சருமமும் உயிர் காக்கும்!



தோல் தானம்

மனிதனுக்கு அழகையும் அடையாளத்தையும் அளிப்பது தோல் என்கிற சருமம். இதுவே உடலின் எல்லா உள்ளுறுப்புகளையும் மூடிப் பாதுகாக்கிறது. ஒருவரின் ஆரோக்கியத்தை அவரின் தோலின் தன்மையைக் கொண்டே கூறிவிட முடியும். தீ விபத்துகள் பெருகியுள்ள இக்காலத்தில் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு மாற்றுத்தோல் கிடைப்பதில்லை.

உடல் தானம், உறுப்பு தானம் ஆகியவற்றில் சமீபகாலமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு தோல் தானத்துக்கு இல்லை. ‘இறந்தவர் உடலில் இருந்து தோலை எடுத்தால் அவர்களது உடல் விகாரமாக ஆகிவிடுமோ’ என்கிற பயத்தில் அவர்களின் குடும்பத்தாரும் தோல் தானம் செய்யத் தயங்குகிறார்கள்.

‘‘இறந்தவர்களின் உடல்களில் இருந்து மட்டுமே தோலை தானமாக பெறுகிறோம். ‘டெர்மடோம்’ எனப்படும் கருவியின் மூலம் தோலின் மேல்பகுதியை மட்டுமே எடுக்கிறோம். அதுவும் கால் மற்றும் தொடைப்பகுதியில் இருந்து எடுக்கப்படுகிறது. எடுத்த இடத்தில் கட்டு போட்டு மூடி விடுகிறோம்.

 இதனால் விகாரமாக எதுவும் தெரியாது...’’- மக்களின் சந்தேகம் தீர்க்கும் பதிலுடன் பேசுகிறார் ரைட் மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.பாலகிருஷ்ணன். இந்தியாவில் மும்பை, புனேவுக்கு பிறகு, சென்னையில் தோல் வங்கியை அமைத்திருக்கும் இவர், தோல் தானம் பற்றி நமக்கு விளக்குகிறார்.

‘‘இறந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட தோல் எங்கள் தோல் வங்கியில் பதப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. தீக்காயம் அடைந்தவர்களுக்கு தோல் தானம் பயன்படுகிறது. 30 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயம் உள்ளவர்களை பிழைக்க வைக்க மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும். தீக்காயப் புண்களில் இருந்து தொடர்ந்து நீர் வடிந்து புரதச்சத்து இழப்பு ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கிருமித்தொற்று ஏற்படும். அதனால் திறந்திருக்கும் காயங்களை மூட வேண்டும்.

முன்பு மிருகங்களிடம் இருந்து எடுக்கப்படும் ‘கொலாஜன்’ எனப்படும் புரதத்திசுக்களைக் கொண்டு காயங்களை மூடுவார்கள். இது 5 நாட்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கும். மனிதனின் உடலில் இருந்து எடுக்கப்படும் தோலானது மூன்று வாரங்கள் வரை தாக்குப் பிடிக்கும். இதற்குள் தீக்காயம் அடைந்தவர்களின் உடலின் திரவ இழப்பு நின்றுவிடும். கிருமித்தொற்று இருக்காது. உடலின் ஊட்டச்சத்தும் மேம்பட்டுவிடும். மேலோட்டமான தீக்காயங்கள் ஆறிவிடும். இதனால் நோயாளியின் உயிரைக் காப்பது எளிதாகிவிடும்.

இப்படித்தான் இறந்த மனிதன் தானம் கொடுக்கும் தோலானது இன்னொருவரின் உயிரைக் காக்க பயன்படுகிறது...’’

*யார் தோல் தானம் அளிக்க முடியாது?

‘‘கல்லீரல் தொற்றுநோயான ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி பாதிப்புக்குள்ளாகி இறந்தவர்கள், கேன்சர், ஹெச்.ஐ.வி. போன்ற நோய்களால் இறந்தவர்கள் தோல் தானம் செய்யமுடியாது. தோலை சேகரிக்கும்போது, இறந்தவரின் ரத்தத்தையும் பரிசோதனைக்கு அனுப்புகிறோம். அவரின் தோலின் சிறிய அளவை கல்ச்சர் டெஸ்ட்டுக்கு அனுப்பி ஆராய்ந்த பிறகே, 85 சதவிகிதம் கிளிசரால் கொண்டு பதப்படுத்தி வைக்கிறோம்...’’

*தோலைப் பாதுகாப்பது எப்படி?

‘‘ஒருவர் மூளைச்சாவு  அடைந்த பின் அவரின் குடும்பத்தினர் தோல் தானம் அளிக்க முன்வந்தால் எங்களுக்குத் தகவல் வரும். எங்கள் மருத்துவக்குழு 6 மணி நேரத்துக்குள் சென்று தோலை எடுத்து வருவார்கள். எடுக்கப்படும் தோலானது 40 சதவிகிதம் கிளிசரால் கொண்டு பதப்படுத்தப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும்.

பின்பு தோலின் ஒரு பகுதியை கல்ச்சர் டெஸ்ட்டுக்கு அனுப்பி கிருமி இல்லை என்ற உடன் 85 சதவிகித கிளிசராலுக்கு மாற்றப்பட்டு ‘அஜிடேட்டர்’ கருவியில் பதப்படுத்தி  ‘பயோஸேஃப்டி கேபினட்’ கருவியில் வைத்து தோலை சற்று விரிவுபடுத்துவோம். பிறகு தோலை அளந்து 100 செ.மீ., 300 செ.மீ. என தனித்தனியாக டெஸ்ட் டியூபில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடுவோம்.

தேவைக்கு ஏற்ப தோலை அளந்து தீக்காயம் அடைந்தவர்களுக்கு கொடுத்து உதவுவோம். இந்தத் தோலை Saline waterல் கழுவினால் மென்மையாகி பயன்படுத்த தயாராக இருக்கும். தானமாக கொடுக்கப்பட்ட தோலை சரியான முறையில் பதப்படுத்தி வைத்தால் 5 வருடங்கள் வரை பாதுகாத்து, பயன்படுத்த முடியும்.

பல உயிர்களை காக்கும் தோல் தானத்தை மக்கள் தயங்காமல் செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் எங்களுக்கு Tollfree 1800 425 03939 க்கு ஒரு போன் செய்தாலே போதும்... அவர்களது வீட்டுக்கே சென்று தோலை எடுத்து வருகிறோம்...’’
தானமாக கொடுக்கப்பட்ட தோலை சரியான முறையில் பதப்படுத்தி வைத்தால் 5 வருடங்கள் வரை பாதுகாத்து பயன்படுத்த முடியும்...

- விஜய் மகேந்திரன்
படங்கள்: ஆர்.கோபால்