொல்லப்பட்டார். டல்லாஸ் நகர் செல்ல வேண்டாம் என நெருங்கிய நண்பர்கள் கென்னடியிடம் கேட்டுக் கொண்டனர். மீறிச் சென்றார்; சுட்டுக் கொல்லப்பட்டார்.

3. இரு அதிபர்களின் மரணமும் வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது. இருவரும் மனைவி அருகிலிருக்கும்போதுதான் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இருவரையும் சுட்டவர்கள் பின்னாலிருந்து சுட்டுள்ளனர். இருவருக்கும் தலையில் குண்டு பாய்ந்தே மரணம் நிகழ்ந்துள்ளது.

4. லிங்கன் இறந்தபின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆண்ட்ரூ ஜான்சன்.

கென்னடி இறந்தபின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் லிண்டன் ஜான்சன்.

5. இருவரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். தென் மாநிலத்தார். முன்னாள் செனட்டர்கள்.

6. லிங்கனைச் சுட்டவன் திரையரங்கில் சுட்டான்; கடையில் பிடிபட்டான். கென்னடியைச் சுட்டவன் கடையிலிருந்து சுட்டான்; திரையரங்கில் பிடிபட்டான்.

7. இரு அதிபர்களைச் சுட்டவர்களும் விசாரணைக்கு வரும் முன்பே சுட்டுக் கொல்லப்பட்டனர்

அடேங்கப்பா... பிரமிடுகள்!

எகிப்து என்றாலே பிரமிடுகள்தான் எவருக்கும் முதலில் நினைவிற்கு வரும். எகிப்தில் உள்ள பிரமிடுகளைச் சுமார் 36 லட்சம் மனிதர்கள் உழைத்துக் கட்டியுள்ளனர். கட்டி முடிக்க இருபது ஆண்டுகள் ஆகியுள்ளன.

 இவற்றைக் கட்டத் தேவையான சுண்ணாம்பு, கற்கள் எல்லாவற்றையும் நைல் நதியில் வெள்ளம் வரும் காலங்களில் படகுகள் வாயிலாகக் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு எத்தனை தடவை கொண்டு வந்திருக்கிறார்கள் தெரியுமா? 5 லட்சம் தடவைகள். இங்கிருக்கும் பிரமிடுகளில் மிகப் பெரிய பிரமிடில் இரண்டரைக் கோடி கற்களைப் பயன்படுத்தி யிருக்கிறார்கள்.

பா.ராஜேஷ்