கல்லீரல் வீக்கம் தீர்வு என்ன?
நமது உடலில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் ஒன்று கல்லீரல். மனித உடலில் மிகப் பெரிய உறுப்பும் கல்லீரல்தான். கல்லீரலுக்கு வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் ஆற்றல் கொண்டது. மேலும், ஜீரணத்தில் உதவி, உடற்கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்குவது, ஹார்மோன்களை சீர் செய்வது போன்ற பணிகளையும் கல்லீரலே செய்கிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கல்லீரலை பாதிக்கக்கூடிய நோய் என்றால் அது லிவர் சிரோசிஸ் எனும் கல்லீரல் வீக்கம். இதுகுறித்து மருத்துவர் தினேஷ் ஜோதிமணி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:  கல்லீரல் வீக்கம் என்பது என்ன? கல்லீரலில் தேவையற்ற ஏதாவது ஒன்று சேரும்போது உதாரணமாக, கொழுப்பு அதிக அளவில் சேர்வது, அதிகளவில் மது அருந்துவது, க்ரோனிக் வைரல் என்று சொல்லப்படும் ஹெபடைடீஸ் பி, ஹெபடைடீஸ் தொற்று போன்றவை ஏற்படும்போது கல்லீரல் பெரிதாக விரிவடைகிறது. இதைத்தான் கல்லீரல் வீக்கம் என்கிறோம். ஆனால், இந்த கல்லீரல் வீக்கம் என்பது ஓரிரு நாளில் நடைபெறுவது அல்ல.
கல்லீரலில் பல நாட்களாக பிரச்னைகள் இருந்து வந்து ஒருகட்டத்தில் இது அதிகப்படியாகி, கல்லீரல் சுருங்க ஆரம்பித்துவிடும். இந்த நிலையைத்தான் லீவர் சிரோசிஸ் என்கிறோம். கல்லீரல் சுருங்குவது எப்போது நடக்கும் என்றால் கல்லீரலில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறக்க ஆரம்பிக்கும்போது ஸ்கார் டிஷ்யூ, எனும் பைரோஸஸ் உருவாக ஆரம்பிக்கும். அந்த பைரோஸஸ் தான் கல்லீரலை சுருக்க ஆரம்பிக்கும்.
கல்லீரல் ரொம்ப அழகான உறுப்பு. அது தன்னைதானே புதுப்பித்து வளர்த்துக் கொள்ளும் தன்மை உடையது. அதனால்தான் கல்லீரல் தனக்கு ஏற்படும் பாதிப்புகளை தாங்கிக் கொண்டு தானே சரிசெய்து புதுப்பித்துக் கொள்ளும். அதேசமயம் அது தாங்கிக் கொள்ளும் அளவையும் தாண்டிப் போகும்போதுதான் கல்லீரல் வீக்கம் அடைந்து பெரிதளவு பாதிக்கப்படுகிறது.
இந்தநிலையில்தான் கல்லீரலில் பைரோஸ் உருவாக ஆரம்பிக்கும். மற்றொருபுறம் கல்லீரல் வளர முயற்சிக்கும். இதனால், கல்லீரலில் உள்ள மென்மைத் தன்மை கெட்டு அங்கங்கே கட்டிகள் போல் ஆகிவிடும் இதைத்தான்லீவர் சிரோஸிஸ் என்கிறோம். பொதுவாக, கல்லீரல் வீக்கம் ஏற்படுவதற்கு பல ஆண்டுகளாகும். நோய் முற்றும் வரை அறிகுறிகள் எதுவும் தெரியாது.
கல்லீரல் வீக்கம் எதனால் ஏற்படுகிறது?
கல்லீரல் வீக்கம் பல காரணங்களால் ஏற்படுகிறது. முதலாவது காரணம், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதாலும் கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து கல்லீரல் வீக்கம் அடைகிறது. பொதுவாக உடலில் ஏற்படும் கொழுப்பை கட்டுப்படுத்துவது கல்லீரல்தான். அப்படியிருக்க கல்லீரலிலேயே கொழுப்பு சேரும்போது பிரச்னையாகிறது. இந்த வகை கொழுப்பு உடலில் அதிகளவில் கார்போஹைட்ரேட் சேரும்போது அது கல்லீரலில் கொழுப்பாக மாறிவிடுகிறது.
இது நாள்பட நாள்பட சேரும்போது ஒரு கட்டத்தில் வீக்கம் ஆகிறது. இந்த நிலையை ஃபேட்டி லிவர் என்றும் கூறுகிறோம். சர்க்கரை நோய் இருப்பவர்கள், உடல் பருமனாக இருப்பவர்களை இந்த ஃபேட்டி லிவர் அதிகளவில் பாதிக்க வாய்ப்புண்டு.
அதுபோல், அதிகளவில் மது அருந்திக் கொண்டே இருப்பதும் கல்லீரல் வீக்கம் அடைய ஒரு காரணமாகும். கல்லீரலில் பாதிப்பு இருப்பது தெரிந்தால் உடனடியாக மது அருந்துவதை நிறுத்திவிட வேண்டும். அப்படி நிறுத்தி விட்டால், கல்லீரல் மீண்டும் தன்னை புதுப்பிக்க தொடங்கிவிடும். இதனால், கல்லீரலில் பிரச்னைகள் குறைந்து நார்மலாகிவிடும். அப்படியில்லாமல் மேலும் மேலும் மது அருந்திக் கொண்டே இருந்தால் கல்லீரல் அதிகளவு பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் கல்லீரல் செயலிழந்து உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
அடுத்த காரணம், வைரல் ஹெபடைடிஸ். ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி பொதுவாக கல்லீரலை பாதிக்கக்கூடியது. ஹெபடைடிஸ் பி என்பது ரத்தத்தில் வரக்கூடிய வைரஸ் தொற்று. இது சிறு வயது முதலே கூட இருந்து வரலாம். இது இருப்பதே தெரியாது. வளர்ந்த பின்புதான் நமக்கு தெரியவரும்.
அதற்குள் கல்லீரல் வீங்க தொடங்கிவிடும். ஹெபடைடிஸ் சி வைரஸ். இதுவும் ரத்தத்தில் வரக் கூடியதுதான். பிளட் டிரான்ஸ்யூஷன் செய்யும்போது சில நேரம் ஸ்கீரினிங் செய்யாமல் இருந்தால் அதனால் வரும். இதுவும் இருப்பதற்கான அறிகுறிகள் எளிதில் தெரியாது. அதாவது வேறு ஏதாவது நோய்க்காக ஸ்கேன் போன்ற டெஸ்ட் எடுக்கும்போதுதான் இது இருப்பதே தெரியவரும். இந்த ஹெபடைடிஸ் பி மற்றும் சி இரண்டுமே லிவர் ஃபெயிலியர், லிவர் கேன்சரை உருவாக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் இந்த ஹெபடைடிஸ் வைரஸை முற்றிலுமாக குணப்படுத்தக் கூடிய நவீன சிகிச்சை முறைகள் தற்போது நிறையவே வந்துவிட்டது. அவற்றை முறையாக எடுத்துக் கொண்டால், லிவர் ஃபெயிலியர், லிவர் கேன்சர் போன்றவை வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
இதைத்தவிர, கல்லீரல் வீக்கத்துக்கான மற்ற காரணங்களாக பார்த்தால், வழிவழியாக வரும் பரம்பரை நோயாகவும் பார்க்கப்படுகிறது. அதுபோல், முறையாக அங்கீகரிக்கப்படாத மருந்து மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்வதும் கல்லீரல் வீக்கம், லிவர் ஃபெயிலியர் வர காரணமாகிறது.
கல்லீரல் வீக்கத்துக்கான அறிகுறிகள்
கல்லீரல் வீக்கத்துக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் என்று பெரியளவில் எதுவும் இல்லை. ஏனென்றால், கல்லீரல் ஆரம்பகட்ட பாதிப்புகளை தானே சரி செய்து கொள்ள முயற்சிப்பதனால் அறிகுறிகள் தென்படுவதில்லை. வேறு ஏதாவது ஒரு பிரச்னைக்காக சோதனை செய்யும்போதுதான் கல்லீரல் வீக்கம் இருப்பதே தெரிய வரும்.
இதைத்தவிர, தொடர்ந்து அதிகளவில் மது அருந்துபவர்களுக்கு நிச்சயமாக லிவர் பாதிப்பு இருக்கும். இவர்களுக்கு ஒரு கட்டத்தில் மஞ்சள்காமாலை நோய் வரும். இதனை ஆல்கஹால் ஹெபடைடிஸ் என்று கூறுகிறோம். இந்த வகையான மஞ்சள்காமாலை ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக மது அருந்துவதை நிறுத்திவிட்டால்.
கல்லீரல் தன்னைத் தானே சரி செய்து கொண்டுவிடும். அப்படியில்லாமல், மஞ்சள்காமாலை சரியாகிவிட்டதே என்று மீண்டும் மது அருந்த தொடங்கினால், அது பெரிய பாதிப்புகளை உருவாக்கி, உயிருக்கே ஆபத்தாகிவிடக் கூடும்.நோய் முற்றிய நிலையில் கால் வீங்கும், வயிறு வீங்கும், பசியின்மை, உடல் மெலிதல், ரத்த வாந்தி எடுப்பது, ஞாபகசக்தி குறைவது போன்ற பிரச்னைகள் தோன்றும். கல்லீரல் வீக்க நோய்க்கான தீர்வு
கல்லீரல் பாதிப்பை பொருத்தவரை ஆரம்ப காலகட்டங்களில் ஹெபடைடிஸ் வைரஸ் தான் அதிகளவில் இருந்தது. அப்போது அதற்கு சரியான சிகிசைகள் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது நிறைய நவீன சிகிச்சைகள் வந்துவிட்டதால் வைரல் ஹெபடைடிஸ் எல்லாம் குறைந்துவிட்டது. தற்போது அதிகளவில் பார்ப்பது லைப் ஸ்டைல் டிஸ்ஸாடர்ஸ் தான். அதாவது, ஃபேட்டி லிவர் நோய்கள்தான்,
இதற்கு தீர்வு என்றால், உணவு கட்டுப்பாடு, தினசரி உடற்பயிற்சி செய்வது, சர்க்கரை நோய் இருப்பவர்கள் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பது. கொழுப்பு அளவு அதிகம் இருப்பவர்கள் அதை கட்டுப்படுத்துவது, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது, எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது போன்றவை கல்லீரலை பாதுகாத்துக் கொள்ளும் வழிகளாகும்.
- தவநிதி
|