சோதனையை வென்ற சாதனை!



ஆனந்த தாண்டவம்

குமரன் 24 வயது இளைஞர். உளவியல் ஆலோசகர், எழுத்தாளர், முனைவர் பட்டத்துக்கான பயணம், குறும்பட முயற்சி, திரைப்பட இயக்குநராகும் கனவு எனப் பன்முகம் கொண்டவர். ஆரோக்கியமாக இருப்பவர்களே ஆயிரம் காரணங்கள் சொல்லி முடங்கிக் கொண்டிருக்கும் உலகில், மூளை முடக்குவாதம் (Cerebral palsy) என்ற பாதிப்புடன்தான் இத்தனை பணிகளையும் செய்து கொண்டிருக்கிறார் குமரன்.

 உடல் உறுப்புகளின் செயல்களைச்  சிக்கலாக்கும் இந்த மூளை முடக்குவாதத்துக்கு தெரபி, சிகிச்சை என்று வாழ்நாள் முழுவதும் மருத்துவத்தின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும். ஆனாலும், அந்த சிரமங்களின் சாயல் எதுவும் குமரனின் பேச்சில் இல்லை. அதைவிட நம்மை ஆச்சரியப்படுத்துகிறது குமரனின் அழகான தமிழ்...

‘‘அப்பா நாகர்கோவில் வானொலி நிலைய அறிவிப்பாளர். அம்மா இல்லத்தரசி. நான் பிறந்ததிலிருந்தே மருத்துவமனை வாழ்க்கைதான். குறை மாதக் குழந்தை என்பதால் ஆரம்பத்திலேயே இன்குபேட்டரில் வைத்து அடைகாத்திருக்கிறார்கள். அதன் பிறகும் நான் மற்ற குழந்தைகள் மாதிரி இயல்பாக இல்லாத தால் ஏதோ பிரச்னை என்று சிகிச்சை கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். சென்னைக்கு குடி வந்த பிறகுதான் மூளை முடக்குவாதம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சென்னையில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனையின் மருத்துவர் ‘உங்கள் மகன் காய்கறி மாதிரி இருக்கிறான்’ என்று அலட்சியமாகச் சொன்னதைக் கேட்டு என் பெற்றோர் உடைந்துபோயிருக்கிறார்கள். ஆனாலும், தங்கள் காதல் திருமணத்தின் சாட்சியாக முதல் குழந்தையாக பிறந்தவன் என்பதால் முன்னைவிட என் மேல் கூடுதல் அன்பு காட்டி வளர்க்க ஆரம்பித்தார்கள்.

ஐந்தாம் வகுப்பு வரை எல்லோரையும் போலத்தான் படித்தேன். இந்தக் குறைபாடு காரணமாக ஆறாம் வகுப்பில் பள்ளியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை. மற்ற பள்ளிகளிலும் இடம் கிடைக்கவில்லை. ‘நம் பிரச்னை சீக்கிரம் சரியாகிவிடும்... மற்றவர்கள் மாதிரி நாமும் கிரிக்கெட் விளையாடலாம்’ என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.

ஆனால், என்னை நிராகரித்த பள்ளிகள்தான் எனக்கு பல விஷயங்களைப் புரிய வைத்தன. ‘மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற பக்குவம் வந்தது. கிரிக்கெட் ஆட முடியாது... ஆனால், கிரிக்கெட் பற்றி நிறையத் தெரிந்து கொள்ளலாமே! நிஜவாழ்வில் நண்பர்கள் இல்லை. அதனால் என்ன... ஃபேஸ்புக், ட்விட்டர் இருக்கின்றனவே! இப்படி மாற்று வழிகளில் செல்ல ஆரம்பித்தேன். வீட்டிலிருந்தே 8ம் வகுப்பு எழுத முடிவு செய்தேன்.

 ‘உனக்கு நம்பிக்கை இருந்தால் 10ம் வகுப்புத் தேர்வையே வீட்டிலிருந்து எழுதலாம்’ என்று என் குடும்பத்தினர் ஊக்கப்படுத்தினார்கள்.  எனக்கு உளவியலில் ஆர்வம் இருந்ததால், அதை முக்கியப் பாடமாக எடுத்துத் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து வீட்டிலிருந்தபடியே 12ம் வகுப்பு, சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., எம்.எஸ்.சி. முடித்தேன். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில். முடித்துவிட்டு, இப்போது பி.ஹெச்.டி. பண்ணிக் கொண்டிருக்கிறேன். உளவியல் ஆலோசகராக கிளினிக்கும் நடத்திக் கொண்டிருக்கிறேன்.

இது உலகமகா சாதனை என்று நினைக்கவில்லை. ஆனால், என்னைப் போல ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு, வாழ்க்கையே இவ்வளவுதான் என்று முடிவுக்கு வந்தவர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. அதனால், இத்தனை வருடங்களாக நான் கடந்து வந்த வலிகளையும் அதைத் தாண்டி நான் பயணித்துக் கொண்டிருப்பதையும் புத்தகமாக எழுத விரும்பினேன்.

நான் சிவபக்தன். உலகநலனின் பொருட்டு ருத்ர தாண்டவம் ஆடுபவரும் அவர்தான். ஆனந்த தாண்டவம் ஆடுபவரும் அவர்தான். என் கால்களால் நடனம் ஆட முடியாவிட்டாலும் மனது எப்போதும் ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருந்ததால் புத்தகத்துக்கு ‘ஆனந்த தாண்டவம்’ என்று பெயர் வைத்தேன்.

 2013 டிசம்பரில் வெளியான இந்தப் புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆங்கிலத்தில் எழுதினால் இன்னும் பலரிடம் போய்ச் சேருமே என்று சிறி to CP (Cerebral Palsy to Counselling Psychologist) என்ற தலைப்பில் எழுதினேன். இந்த ஆங்கிலப் பதிப்பு  எனக்கு நிறைய மனிதர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது.

‘எங்களுக்குக் கிடைத்த பரிசு நீ’ என்றுதான் என்னிடம் என் பெற்றோர் சொல்வார்கள். மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும்போதும் அப்படியே அறிமுகப்படுத்துவார்கள். சைக்கிள் ஓட்டக் கூட பயப்படுகிற என் அம்மா என்னை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக கார் ஓட்டக் கற்றுக் கொண்டார்.

கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்று சொன்னவுடன் ஷார்ஜாவில் நடந்த மேட்ச் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கினார் அப்பா. மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் குழந்தைகளை சுமைகளாக, சாபமாக நினைக்கிற சில பெற்றோர் மத்தியில் என் பெற்றோர் உண்மையில் எனக்குக் கிடைத்த பரிசு.

நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவன். சமூகம் மாற்றுத்திறனாளிகளை நடத்துவது ஒருபக்கம் இருக்கட்டும். குடும்பத்தைச் சேர்ந்த வர்களே என்னைப் போன்றவர்களையும்
மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் வெளியில் சொல்வதை கவுரவக் குறைவாக நினைக்கிறார்கள்.

‘நீ எங்களோட சாபக்கேடு’ என்று குழந்தைகளை திட்டுபவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சொல்வது ஒன்றுதான்... ஒரு நோயாளியாகப் பிறப்பதோ, மாற்றுத்திறனாளியாக இருப்பதோ நாங்கள் செய்த தவறு இல்லை. காலத்தின் ஓட்டத்தில் யார் வேண்டுமானாலும் நோயாளியாகலாம். யார் வேண்டுமானாலும் ஊனமாகலாம்.

எனக்கு பரதன் என்று ஒரு தம்பி இருக்கிறான். ராமாயண பரதன் போலவே அன்பில் பெரியவன். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அவனைப் பற்றி யாரிடமாவது சொன்னால், ‘அவன் நார்மலா?’ என்றுதான் உடனே கேட்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒருவர் குறைபாட்டோடு பிறந்தால் எல்லோரும் அதேபோலத்தான் இருக்க வேண்டுமா என்ன?  ‘மாற்றுத்திறனாளிகளைப் படிக்க வைக்க வேண்டியதில்லை... வேலை கொடுக்க வேண்டியதில்லை...

திருமண வாழ்க்கையும் கிடையாது’ என்றே பலரும் முடிவெடுத்து வைத்திருக்கிறார்கள். எல்லோரையும் போலத்தான் நாங்களும். உடல் செயல்பாடுகளில் சிறிய வேறுபாடு தவிர, நாங்களும் உங்களைப் போலத்தானே? எங்களுக்கும் படிக்கும் உரிமை உண்டு... பணிபுரியும் உரிமை உண்டு... திருமணம் செய்யும் உரிமையும் உண்டு. மொத்தத்தில் வாழ்கிற உரிமை எங்களுக்கும் உண்டு!’’

‘‘சைக்கிள் ஓட்டக் கூட பயப்படுகிற என் அம்மா, என்னை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காகவே கார் ஓட்டக் கற்றுக் கொண்டார். கிரிக்கெட்
பார்க்க வேண்டும் என்றவுடன் ஷார்ஜா மேட்ச் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கினார் அப்பா...’’

- ஞானதேசிகன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்