ஒரு பிரசவம்... 90 குட்டிகள்..!



பூச்சிப் பூக்கள் 25

இன்றைய இளைஞர்கள் நகர்ப்புறங்களில் நாகரிகமான தொழில்களில் ஈடுபடவே விரும்புகிறார்கள். எனவேதான் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே குக்கிராமங்களைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய மாணவ சமுதாயத்தினரில் பலர் தேள்களைப் பார்த்தே இருக்கமாட்டார்கள். பயாலஜி பாடப் புத்தகத்தில் தேளைப் பற்றி படித்த அனுபவம் மட்டும்தான் இவர்களுக்கு இருக்கும்.

நகர்ப்புறத்து வாடகை வீடுகளில் வாழ்வோர் பெரிதாய் தட்டு முட்டுச் சாமான்களை வைத்துக் கொள்வதில்லை. கூடவே அம்மிக்கல்லும் ஆட்டுரலும், மிக்ஸி மற்றும் கிரைண்டர்களாக மாறிவிட்டதால், தேள்கள் வாழ்வதற்கான வாழிடங்கள் குறைந்து விட்டன. எனினும் இந்த சாமர்த்தியமான தேள்கள் நகர்ப்புறங்களில் அடுக்கி வைத்திருக்கும் செங்கற்கள் மற்றும் கொட்டி வைத்திருக்கும் கருங்கற்களின் அடியில் இடம் பிடித்து விடுவது அதன் சாமர்த்தியம்தான்.

தேள்களுக்கிடையே தாம்பத்ய சங்கீதம் முடிந்த பிறகும் கூட, ஒரு சிறிய மாரக கண்டம் இருக்கிறது. அதாவது ஆண் தேள், பெண் தேளை தன் இரு கைகளால் பிடித்து இழுத்து, ஏற்கனவே பிதுக்கிவிட்ட விந்தணுப் பையின் மீது விடும். உடனே பெண் தேள் தன் பின்புறத்தைத் தாழ்த்தி ஒரு வித சக்ஷன் முறையில் இப்பையை உடலுக்குள் வாங்கிக் கொள்கிறது. கருவறைக்குள் நுழைந்தவுடன் இந்தப் பை பலூன் போல் வெடிக்க, விந்தணு பைரட்டுகள் ரிலீசாகி விடுகின்றன. அப்புறம் இந்த விந்தணுக்கள் போட்டி போட்டுக் கொண்டு அதற்குண்டான வேலையைப் பார்க்கத் துவங்கி விடும். ஃபெர்ட்டலைஸேஷன்!

ஆண் தேள் இப்படி பெண் தேளை இழுத்து விந்தணுப்பையின் மீது விட்டு, அது உறிஞ்சுவதை ஊர்ஜிதப்படுத்தியவுடன் டுமீல் எஸ்கேப்தான். எனினும் இந்த சில வினாடிகள் இவற்றிற்கு திக் திக் நிமிடங்கள்தான்! பொதுவாக சேர்க்கை நிறைவடைந்தவுடன் இவற்றுக்கிடையே பிற ஜீவராசிகளைப் போன்ற மயக்க நிலைகள் கிடையாது. ‘சாப்பிட்டோமா... கை கழுவினோமா’ கதைதான்! இதையும் மீறி ஆண் தேள் அருகில் இருக்குமாயின், பெண் தேள் தன் பொக்கிஷ விஷம் அனைத்தையும் சேர்த்துக் கொட்டி கொலை செய்து விடும்.

இதனால்தான் மனோகர மஞ்சத்தில் இருக்கும்போதே ஆண் தேள்கள் பல்வேறு திறமைகளைக் காட்டி அமைதிப்படுத்திக் கொண்டே இருக்கும். எல்லாம் முடிந்த கையோடு ஆண் தேள்கள், பெண் தேளுக்குப் பயந்து மராத்தான் ஓட்டத்தில் மறைந்து விடுகின்றன. எனினும் அகப்படும் ஆண்தேளை பெண் தேள் கொன்று சிதைத்து ஜிகிர்தண்டா மாதிரி குடித்து விடுகிறது.

இப்படி கலவி முடிந்த சுகத்தோடு உயிர் பிழைக்க ஓடி விடும் கணவனிடம் மானசீக டைவர்ஸ் வாங்கிக் கொண்டு, பெண் தேள் எதிர்த் திசையில் சென்று விடும். ஒருசில மாதங்களுக்குப் பிறகு  குறிப்பாக வசந்த காலம் அல்லது கோடைக் காலத்தின்போது  90 வரையிலான குட்டிகளை ஈன்றெடுக்கும். தாயின் சாயலில் இருக்கும் இக்குட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பிரசவிக்கும். இந்த டெலிவரி கூட ஒரு திருவிழா மாதிரி பல மணி நேரத்திலிருந்து ஒரு வாரம் வரை கூட நிகழ்வதுண்டு.

நிறை கர்ப்பத் தேளுக்கு பிரசவ வலி துவங்கியவுடன், அத்தேள் ‘ஸ்டில்ட்’ என்னும் ஒரு பிரத்யேக அமைவில் அமர்ந்து கொள்ளும். அதாவது உடலின் முன்பகுதியை முடிந்த மட்டிலும் மேலே உயர்த்தியவாறு, அதனடியில் தனது இரு கைகள் மற்றும் முன்னிரண்டு கால்களையும் கோர்த்து ஒரு கூடை மாதிரி அமைத்துக் கொள்ளும். ஆர்வத்தோடு பிறக்கும் குட்டிகள் ஒவ்வொன்றையும் அலுங்காமல் குலுங்காமல் இக்கூடையில் பிடித்து தரையில் விடும். தாய்மைக் குணம்!

பிறக்கும் குட்டிகளுக்கு போதிய வளர்ச்சியும் புவியியல் சாதுர்யங்களும் இருப்பதில்லை. எனவே தாயில்லாமல் இந்தக் குட்டிகளால் தமது வாழ்வின் ஆரம்ப காலத்தைக் கழித்திட முடியாது. உடலின் மேற்புறக் கவசமும் கூட வெகு மென்மையாக எளிதில் டேமேஜ் ஆகிவிடக் கூடிய நிலையில்தான் இருக்கும்.

 இன்குபேட்டர் மாதிரி உஷ்ணம் தேவை. இதற்கான இயற்கை இன்குபேட்டர் தாயின் முதுகுதான். எனவே எல்லாக் குட்டிகளும் தாயின் கால்வழியாக அதன் முதுகில் ஏறி அமர்ந்து செட்டிலாகி விடும். இப்படி 90 குட்டிகளும் தாயின் முதுகில் ஏறி ஈக்கள் மொய்ப்பது போல் அமர்ந்த பிறகு, தாயின் உடற்பகுதி கொஞ்சம் கூட வெளியில் தெரியாது. குட்டிகளின் போர்வையால் மூடப்பட்டிருக்கும். குட்டிகள் இதமான சூட்டில் இங்கே சில நாட்களைக் கழிக்கும்.

தாய்த்தேள் இப்படி முதுகில் தம் குட்டிகளின் இனிய சுமையை சுமந்து கொண்டே மெதுவாக இயங்கி இரை தேடிக் கொண்டிருக்கும். ஆயினும் தாய்த்தேள் தம் குட்டிகளுக்கு எவ்வித உணவையும் கொடுப்பதில்லை. அக்குட்டிகள் தாம் பிறக்கும்போது மிச்சம் வைத்திருக்கும் மஞ்சள் கருவைக் கொண்டே முதுகுச் சவாரி காலத்தைக் கழிக்கின்றன. தாயின் அவசியம், அதன் முதுகில் கிடைக்கும் உஷ்ணம் மட்டுமே!

தேள் குட்டிகளுக்கு பாம்புகளைப் போல் தோலுரித்துக் கொள்ளும் பழக்கம் உண்டு. இவற்றின் வளர்ச்சி அளவு கூட தோலுரிதலின் எண்ணிக்கையைக் கொண்டுதான் மதிப்பிடப்படுகிறது. இப்படி இந்தத் தேள்குட்டிகள் தம் முதல் அல்லது முதலிரண்டு தோலுரிதலை நிகழ்த்திய பிறகுதான் தாயின் முதுகிலிருந்து கீழே தரையிறங்குகின்றன. இதற்கு ஓரிரண்டு வாரங்கள் பிடிக்கிறது. இப்படி முதுகு வாசம் முடிந்து தரையிறங்கும் பேபி தேள் குட்டிகள் தனிப்பட்ட இருள் சாம்ராஜ்ஜியங்களை அமைக்கின்றன. சுகபோக ராத்திரி ஜீவனம்!

(தொடரும்)

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்