உணவு ஒவ்வாமை… உஷார் ரிப்போர்ட்!



அலர்ஜி அெலர்ட்

இன்றைய சுகாதாரச் சூழலில் “உணவு ஒவ்வாமை” (Food Allergy) என்பது அதிக கவனத்தைப் பெற்றுள்ள, ஆனால் இன்னும் பலரால் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு சிக்கலான சுகாதாரப் பிரச்சினையாகும். உணவுக்குப் பின் உடலில் ஏற்படும் சீரற்ற மற்றும் தீவிரமான எதிர்வினைகள் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக (Anaphylaxis) மாறக்கூடும். 
ஆகவே, இதன் மூலக்காரணம், அறிகுறிகள், கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை உத்திகள் பற்றி சுகாதார நிபுணர்களும் பொதுமக்களும் தெளிவாகத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானதாகும்.

உணவு ஒவ்வாமை என்றால் என்ன?

உணவு ஒவ்வாமை என்பது - நம் உடல் எதிர்ப்பு அமைப்பு (Immune System), குறிப்பிட்ட உணவுப் பொருளில் உள்ள ஒரு புரதத்தைத் தவறாக “ஆபத்தானது” எனக் கருதி, அதற்கு எதிராகச் செயல்படும்போது ஏற்படும் ஓர் உடல் எதிர்வினையாகும்.

இந்த ஒவ்வாமை பெரும்பாலும் இம்யூனோகுளோபுலின்-இ (Immunoglobulin-E அல்லது IgE) என்ற ஒரு குறிப்பிட்ட எதிர்வினை ஊக்கி (Antibody) காரணமாக நிகழ்கிறது. உதாரணமாக, வேர்க்கடலை, பால் அல்லது முட்டையில் உள்ள சில புரதங்கள் மீது உடல் எதிர்ப்பு ஏற்படுவது. இது ஒருமுறை ஆரம்பித்தால், அந்த உணவுப் பொருளை மீண்டும் மீண்டும் உட்கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஒவ்வாமை எதிர்வினை நிகழும்.

பொதுவான உணவு ஒவ்வாமை காரணிகள் (Allergens)-
உணவு ஒவ்வாமைக்கு அதிக அளவில் தூண்டுதலாக அமையக்கூடிய பொதுவான காரணிகள்

*வேர்க்கடலை மற்றும் நட்ஸ் வகைகள்: (பாதாம், வால்நட் போன்றவை) - மிகவும் பொதுவான, பெரும்பாலும் கடுமையான ஒவ்வாமை விளைவிப்பவை.

*முட்டை அலர்ஜி: குறிப்பாகக் குழந்தைகளில் அதிகமாகக் காணப்படும்.

*பால் மற்றும் பால் பொருட்கள்: சிறுவயதில் அதிகம் கண்டறியப்பட்டாலும், சிலருக்கு  அதிக வயது வரை தொடரலாம்.

*கடல் உணவுகள்: இறால், நண்டு, களமீன் (Shellfish) போன்றவை.

*கோதுமை: சிலருக்கு குளூட்டன் (Gluten) மீது எதிர்வினை ஏற்படும்.

*சோயா: குழந்தைகளில் காணப்படும் மற்றொரு பொதுவான ஒவ்வாமை.

அறிகுறிகளின் வகைகள்

உணவு ஒவ்வாமையின் அறிகுறிகள் மிக வித்தியாசமாக இருக்கலாம். சிலருக்குச் சிறிய அளவில் மட்டுமே பாதிப்பு இருக்கும்; சிலருக்கு உயிருக்கு 
ஆபத்தாகக்கூட மாறும்.

மிதமான அறிகுறிகள்

*வாய், நாக்கு அல்லது உதடுகளில் அரிப்பு (Itching) அல்லது கூச்ச உணர்வு.
*தோலில் சிரங்கு (Hives) அல்லது சிவந்த தடிப்புகள்.
*வயிற்று வலி, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு.
*மூக்கடைப்பு அல்லது தும்மல்.

கடுமையான அறிகுறிகள் (Anaphylaxis)

இது ஒரு தீவிரமான, உயிருக்கு ஆபத்தான நிலை. இது ஏற்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ உதவி (Emergency Hospital Medical Care) தேவைப்படும்.

*மூச்சு விட சிரமம், மூச்சிரைப்பு (Wheezing).
*தொண்டை வீக்கம் அல்லது இறுக்க உணர்வு (Airway swelling).
*திடீர் மற்றும் தீவிர ரத்த அழுத்தக் குறைவு (Hypotension).
*மயக்கம் அல்லது உணர்வு இழப்பு.

உணவு ஒவ்வாமைக்கும் உணவு ஏற்காமைக்கும் உள்ள வேறுபாடு (Allergy vs Intolerance):-

​உணவு ஒவ்வாமை மற்றும் உணவு பொறாமை ஆகிய இரண்டையும் பலர் குழப்பிக்கொள்கிறார்கள். ஆனால் இவை அடிப்படையில் வேறுபட்டவை. உணவு ஒவ்வாமை (Food Allergy) என்பது ஒரு குறிப்பிட்ட உணவுப் பொருளில் உள்ள புரதத்தை உடல் எதிர்ப்பு அமைப்பு (Immune System) தவறாக அடையாளம் கண்டு, அதற்கு எதிராகச் செயல்படும் நேரடி எதிர்வினையாகும். 

இது பெரும்பாலும் IgE எனப்படும் எதிர்வினை ஊக்கிகளால் தூண்டப்படுகிறது. இந்த நிலையில் தோல் தடிப்புகள், சுவாசம் மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதுடன், உயிருக்கு ஆபத்தான நிலை (Anaphylaxis) ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. 

இதற்கு மாறாக, உணவு ஏற்காமை (Food Intolerance) என்பது உடல், குறிப்பிட்ட உணவைச் செரிமானம் செய்யத் தேவையான என்சைம்கள் (Enzymes) குறைவாக இருப்பதாலோ அல்லது செரிமானக் கோளாறுகளாலோ ஏற்படும் பிரச்னையாகும். 

இது செரிமான மண்டலத்தில் மட்டுமே வெளிப்படுகிறது (உதாரணமாக, லாக்டோஸ் இன்டாலரன்ஸில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு). உணவு ஏற்காமையால் பொதுவாக உயிருக்கு ஆபத்து ஏற்படுவதில்லை. சுருக்கமாக, ஒவ்வாமை என்பது உடல் எதிர்ப்பு அமைப்பின் தவறு, ஏற்காமை என்பது செரிமான மண்டலத்தின் பிரச்னை.

பரிசோதனை மற்றும் கண்டறிதல் உத்திகள்

ஒரு நபருக்கு உணவு ஒவ்வாமை இருக்கிறதா என்பதை உறுதியாகக் கண்டறியப் பின்வரும் பரிசோதனைகள் உதவுகின்றன:

*தோல் குத்தும் பரிசோதனை (Skin Prick Test - SPT): குறைந்த அளவு உணவுப் புரதத்தைத் தோலில் சுரண்டிவிட்டு, அதில் சிவப்பு அல்லது வீக்கம் ஏற்படுகிறதா எனப் பார்க்கப்படுகிறது.

*இரத்தப் பரிசோதனை (IgE Levels): குறிப்பிட்ட உணவுக்கு எதிரான IgE (Specific IgE) அளவுகளை இரத்தத்தில் மதிப்பீடு செய்யும்.

*நீக்குதல் உணவு முறை (Elimination Diet): சந்தேகப்படும் உணவுகளை ஒரு சில வாரங்கள் தவிர்த்து, பின்னர் மருத்துவக் கண்காணிப்பில் மெதுவாகச் சேர்த்துப் பார்க்கும் முறை. 

(இவை அனைத்துப் பரிசோதனைகளும் மருத்துவ நிபுணர் ஆலோசனையுடன் மட்டுமே செய்யப்பட வேண்டும்.)

சிகிச்சை முறைகள்

தற்போது உணவு ஒவ்வாமைக்கு முழுமையான நிரந்தரச் சிகிச்சை (Cure) இல்லை. ஆனால் இதை வெற்றிகரமாகக் உரிய மருத்துவர் ஆலோசனையுடன் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

*முக்கியமான சிகிச்சை: ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப் பொருளை முற்றிலும் தவிர்த்தல் (Strict Avoidance).

*அவசர சிகிச்சை(மருத்துவர் ஆலோசனையுடன்): கடுமையான ஒவ்வாமை (Anaphylaxis) உள்ளவர்களுக்கு எபிநெஃப்ரின் தானியங்கி ஊசி (Epinephrine Auto-injector - EpiPen) வைத்திருப்பது அவசியம். இது உயிரைக் காப்பாற்றும் முதல் நிலை நடவடிக்கையாகும்.

*மிகக் குறைந்த அளவு உணவை எடுத்துக்கொண்டால் கூட எதிர்வினை ஏற்பட வாய்ப்புள்ளதால், உணவுப் பொருளின் லேபிள்களைப் படித்தல், உணவகங்களில் முன்கூட்டியே தெரிவிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக முக்கியம்.

புதிய சிகிச்சை முயற்சிகள்

சமீப காலங்களில், “வாய்வழி நோய் எதிர்ப்பு சக்தி சிகிச்சை (Oral Immunotherapy - OIT)” என்ற புதிய முயற்சி சோதனை நிலையில் உள்ளது. இதில், மிகக் குறைந்த அளவில் ஒவ்வாமை உணவை மெதுவாக அளித்து, உடல் அதை ஏற்கப் பழகும் வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சை ஒரு மருத்துவ நிபுணரின் தீவிரக் கண்காணிப்பில் மட்டுமே செய்யப்படும் ஒரு நடைமுறையாகும்.

முடிவுரை மற்றும் விழிப்புணர்வு

உணவு ஒவ்வாமை என்பது ஒரு சாதாரண செரிமானப் பிரச்சினை அல்ல - அது உடல் எதிர்ப்பு அமைப்பின் தவறான செயல்பாடாகும். இது குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை யாருக்கும் ஏற்படலாம்.

மருத்துவ ரீதியாகச் சரியான பரிசோதனை, தகுந்த ஆலோசனை, உணவைத் தவிர்ப்பதில் விழிப்புணர்வு, மற்றும் அவசர நிலைக்கான முன்னெச்சரிக்கை பற்றிய அறிவு - இவையே உணவு ஒவ்வாமையால் ஏற்படும் உயிராபத்துகளைத் தடுக்கின்ற முக்கியக் கருவிகளாகும்.

பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல்