ஏ ஸும்பா ஓ ஸும்பா



உடலுக்கும் உள்ளத்துக்கும்!

மேற்கத்திய விஷயங்கள் மீது நமக்கிருக்கும் கவர்ச்சி பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அதில் லேட்டஸ்ட்டாக பலரையும் ஆட வைத்துக் கொண்டிருக்கிறது ஸும்பா. ‘சிம்பிள் பட் ஸ்வீட்’, ‘சீப் அண்ட் பெஸ்ட்’ என்று இரண்டு எதிரெதிர் விஷயங்களை ஒரே பேக்கேஜில் எதிர்பார்க்கும் காலத்தில், அதே ஃபார்முலாவில் பலரையும் ஈர்த்து வருகிறது ஸும்பா. உடற்பயிற்சிகள் செய்கிற அளவுக்குக் கஷ்டப்பட வேண்டியதில்லை... ஆனாலும், கைமேல் பலன் என்பதால் ஸும்பாவுக்கு ரசிகர் எண்ணிக்கை அதிகம்.

சென்னையில் ஸும்பா நடனப்பயிற்சி மையம் நடத்திவரும் காயத்ரியிடம் இதுபற்றிக் கேட்டதும் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்திலிருந்து ஆரம்பித்தார்.‘‘1990களில் உருவானதுதான் ஸும்பா நடனம். கொலம்பியாவை சேர்ந்த ‘ஆல்பர்ட்டோ பீட்டோ பெரஸ்’ என்பவர் ஒரு ஏரோபிக் மாஸ்டர். ஒரு நாள் வகுப்பெடுக்க வந்தபோது ஏரோபிக்ஸ் இசைத்தகடுகளைக் கொண்டு வராமல் மறந்துவிட்டார். லத்தீன் அமெரிக்க பாடல் குறுந்தகடு மட்டும் அவரது காரில் இருந்திருக்கிறது.

அன்றைய வகுப்பை சமாளிப்பதற்காக லத்தீன் அமெரிக்க பாடலை ஒலிக்கவிட்டு ஏரோபிக்ஸில் நடனம் கலந்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். இது சுலபமாகவும் குதூகலமாகவும் இருந்ததால் எல்லோருக்கும் பிடித்து விட்டது. இதனால், உற்சாகமான ஆல்பர்ட்டோ அந்த நடனத்துக்கு ‘ஸும்பா’ என்று பெயர் வைத்து, உடல்நலனுக்கு ஏற்ற வகையில் வடிவமைத்தார். பல தரப்பிலும் வரவேற்பைப் பெற்று, இப்போது ஸும்பா ரொம்பவே பிரபலம்.

ஆண், பெண் - இருபாலருக்கும் ஏற்ற நடனம் இது. குறிப்பாக 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாகக் கற்றுக் கொள்ள வருகிறார்கள். தினசரி ஜிம் சென்று உடற்பயிற்சி செய்கிறவர்கள் அதை விட்டுவிட்டால், சடாரென எடை கூடிவிடும். தினசரி ஜிம்முக்குப் போவதும் போரடிக்கலாம். ஸும்பாவிலோ உடற்பயிற்சி செய்வது போன்ற மெனக்கெடல்கள் இல்லை... ஜாலியாக டான்ஸ் ஆடலாம். பிறருடன் இணைந்து ஆடுவதால் இன்னும் உற்சாகமாக இருக்கும். அதனால், ஆண்கள் ஸும்பாவை விரும்பி கற்றுக் கொள்கிறார்கள்.

ஆண்களைவிட பெண்களுக்கு ஸும்பா இன்னும் வசதியாகவும் பிடித்தமானதாகவும் இருக்கிறது. நளினமான உடல் வேண்டும் என்று பொதுவாகப் பெண்கள் ஆசைப்படுவார்கள். அதற்கு இந்த நடனம் பெரிதும் உதவுகிறது. உடலில் தளர்ந்துபோன தசைகள் இறுக்கமாகி, இளமையாகவும் காட்சியளிக்க உதவுவதால் ஸும்பாவை பெண்களும் விரும்புகிறார்கள்.

உடற்பயிற்சி செய்யும்போது உடலில் கலோரி எரிக்கப்படுவதைப் போல, ஸும்பா ஆடும்போதும் வியர்வை வெளியேறி, 350 கலோரி முதல் 1,050 கலோரி வரை எரிக்க முடியும். இதற்கு ஒரு மணி நேர நடனம் போதுமானது. அதனால்தான், மருத்துவர்களே பரிந்துரைத்தும் அனுப்புகிறார்கள்.

ஆரோக்கியத்துக்கான பயிற்சி என்பதோடு, மனதை மகிழ்விக்கும் கேளிக்கைகளும் இதில் கலந்திருப்பதால் ஸும்பா மன நலனுக்கும் நல்லது. கிட்டத்தட்ட நண்பர்களுடன் பார்ட்டிகளில் டான்ஸ் ஆடினால் எப்படி இருக்குமோ, அதுபோன்ற ஜாலி அனுபவமாகத்தான் மாணவர்கள் உணர்கிறார்கள். தற்கொலை மனப்பான்மையில் இருப்பவர்களின் மன அழுத்தத்தைக் கூட இது மாற்றுகிறது. ஸும்பா கற்றுக் கொண்ட பலர் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

இது ஆரோக்கிய நடனம் என்றாலும், டயட் கட்டுப்பாடுகள் இல்லை. இன்றைய அவசர வாழ்வில் பலரால் டயட்  கடைபிடிக்க முடிவதில்லை. அதனால், வழக்கமாக அவர்கள் சாப்பிடும் ணவுமுறையையே இதற்குத் தகுந்தாற்போல கொஞ்சம் மாற்றி அமைப்போம். இதுவும் ஸும்பா பலருக்குப் பிடிக்கக் காரணமாகிவிட்டது.

ஸும்பாவில் ஹிப் ஹாப், ஜாஸ், சால்ஸா, ஃப்ரீ ஸ்டைல், பாலிவுட், வெஸ்டர்ன், அக்வா ஸும்பா (தண்ணீருக்குள் ஆடும் நடனம்) என 7 நடனங்கள் இருக்கின்றன. ஹிப் ஹாப்பில் மட்டுமே 3 உட்பிரிவு நடனங்கள் உண்டு. தண்ணீருக்குள் ஆடும் ஸும்பா சென்னை நட்சத்திர விடுதிகளில் பிரபலமாகி வருகிறது. தண்ணீருக்குள் நடனம் ஆடுவதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டும் என்பதால் அக்வா ஸும்பாவில் 3 மடங்கு அதிக கலோரி செலவாகும். எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது நல்ல பலனைக் கொடுக்கும்.

ஸும்பா நடனப் பயிற்சிக்குக் கட்டணம் இடத்துக்கு இடம் மாறுபடும். மாதம் 1,500 முதல் 2,500 வரை இருக்கக்கூடும். ஸும்பா கற்றுக் கொள்ள நடனம் ஆடத்தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. 7 வகை நடனங்களைக் கற்றுக் கொடுப்பார்கள் என்பதால், ஸும்பா கற்றுக் கொண்ட பிறகு, தொழில்முறை நடனப் பயிற்சியாளர்களாகக்கூட சிலர் மாறுகிறார்கள். குழந்தைகள் முதல் வயதானவர் வரை யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். கிட்ஸ் ஸும்பா என்ற குழந்தைகளுக்கான நடனமும் இருக்கிறது.

சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் சில மாதங்களுக்கு ஸும்பா ஆடக் கூடாது. இதய நோயாளிகள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், கர்ப்பிணிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்களும் ஸும்பா ஆடக் கூடாது. மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் கற்றுக் கொள்ளக் கூடாது.

‘ஜாலி டான்ஸ்தானே’ என யார் வேண்டுமானாலும் ஸும்பா கற்றுக்கொடுத்துவிட முடியாது. பயிற்சி வகுப்புகளும் நடத்த முடியாது. இது உடல்நலம் சம்பந்தப்பட்டது என்பதால் முறைப்படி ஸும்பா கற்றுக் கொண்டவர்கள்தான் பயிற்சி அளிக்க முடியும். பயிற்சி மையங்களையும் அரசு அனுமதி பெற்ற சான்றிதழுடன்தான் நடத்த முடியும்!’’

தண்ணீருக்குள் நடனம்
ஆடுவதற்கு கொஞ்சம்
மெனக்கெட வேண்டும்
என்பதால் அக்வா ஸும்பாவில்
3 மடங்கு அதிக
கலோரி செலவாகும்.
எடை குறைக்க
முயற்சிப்பவர்களுக்கு
இது நல்ல பலனைக்
கொடுக்கும்...

- ஞானதேசிகன்
படங்கள்: ஆர்.கோபால்