கிரிக்கெட்... சில சுவாரசியங்கள்!



* அறிஞர் பெர்னார்ட் ஷாவுக்கு கிரிக்கெட் பற்றி ஒன்றும் தெரியாது. ஒருமுறை ஒரு கிரிக்கெட் ரசிகர் அவரிடம் போய், ‘‘ஆஸ்திரேலியா டெஸ்ட்டில் இங்கிலாந்து ஜெயித்துவிட்டது’’ என்று உற்சாகத்துடன் கூறினார். அதற்கு ஷா அமைதியாகக் கேட்டார்: ‘‘ஆஸ்திரேலியாகாரர்கள் எதை டெஸ்ட் செய்தனர்?’’

* இங்கிலாந்தில் 1892ல் நடந்த போட்டி. ஜட்கன் என்ற வேகப்பந்து வீச்சாளர் தொடர்ந்து மூன்று பந்துகளில் 3 பேரை கிளீன் போல்ட் செய்தார். ஒவ்வொரு முறையும் ஒரு ஸ்டம்ப் இரண்டாகப் பிளந்து வானத்தில் பறந்தது.

* சிறந்த பந்து வீச்சாளராகவும் பின்னால் சிறந்த அம்பயராகவும் விளங்கிய ஹேரி பக்ஷா, மரணம் அடைந்தபோது அவரது விருப்பப்படியே அவருக்கு அம்பயர் கோட் அணிவிக்கப்பட்டு கையில் கிரிக்கெட் பந்து கொடுக்கப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

* பேட்டின் அகலம் பற்றி 1864க்கு முன்புவரை எந்தவித விதிமுறையும் கிடையாது. இதனால் பலரும் அகலமான பேட்டை கொண்டுவந்து ஸ்டம் பை மறைத்துக் கொண்டு நிற்பார்களாம்.

* தென் ஆப்ரிக்காவில் 1928ல் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டி. பவுண்டரியைக் கடந்த பந்தை ஒரு நெருப்புக் கோழி விழுங்கிச் சென்றுவிட்டது. விளையாட வேறு பந்து இல்லை. அதைப் பிடித்து, கழுத்தை கசக்கி, பந்தை வெளியே எடுத்த பிறகு ஆட்டம் தொடர்ந்தது.

* 1959ல் கான்பூரில் நடந்த போட்டியில் படுவேகத்தில் வந்த பந்தைப் பார்த்து நீல் ஹார்வி குனிந்து திரும்பினார். அப்போது பந்து அவரது தொடை இடுக்கில் புகுந்து சிக்கிக் கொண்டது. தான் தொடையால் கேட்ச் பிடித்தது சில நொடிகள் கழித்துத்தான் அவருக்கே தெரிந்தது.

* ஆஸ்திரேலிய வீரர் ஹார்வி பேட் செய்தபோது பந்து ஸ்டம்பில் பட்டு பெயில்கள் இரண்டும் உயரே பறந்தன. ‘கிளீன் போல்டு’ என்று நினைத்து ஹார்வி வெளியேறினார். ஆனால் உயரே சென்ற பெயில்கள் கீழ்நோக்கி வந்து ஸ்டம்பில் சரியாக உட்கார்ந்துவிட்டன. அம்பயர் ஹார்வியைக் கூப்பிட்டு, ‘‘நீங்கள் அவுட் இல்லை’’ என்று சொன்னபோது ஹார்விக்கு ஆச்சரியம் தாள முடியவில்லை.

* மும்பையில் 1937ல் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் லாலா அமர்நாத் 118 ரன்கள் எடுத்தபோது பல பெண்கள் தாங்கள் அணிந்திருந்த தங்க நகைகளைக் கழற்றி அவர்மீது மலர்களாகத் தூவினர். லாலாவுக்கு ஒரு கோடீஸ்வரர் ரூ. 15 ஆயிரம் கொடுத்தார். இன்னொருவர் கார் பரிசளித்தார்.

என்.ஜரினா பானு,
திருப்பட்டினம்.