சுவாசிகா ஃபிட்னெஸ்!
லப்பர் பந்து, மாமன் என அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து, பல இளசுகளின் ஃபேவரைட் நாயகியாக மாறியுள்ளார் நடிகை சுவாசிகா. வைகை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இவர். அதன்பின், கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர், தமிழில் சரியான படங்கள் அமையாததால் மலையாள சினிமா பக்கம் சென்றார்.
 இந்நிலையில், இவர் மீண்டும் தமிழில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான லப்பர் பந்து படத்தில் நடித்தார். அந்த படத்தில், நடிகை சுவாசிகாவிற்கு கிடைத்த அழுத்தமான கதாபாத்திரம் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.
அதைத் தொடர்ந்து சூரியுடன் நடித்த மாமன், சமீபத்தில் வெளியான போகி என அடுத்தடுத்த படங்களும் அவருக்கு வெற்றியை அள்ளித்தந்திருக்கிறது. தற்போது சூர்யாவின் 45 ஆவது படமான கருப்பு படத்தில் நடித்து வருகிறார். தொடர் வெற்றிகளின் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் சுவாசிகாவின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம். ஒர்க்கவுட்ஸ்
ஒர்க்கவுட்ஸ் என்று எடுத்துக் கொண்டால், அடிப்படையில் நான் ஒரு நடன கலைஞர். முறைப்படி நடனம் பயின்றிருக்கிறேன். இப்போதும் நேரம் கிடைக்கும்போது நடன நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறேன்.
எனவே சிறுவயது முதலே உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறேன். காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிடும் பழக்கம் உடையவள் நான். முதலில் யோகாவுடன் எனது ஒர்க்கவுட்ஸ் தொடங்கும். பின்னர், நடைப்பயிற்சி அரைமணி நேரம் செய்வேன். அதன்பின்னர், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அரை மணி நேரம்.
பின்னர், ஸ்டேமினாவை அதிகரிக்கும் வகையில் பைலேட்ஸ் பயிற்சிகள் செய்வேன். பின்னர், புஷ்- அப், புல் - அப், க்ரஞ்சஸ் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகளும் செய்வேன். இவையெல்லாம் எனது தினசரி உடற் பயிற்சிகளாகும். பின்னர், கால்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு மணி நேரம் டான்ஸ் பயிற்சிகள் செய்வேன்.
இவைதான் எனது ஒர்க்கவுட் ரகசியங்கள். அதுபோன்று என்னுடைய தினசரி உடற்பயிற்சிகளோடு யோகாவும் செய்வேன். யோகா மனதிற்கு அமைதி தருவதோடு, உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. எனவே, உடற் பயிற்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறேனோ அதே அளவு என்னுடைய யோகா பயிற்சிக்கும் இடம் உண்டு. இது தவிர ஜூம்பா நடன பயிற்சியும் மேற்கொள்கிறேன். இவைகள்தான் எனது தினசரி ஒர்க்கவுட்ஸ்.
டயட்: காலை எழுந்ததும் தினசரி 1 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்திவிட்டு, பின்னர், இஞ்சி, மிளகு, மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து ஒரு மூலிகை தேநீர் அருந்துவேன். பின்னர், ஒன்பது மணிக்கு ஒரு நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவேன்.
காலை உணவு பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். அதையடுத்து 11 மணி அளவில் ஒரு பீட்ரூட், கேரட், ஆப்பிள் சேர்த்து ஏபிசி ஜூஸ். அதன்பிறகு மதிய உணவில் ஒரு தோசை, கொஞ்சமாக அரிசி சாதம், வெள்ளரிக்காய் சாலட், கேரட் சாலட், கொஞ்சமாக இரண்டு விதமான காய்கறி பொரியல் எடுத்துக் கொள்வேன். அதன்பின் மாலை 4 மணி அளவில் சிறிதளவு நட்ஸ் வகைகள் எடுத்துக் கொள்வேன். பின்னர் இரவு உணவுதான். அதில் ஏதாவது சாலட் அல்லது இட்லி எடுத்துக் கொள்வேன். எண்ணெயில் பொரித்து, வறுத்த உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிடுவேன். அதுபோன்று அவ்வப்போது நொறுக்குத்தீனிகளை கொறிக்கும் பழக்கமும் எனக்கு இல்லை.
பியூட்டி: பொதுவாக, சூட்டிங் நேரத்தைத் தவிர, நான் மேக்கப் செய்து கொள்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. எனது சொந்த விஷயங்களுக்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போது, எந்தவித மேக்கப்பும் இல்லாமல்தான் செல்வேன். மற்றபடி எனது இளமையான தோற்றப் பொலிவுக்கு காரணம் தேங்காய் எண்ணெய்தான். தினசரி குளிப்பதற்கு முன்பு அரைமணிநேரம் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் தடவிக் கொள்வேன்.
அதுபோன்று எங்களது சமையலிலும் தேங்காய் அதிகளவில் பயன்படுத்துவதால், இயற்கையாகவே என் ஸ்கின் பளபளப்புடன் காணப்படுகிறது. அவ்வப்போது தண்ணீர் நிறைய குடிப்பதும் கூட எனது தோலை வறண்டுவிடாமல், ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுவதோடு, தோலுக்கு மினுமினுப்பையும் தருகிறது.
உடற்தகுதி மற்றும் உணவுப் பழக்கங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ அதுபோலவே, முடிந்த அளவு மகிழ்ச்சியாக இருக்கவும் முயற்சி வேண்டும். மன மகிழ்ச்சியே நம்மை எப்போதும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க உதவும்.
- ஸ்ரீதேவி குமரேசன்
|