மார்பகப் புற்றுநோய்
விழிப்புணர்வே அவசியம்!
இன்றைய காலகட்டத்தில் பெண்களில் அதிகம் காணப்படும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோயாகும். இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். நகர்ப்புறங்களில் வாழும் ஒவ்வொரு 22 பெண்களிலும் ஒருவருக்கு வாழ்க்கையில் ஏதாவது கட்டத்தில் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தடுக்கவும், ஆரம்பத்திலேயே கண்டறியவும் செய்வதே உயிர்களை காப்பதற்கான முக்கியக் குறிக்கோளாகும் என்கிறார் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் மாதுரி சுதாகர். மார்பக புற்றுநோய் தடுப்புமுறை குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை: அதிகரித்து வரும் நோய்த்தொற்று
முந்தைய காலங்களில் மார்பக புற்றுநோய் பெரும்பாலும் வயதான பெண்களிடம் மட்டுமே காணப்பட்டாலும், தற்போது 30 மற்றும் 40 வயதிலுள்ள இளம் பெண்களிடமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திருமணம் தாமதமாகும் நிலை, குழந்தை பிறப்பை தள்ளிப்போடுதல், பாலூட்டும் காலம் குறைதல், உடல் இயக்கம் குறைதல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
 மற்றொருபுறம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை வசதிகள் அதிகரித்துள்ளதால், இன்று பல நோயாளிகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகின்றனர். இதன் மூலம் குணமடையும் வாய்ப்பும் மிக அதிகரித்துள்ளது.
அபாயக் காரணிகள்
மார்பகப் புற்றுநோய் உருவாகப் பல காரணிகள் செயல்படுகின்றன. குடும்ப வரலாற்றில் (அம்மா, சகோதரி) மார்பக அல்லது முட்டை உறுப்பு புற்றுநோய் இருந்தால் அபாயம் அதிகம். BRCA1 மற்றும் BRCA2 மரபணு மாற்றங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதே சமயம், பெரும்பாலான நோயாளிகளில் குடும்ப வரலாறு இருக்காது. உடல் பருமன், உடற்பயிற்சி குறைதல், அதிக கொழுப்பு உணவு, மதுபானம், புகைப்பிடித்தல் போன்ற வாழ்க்கை முறைகளும் ஆபத்தைக் கூட்டுகின்றன.
மேலும், மாதவிடாய் விரைவில் தொடங்குதல், வயதான பிறகே நிறுத்தம் அடைதல், குழந்தை பிறப்பை தாமதப்படுத்துதல், ஹார்மோன் மாத்திரைகள் உட்கொள்வது போன்றவை அபாயத்தை அதிகரிக்கின்றன. மாறாக, குழந்தைக்கு பாலூட்டுதல், சீரான உடல் எடை பராமரித்தல், தினசரி உடற்பயிற்சி, பழம் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவு ஆகியவை பாதுகாப்பை அளிக்கின்றன.
ஆரம்ப நிலையில் கண்டறிதல் - உயிர் காப்பு
மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் 90 சதவீதம் வரை முழுமையாக குணப்படுத்த முடியும். ஆனால் பயம் மற்றும் அறியாமை காரணமாக பலர் தாமதமாக மருத்துவமனைக்கு வருகிறார்கள். மூன்று முக்கியமான பரிசோதனைகள் விழிப்புணர்வுக்காக பரிந்துரைக்கப்படுகின்றன:
1.சுய பரிசோதனை (Breast Self-Examination): 20 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மாதம் ஒருமுறை தாமே மார்பகத்தை பரிசோதிக்க வேண்டும். கட்டி, சுரப்பு, தோல் மாற்றம் போன்றவை தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.
2.மருத்துவர் பரிசோதனை (Clinical Breast Examination): 30 வயதுக்கு மேற்பட்டோர் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளலாம்.
3.மேமோகிராபி (Mammogram): 40-70 வயதுக்குள் உள்ள பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேமோகிராபி பரிசோதனை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
விசாரணைகள் மற்றும் நிலை வகை
மார்பகத்தில் சந்தேகமான கட்டி கண்டறியப்பட்டால், அல்ட்ராசவுண்ட், மாமோ கிராபி, MRI போன்ற பரிசோதனைகள் செய்யப்படும். அதன்பின், FNAC அல்லது Core Needle Biopsy மூலம் திசு மாதிரி எடுத்து புற்றுநோயை உறுதிசெய்வார்கள்.
நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய Chest X-ray, Ultrasound Abdomen, Bone Scan அல்லது PET-CT போன்ற பரிசோதனைகள் செய்யப்படும். இது சிகிச்சைத் திட்டத்தைத் தீர்மானிக்க உதவுகிறது.
சிகிச்சை முறைகள்
இன்றைய மருத்துவத்தில் மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை பல துறை நிபுணர்கள் இணைந்து செய்யும் Multidisciplinary Approach ஆகும். அறுவை சிகிச்சை (Surgery): ஆரம்பநிலையில் இருந்தால் மார்பகத்தைப் பாதுகாத்தபடியே கட்டியை அகற்றும் Breast Conservation Surgery செய்யலாம்.
பெரிய கட்டி அல்லது பரவல் இருந்தால் Modified Radical Mastectomy அவசியமாகும். தற்போது மறுவடிவமைப்பு (Reconstruction) சிகிச்சைகள் மனநலத்தையும் அழகிய தோற்றத்தையும் காக்க உதவுகின்றன. கதிர்வீச்சு சிகிச்சை (Radiation Therapy): அறுவைசிகிச்சைக்கு பின் மீதமுள்ள செல்களை அழிக்கப் பயன்படுகிறது.
மருந்து சிகிச்சை (Chemotherapy): கட்டியைச் சுருக்கவும், மீண்டும் வராமல் தடுக்கவும் பயன்படுகிறது. ஹார்மோன் சிகிச்சை (Hormonal Therapy): ஹார்மோன் ரிசெப்டர் பாசிட்டிவ் நோயாளிகளில் Tamoxifen அல்லது Aromatase Inhibitors கொடுக்கப்படுகின்றன.
டார்கெட்டட் சிகிச்சை (Targeted Therapy): Trastuzumab போன்ற மருந்துகள் HER2 பாசிட்டிவ் நோயாளிகளில் சிறந்த விளைவுகளை அளிக்கின்றன. இம்யூனோ சிகிச்சை (Immunotherapy): புதிய ஆராய்ச்சிகள் மூலம் உடல் பாதுகாப்பு அமைப்பே புற்றுநோயை எதிர்கொள்வதற்கான வழிகளை உருவாக்குகின்றன. முன்னேற்றம் நோக்கி
மார்பகப் புற்றுநோய் இப்போது ஒரு மரண தண்டனை அல்ல. விழிப்புணர்வு, ஆரம்ப பரிசோதனை மற்றும் தாமதமில்லா சிகிச்சை மூலம் பெரும்பாலான பெண்கள் முழுமையாக குணமடைகின்றனர். எல்லா பெண்களும் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றுதான்- “ஆரம்பத்தில் கண்டால் உயிர் காக்கலாம்!” என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
- தவநிதி
|