இதயத்தை வெடிக்கச் செய்யும் இரைச்சல்!



சுற்றுச்சூழல்

மரக்கிளைகளில், மின்சாரக் கம்பிகளில், நம் வீட்டு ஜன்னல் கம்பிகளில் அமர்ந்து கீச்சிட்டுக் கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை காணவில்லை. கைப்பேசிக் கதிர்வீச்சுகள்தான் சிட்டுக்குருவிகளை கொன்று விட்டதென பரவலாக அறியப்பட்டது.

உண்மை என்னவெனில், சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு முக்கியக் காரணியே ஒலிமாசுதான். நிலம், நீர், காற்று மாசு போல ஒலியும் மாசடைந்து விட்டது. பெருநகரங்களில் திரும்பிய திசையெங்கும் காதைப் பிளக்கும் பேரிரைச்சல். வாகனங்களும் தொழிற்சாலைகளும் ஏற்படுத்தும் கணக்கிலில்லா டெசிபல் ஒலிகளை நம் காதுகள் உள் வாங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த ஒலிமாசு மனிதர்களுக்கும் சூழலியலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துபவை.

பேரிரைச்சலால் மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேசுகிறார் காது மூக்கு தொண்டை நிபுணர் நிராஜ் ஜோஷி.‘‘தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிச் சத்தம் கேட்டு பலருக்கும் காது கேளாமல் போயிருக்கிறது.

அதிக டெசிபல் ஒலியைக் கேட்கும்போது காதில் இருக்கும் ஜவ்வு கிழிந்து விடுவதால் நடக்கும் விபரீதம் இது. Low Frequency, Speech Frequency, High Frequency என்று ஒலியை மூன்றாகப் பிரிக்கலாம். 20 ஆயிரம் முதல் 2 லட்சம்  Kilo Hertz   வரையில்   Speech Frequency.

 அதற்கு மேற்பட்ட High Frequency ஒலிதான் ஆபத்தானது. இந்த ஒலியைக் கேட்கும்போது மயக்கம், கோபம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படுகிறது. இதனால்தான் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் ஒலி எழுப்பத் தடை செய்யப்பட்டுள்ளது. உள்காதில் Hair Cells எனும் முடி இருக்கும். ஒவ்வொரு சத்தத்தையும் பொறுத்து ஒவ்வொரு முடியும் ஆடும். தொடர்ந்து அதிக இரைச்சலைக் கேட்கும்போது அந்த முடி செயலிழந்து போகலாம்.

டிஸ்கோவில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டு ஆடி விட்டு வெளியே வந்தால் காது மந்தமாகக் கேட்கும். இது தற்காலிக கேட்கும் திறன் குறைபாடு. நாளொன்றுக்கு 7 மணி நேரம் என 7 நாட்களுக்கு தொடர்ந்து பேரிரைச்சலைக் கேட்டால் நிரந்தர கேட்கும் திறன் குறைபாடு வந்து விடும். இந்தக் குறைபாட்டுக்கு தீர்வே கிடையாது.

 காது கேட்கும் இயந்திரம் பொறுத்த வேண்டியதுதான். தீபாவளி நேரத்தில் வெளியே செல்லும்போது காதில் பஞ்சு வைத்துக் கொண்டு செல்வது நல்லது. பட்டாசு வெடித்து காது கேளாமல் போகும் நிலையில் காதில் சொட்டு மருந்தோ, தண்ணீரோ ஒரு சொட்டு கூட ஊற்றாமல் மருத்துவரை அணுக வேண்டும்’’ என்கிறார் நிராஜ் ஜோஷி.

ஒலிமாசு ஏற்படுத்தும் சூழலியல் சீர்கேடு குறித்து சூழலியலாளர் கோவை சதாசிவத்திடம் பேசினோம்.‘‘ஒலிமாசும் முக்கியமான சூழலியல் சீர்கேடு தான். தொழில்நுட்ப வளர்ச்சி சீர்குலைத்த இயற்கையின் அம்சங்களில் இரைச்சலும் ஒன்று. மனிதர்கள் மற்றும் மிருகங்களுக்கு 92 டெசிபலும், பறவைகளுக்கு 22 டெசிபல் வரையிலும்தான் கேட்கும் திறன் இருக்கிறது. அதற்கும் அதிகமான டெசிபல் அளவுகளை கேட்கும்போதுதான் பல்வேறு விதமான விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.

ஒரு அணுகுண்டு வெடிக்கும்போது 10 ஆயிரம் டெசிபல் ஒலி வெளியாகிறது. கல்குவாரிகளில் வைக்கப்படும் வெடியிலிருந்து 6 ஆயிரம் டெசிபல் ஒலியும் பட்டாசிலிருந்து 300-600 டெசிபல் ஒலியும் வெளியாகிறது. இவை அனைத்துமே சூழலியலுக்கு எதிரானவை. அளவுக்கு அதிகமான ஒலியைக் கேட்கும்போது மனிதனோடு, விலங்குகளும் பறவைகளும் கூட பாதிப்புக்கு உள்ளாகின்றன.

 பட்டாசு வெடிக்கும்போது பறவைகள் பறப்பதற்கும் நாய் குரைப்பதற்கும் இதுவே காரணம். வனப்பகுதிக்குள் அதிக டெசிபல் ஒலி எழுப்பும் வகையிலான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. மான்கள் அதிர்ச்சி தரக்கூடிய பேரிரைச்சலைக் கேட்கும்போது இதயம் வெடித்து இறந்து விடும்.

பேரிரைச்சலைக் குறைப்பதற்காகத்தான் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. பேருந்துகளில் ஏர் ஹாரன் இல்லாமல் ரப்பர் ஹாரன் பயன்படுத்தும்படி சட்டமே இருக்கிறது.

 இவையெல்லாம் நடைமுறையில் இல்லை என்பதுதான் பிரச்னை. ஒலிமாசைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் சமூகத்திலும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அன்றாட வாழ்வில் இரைச்சலைக் குறைப்பதற்காக தங்களால் முடிந்த நடவடிக்கையை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்’’ என்கிறார் சதாசிவம்.

ஒலிமாசைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டோம்...‘‘தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களில் இயங்கும் இயந்திரங்களுக்கு ஒலிமாசு தடுப்பான் பொருத்தும்படி உத்தர விடப்பட்டுள்ளது. தொழிற்சாலை ஆய்வின்போது ஒலிமாசு தடுப்பான்கள் முறையாக வேலை செய்கிறதா எனவும் சோதனை செய்யப்படும்.

 குடியிருப்புப் பகுதிகளில் பகல் நேரங்களில் 55 டெசிபல், இரவு நேரங்களில் 45 டெசிபல், தொழிற்சாலைகளில் 75 டெசிபல், வணிகப்பகுதிகளில் 65 டெசிபல் என ஒலிமாசின் தரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஜெனரேட்டர் மற்றும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும்போதே 80 டெசிபல் அளவுக்குள்ளாகவே ஒலி எழுப்பும் வகையில் தயாரிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. போக்குவரத்து காவலர்களுக்கு அதிக டெசிபல் அளவிலான ஒலி எழுப்பும் ஹாரன்களை நீக்க அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது’’ என்கிறார்கள்.

‘‘மான்கள் அதிர்ச்சி தரக்கூடிய பேரிரைச்சலைக்கேட்கும்போது இதயம் வெடித்து இறந்து விடும்...’’நாளொன்றுக்கு 7 மணி நேரம் என 7 நாளைக்கு தொடர்ந்து பேரிரைச்சலைக் கேட்டோமானால் நிரந்தர கேட்கும் திறன் குறைபாடு வந்து விடும். இந்தக் குறைபாட்டுக்கு தீர்வே கிடையாது!’’

கி.ச.திலீபன்
படம்: ஆர்.கோபால்