குழந்தைகளுக்கான இதய நோய்கள் ஒரு பார்வை!



பிறக்கும் 100 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இருதயத்தில் பிரச்னை ஏற்படுகிறது, இந்த இதயக் குறைபாடுகள் தாயின் கருவில் இருக்கும்போதே உருவாகலாம் அல்லது பிறந்த பிறகு உருவாகலாம். 
அந்தவகையில், குழந்தைகளுக்கு ஏற்படும் இருதய பிரச்னைகள் என்னென்ன, எதனால் ஏற்படுகிறது. அதற்கு தீர்வு என்ன என்பதை நம்முடன் விளக்கமாக பகிர்ந்து கொள்கிறார் மூத்த குழந்தைகள் இதய நல மருத்துவர் மற்றும் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆர். ஜெபராஜ்.

 பொதுவாக, குழந்தைகளுக்கு ஏற்படும் இதய நோய்களை இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று பிறவி இதய நோய் (Congenital Heart Defects - CHD) என்பது ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே தாயின் வயிற்றில் இருக்கும்போது இதயம் உருவாகும்போதே இதயத்தில் ஏற்படும் கட்டமைப்பு குறைபாடுகளைக் குறிக்கிறது. 
இது இதயத்தின் வால்வுகள், சுவர்கள் அல்லது நாளங்களைப் பாதிக்கலாம்; இதன் அறிகுறிகளில் மூச்சுத் திணறல், சோர்வு, நீல நிற தோல் மற்றும் விரைவான சுவாசம் ஆகியவை அடங்கும், இதற்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் தேவைப்படலாம். 

அடுத்ததாக, அக்யூர்ட் இதய நோய் இது ஹார்ட் அட்டாக் போன்ற இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவது. இந்த இதய நோய் குழந்தை பிறந்த பிறகு கொஞ்சம் வளர்ந்த பிறகு வருவதாகும். உலகளவில், பிறக்கும் 100 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த நிலை ஏற்படுகிறது, இது பொதுவான பிறப்புக் கோளாறுகளில் ஒன்றாகும். 

 பொதுவாக இதயம் சிக்கலான வலைகளால் பின்னப்பட்ட வடிவமாகும். ஒரு தாயின் வயிற்றில் குழந்தை உருவாகும்போது, இதயம் ஒரு சின்ன டியூப் போன்று இருக்கும். பின்னர், சிறிது சிறிதாக வளைந்து நெளிந்து வளர்ந்து கருவுற்ற ஆறு வாரங்களில் முழுமையான வடிவமாக இதயம் உருவாகிவிடும். அதன்பிறகு குழந்தை வளர வளர இதயத்தின் அளவுதான் வளருமே தவிர வடிவத்தில் மாற்றம் ஏற்படாது. 

 இதில் பிறவி இதய நோய் (Congenital Heart Defects - CHD) என்பது முன்பு சொன்னது போன்று, ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போதே பிறக்கும் முன்பே உருவாகும் பிரச்னையாகும். இந்த பிரச்னை குழந்தை பிறந்த பிறகுதான் வெளியே தெரியும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இந்த பிரச்னை குழந்தை பிறந்த அந்த நாளிலேயே தெரியலாம் அல்லது சில மாதங்களில் தெரியலாம் அல்லது சில வருடங்களில் தெரியலாம் அல்லது சிலருக்கு வாழும் வரை தெரியாமலேயே கூட போகலாம். 

உதாரணமாக, இதயத்தில் ஓட்டையோ அல்லது அடைப்போ இருந்து தெரிய வருவது அல்லது வயதாகும் வரை அது தெரியாமலேயே கூட போவது. இப்படி 60- 70 வயது வரை வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். 

இதயத்தில் ஏற்பட்ட ஓட்டை எங்கு இருக்கிறது. அது எவ்வளவு பெரிதாக இருக்கிறது. அதனுடன் சேர்ந்து வேறு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதை பொருத்துதான் அந்த நோய் ஒருவருக்கு இருப்பதே தெரியும். 

அதுவும் எப்போது தெரியும் எந்த வயதில் தெரியும் என்பதும் யாருக்கும் தெரியாது. பிறவி இதய நோய்க்கான காரணங்கள் என்றால், இதுதான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்தப் பிரச்னைகள் ஏன் வருகிறது என்பதை இன்னும் கண்டறியவும் முடியவில்லை. ஏனென்றால் இது பலவிதமான பிரச்னைகளை உள்ளடக்கியுள்ளது. 

உதாரணமாக டவுன் சிண்ட்ரோம் பிரச்னை இருப்பவர்களுக்கு அதன் வளர்ச்சியில் ஒருவிதமான இதயப் பிரச்னை வரும். டையாட் சிண்ட்ரோம், டர்னர் சிண்ட்ரோம், லூனர் சிண்ட்ரோம் இது போன்ற பிரச்னைகள் மரபணுவினால் ஏற்படுவதாகும். 

அதாவது, பெற்றோருக்கோ, இவர்களுக்கு முன்பு பிறந்த உடன் பிறந்தவர்களுக்கோ இதயப் பிரச்னை இருந்தால், அதனாலும் ஏற்படலாம். இதுவும் ஆயிரத்தில் ஒருவருக்கோ இருவருக்கோ ஏற்படலாம். அதனால், இதுதான் முக்கிய காரணம் என்றும் சொல்ல முடியாது. இந்த சிண்ட்ரோம்கள் எல்லாமே ஒவ்வொரு வகையான இதய நோயை உருவாக்கும். 

உதாரணமாக இதயத்தில் துளைகள் (holes), வால்வுகளில் அடைப்புகள் அல்லது குறைபாடுகள், ரத்த நாளங்களில் பிரச்னைகள் போன்ற பல்வேறு வடிவங்களில் இருக்கலாம். பொதுவான குறைபாடுகள் என்றால் இடது இதய அடைப்பு (hypoplastic left heart syndrome), பெருநாடி குறுக்கம் (coarctation of the aorta) போன்றவற்றை ஏற்படுத்தலாம். 

அதனால் 99 சதவீதம் இதனால்தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டது என்று காரணங்கள் சொல்ல முடியாது. சில குழந்தைகளுக்கு பிறப்பதற்கு முன்பே ஸ்கேன்கள் மூலம் கண்டு பிடித்துவிடலாம். அதுவும் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் எடுக்கப்படும் ஸ்கேனில் கண்டறியலாம்.

அறிகுறிகள்

*விரைவான சுவாசம்.
*தோல் நீல நிறமாக மாறுதல் (cyanosis). அதிலும் சில குழந்தைக்கு தோல் நீல நிறமாக மாறும். சில குழந்தைக்கு பிங்க் நிறமாகவும் மாறலாம்.
*சிலருக்கு யாராவது உடலை தொட்டாலே உடலில் அதிர்வு ஏற்படுவது. 
*சோர்வு, குறைந்த உழைப்பிற்குப் பிறகு சோர்வடைதல்.
*உடல் எடை குறைதல்.
*ஒழுங்கற்ற அல்லது விரைவான இதயத் துடிப்பு (palpitations). 

சிகிச்சை முறைகள்

மருந்துகள்: சில நேரங்களில் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.இதய வடிகுழாய் (Catheterization): சிறிய கருவிகளைப் பயன்படுத்தி இதயத்தில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்தல்.அறுவைசிகிச்சை (Surgery): மிகவும் சிக்கலான குறைபாடுகளுக்குத் திறந்த இதய அறுவைசிகிச்சை தேவைப்படலாம். அந்த வகையில் 95 சதவீத பிரச்னைகளுக்கு தீர்வு இருக்கிறது. 5 சதவீத பிரச்னைக்கு தீர்வு இன்னும் கண்டறியபடவில்லை. 

இதுமாதிரி சில பிரச்னைகளோடு உருவாகும் குழந்தைகள்தான் 4-5 மாதங்களில் தன்னாலேயே கருவிலேயே கலைந்துவிடும். அந்த குழந்தைக்கு கருவிலேயே நிறைய பிரச்னைகள் இருந்தால்தான் அது கலையும் வாய்ப்பு அதிகம். 

ஆனால், சிலர் கரு கலைந்தால், கருவுற்ற தாய் எதையோ சாப்பிட்டு விட்டார் அல்லது அதிர்ந்து வேலை செய்தார் அல்லது நடந்து சென்றார் இதனால்தான் கரு கலைந்தது என்று நினைக்கிறார்கள். அது தவறு, 50-60 சதவீதம் குழந்தையால் உயிர் வாழ முடியாமல் போகும்போதுதான் கரு கலைகிறது. 

 ஒருவேளை குழந்தை பிறந்த பிறகு இதயத்தில் பிரச்னை இருப்பது தெரியவந்தால், அந்த பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து பிறந்த சில மணி நேரங்களில் இதயத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம் அல்லது ஓரிரு வாரங்கள் கழித்து தேவைப்படலாம். 

அல்லது 3-4 வயதில் தேவைப்படலாம். அல்லது 15 - 20 வயதில் தெரிய வரலாம் அல்லது தெரியாமலேயே கூட போகலாம். எந்த வயதில் தெரிய வருகிறதோ அப்போது அதன் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும்.

 பொதுவாக இதய பிரச்னைகளுக்கான அறுவை சிகிச்சைகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செய்யப்படுகிறது. அதிலும் நவீன சிகிச்சை முறைகள் வந்த பிறகு, 90 காலகட்டங்களில் இருந்து பச்சிளம் குழந்தைகளுக்கும் இதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவும் காலங்கள் செல்ல செல்ல இன்னும் நவீன கண்டுபிடிப்புகள் வந்துக் கொண்டேதான் இருக்கும் சிகிச்சை முறைகள் வளர்ச்சி அடைந்து கொண்டேதான் இருக்கும். 

இந்தவகையில் சிகிச்சை அளிக்கப்படும் குழந்தைகளுக்கு பின்னாளில் பெரிதாக எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை. பெண் குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் சிலருக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அந்தசமயத்தில் அவர்களை இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி கவனித்துக் கொள்ள வேண்டும். 

அரிய வகை இதயநோய்கள்

இதயத்தில் ஏற்படும் அரிய வகை நோய்கள் என்றால், இதயப் பிரச்னைக்காக பேஸ் மேக்கர் வைக்கப்படுவது. நானே பிறந்த மூன்றாவது நாளில் ஒரு குழந்தைக்கு பேஸ் மேக்கர் பொருத்தியுள்ளேன். 

பொதுவாக ஆறு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் என்றால், பேஸ் மேக்கர் இருதயத்திற்குள் வைக்கலாம். அப்படி வைப்பது குறைவான மின் அளவை பயன்படுத்தும். அதனால், அதில் இருக்கும் பேட்டரி நீண்ட நாட்கள் சுமார் 11 ஆண்டுகள் வரை தாங்கும். 

அதுவே, மிகச் சிறிய குழந்தை என்றால், இருதயத்திற்கு வெளியேதான் பேஸ் மேக்கரை வைக்க முடியும். அதனால், அதற்கு அதிகளவு அளவு மின் அளவு தேவைப்படும். இதனால், பேட்டரி 5-6 ஆண்டுகளுக்குள்ளாக முடிந்துவிடும். 

அப்போது மீண்டும் பேஸ் மேக்கர் பொருத்தும்படி இருக்கும். இது அவர்கள் வாழ்நாள் வரை வைத்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். இன்றைய சூழ்நிலைக்கு பேஸ் மேக்கரை பொருத்தவரை இதுதான் சிகிச்சை முறை. இதுகுறித்து யாராவது புதிதாக கண்டுபிடித்தால் மாற்றம் வரலாம். 

அக்யூர்ட் இருதய நோய், இதில் மூன்று வகைகள் உள்ளன. 1. ரூமாய்டிக் காய்ச்சல், 2. கவாசக்கி இருதய நோய்- இதில் தான் குழந்தைக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 3. மயோகார்டியல் டிசீஸ் - இது இருதயத்தை தாக்கக் கூடிய வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் இருதய பிரச்னைகள் ஆகும். 

இதில் தான் அரித்மியா பிரச்னைகளும் அடங்கும்.  குழந்தைகளுக்கு இன்னும் அரிதான இதயநோய் என்றால் ஹைபர் கொலஸ்ட்டிரால் அனீமியா. இது உடலில் உள்ள என்சைம்களால் ஏற்படும் இருதய பிரச்னையாகும். 

 தற்காப்பு முறைகள்

ஒரு பெண் 30 வயதிற்கு மேல் கருவுற்றால் குழந்தைக்கு பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் முடிந்த வரை 28 வயதிற்குள் பெண்கள் திருமணம் செய்து கொள்வது நல்லது.
பெண்களுக்கு புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதை திருமணத்திற்கு முன்பே நிறுத்தி விட வேண்டும்.சர்க்கரை நோய் இருந்தால் அதை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். 

அநாவசியமாக மருத்துவர் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரைகளும் எடுத்துக் கொள்ளக் கூடாது. தாய்க்கு வைரஸ் தொற்றுகள் இருந்தால் அதன் மூலம் குழந்தைக்கு இதய பிரச்னை வரலாம். இவற்றை எல்லாம் சரி செய்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் இதய பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

- ஸ்ரீதேவி குமரேசன்