துன்பம் தருதே தூசு!



அலர்ஜி


‘நீயெல்லாம் எனக்கு தூசுடா’ என்று ஆக்ஷன் படங்களில் ஹீரோ பஞ்ச் பேசிக் கேட்டிருப்போம். ஆனால், அந்த தூசுதான் டஸ்ட் அலர்ஜி உள்ளவர்களுக்கு வில்லன். தூசுக்குப் பயந்து மூக்கை மூடும்படி கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு செல்பவர்களை அன்றாடம் பார்க்க நேர்கிறது. இந்த டஸ்ட் அலர்ஜி ஏன் வருகிறது? இதற்கு என்னதான் தீர்வு? விளக்குகிறார் நோய்த்தொற்று மருத்துவர் சுப்ரமணியன்.

‘‘தூசியை எதிர்கொள்ளும்போது இருமல், தும்மல், கண் எரிச்சல், மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற தொந்தரவுகளுக்கு ஆளாவதற்கு பெயர்தான் டஸ்ட் அலர்ஜி. இப்பிரச்னை உள்ளவர்கள் போக்குவரத்து மிகுந்த சாலைகள், கட்டுமானப் பணி நடைபெறும் இடங்கள் மற்றும் அதிக அளவு தூசி வெளியாகும் பணியிடங்களுக்குச் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள்.

டஸ்ட் அலர்ஜி உள்ளவர்களின் முன்னோர் எவருக்கேனும் இந்தப் பிரச்னை இருந்து மரபணுக்கள் வழியாக அது தொடர்ந்திருக்கலாம். பிறப்பிலிருந்தே டஸ்ட் அலர்ஜிக்கான தன்மை உடலில் இருக்கும். அது எந்த வயதில் வேண்டுமானாலும் வெளிப்படலாம்.

இன்றைய சுற்றுச்சூழல் தூசிகள் நிறைந்து காணப்படுவதால் இந்த அலர்ஜி உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்ல வேளையாக, டஸ்ட் அலர்ஜி எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. இருமல், தும்மல், கண் எரிச்சல் போன்றவை வருவதால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும், விடுப்பு எடுக்க நேரிடும்.

வேலை நேர இழப்புதானே தவிர பயப்படும்படி எதுவும் இல்லை. ஆஸ்துமா, இளைப்பு தொந்தரவு உள்ளவர்களுக்கு டஸ்ட் அலர்ஜி இருந்தால், அத்தொந்தரவுகள் அதிகரிக்கக்கூடும்’’ என்கிறவர், டஸ்ட் அலர்ஜிக்கான தீர்வு குறித்துப் பேசினார்.

‘‘டஸ்ட் அலர்ஜியை முழுமையாகத் தீர்க்க முடியாது. ஆனால், கட்டுப்படுத்த மாத்திரைகளும் ஸ்பிரேக்களும் இருக்கின்றன. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் இதற்கான முறையான நடவடிக்கை. முடிந்தவரை தூசி கிளம்பும் இடங்களுக்கு செல்லாமல் இருத்தல் நல்லது.

அதையும் மீறி சென்றே ஆக வேண்டிய கட்டாயம் நேரிடும்போது, கைக்குட்டையால் மூக்கை மூடிக்கொண்டு செல்ல வேண்டும். நம் வசிப்பிடத்தில் தூசி தங்குவதற்கான வாய்ப்புகள் எவற்றில் இருக்கிறதோ, அவற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். உதாரணமாக ஏ.சி. ஃபில்டரில் தூசி தேங்கும்...

அது ஏசிகாற்றோடு வெளியேறி தொந்தரவு ஏற்படுத்தும். வாரம் ஒரு முறை ஏசி ஃபில்டரை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். மெத்தை மற்றும் தலையணைகளில் அதிக அளவு தூசி தேங்க வாய்ப்பிருப்பதால், முறையாக பராமரித்தல் அவசியம்.

முக்கியமான ஒன்று... டஸ்ட் அலர்ஜி உள்ள எல்லோருக்கும் எல்லா தூசியாலும் அலர்ஜி ஏற்படாது. எந்தத் தூசியால் அலர்ஜி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதைத் தவிர்த்து
விடுதல் நல்லது’’ என்கிறார் சுப்ரமணியன்.

டஸ்ட் அலர்ஜியை முழுமையாகத்தீர்க்க முடியாது. ஆனால், கட்டுப்படுத்த மாத்திரைகளும் ஸ்பிரேக்களும் இருக்கின்றன. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் இதற்கான முறையான நடவடிக்கை...

தேவை தூசு கட்டுப்பாட்டு கருவி!


பஞ்சாலைப் பகுதிகளில் பருத்தியிலிருந்து வரும் நெப்த் என்னும் தூசு பெருவாரியாக வெளியாகிறது. இதனால்தான் பஞ்சாலைகள் அதிகம் உள்ள திருப்பூரை ‘தூசு நகரம்’ என்றே சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். பஞ்சாலைகளை சுற்றியுள்ள பகுதிகளில் மர இலைகளில் கூட தூசு படிந்திருப்பதைக் காண முடியும். இந்தத் தூசு ஆஸ்துமாஏற்படுவதற்கு மிக முக்கிய காரணியாகஅமைகிறது. போர்வெல் போடும் இடங்கள், கல்குவாரிகள்,

கிரஷர்களில் இருந்துஅதிகளவில் மண் தூசு வெளியாகிறது, இந்தத் தூசுகள் வளிமண்டலத்தைச் சென்று சேர்ந்து புவிஈர்ப்பு விசை காரணமாகக் கீழே வந்தடைகிறது. இந்தத் தூசுகளை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் மேலைநாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன. மற்ற நாடுகளைக் காட்டிலும் பஞ்சாலைகள் போன்ற தூசு அதிகம் வெளியேறும் தொழிற்சாலைகள் நம் நாட்டில்தான் அதிக அளவில் இருக்கின்றன.

இதுபோன்ற தொழில் மூலம் லாபம் ஈட்ட நினைக்கும் முதலாளிகள், செலவு செய்ய நேரிடும் என்பதற்காக தூசியைக் கட்டுப் படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வாகனங்கள் மற்றும் இயந்திரங்களில் ஒலி மற்றும் புகைத் தடுப்பான்கள் பொருத்துவது போன்று தூசு கட்டுப்பாட்டு கருவியும் பொருத்த வலியுறுத்தப்பட வேண்டும்.

பஞ்சாலைகள், குவாரி மற்றும் கிரஷர் என தூசு அதிகம் வெளியாகும் பகுதியைச் சுற்றிலும் சவுக்கு மரங்களை அதிக அளவில் நட்டு வளர்த்தல் நல்ல ஒரு தீர்வாக அமையும். தேக்கு மரத்தின் இலைகள் தூசுகளை வடிகட்டும் பண்புடையவை.

- கி.ச.திலீபன்