சத்தான சிறுதானிய அடை வகைகள்
வரகு அடை தேவையானவை
வரகு அரிசி - 1கப் கடலைப் பருப்பு - கால் கப் துவரம் பருப்பு - கால் கப் உளுந்து - 2 தேக்கரண்டி பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி அவல் - 2 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 5 வெங்காயம் - 2 இஞ்சி - 1 சிறிய துண்டு பெருங்காயம் - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வரகு அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும். கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஊற வைக்கவும். அவலை தனியே ஊற வைக்கவும். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அரிசியையும் பருப்பையும் சேர்த்து அதனுடன் மிளகாய்வற்றல் மற்றும் உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். மாவு நன்கு மசிந்தவுடன் அவலை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர், அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், தோசைக்கல்லை சூடாக்கி மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விட்டு அடைகளாக சுட்டு எடுக்கவும். சுவையான வரகு அடை ரெடி. பலன்கள்: வரகு அரிசி உடல் எடையை குறைத்தல், செரிமானத்தை மேம்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், தசை மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இதில் நார்ச்சத்து, புரதம், தையமின், நையசின் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
குதிரைவாலி அடை
தேவையானவை
குதிரைவாலி அரிசி - 1 கப் கடலைப் பருப்பு - கால் கப் துவரம் பருப்பு - கால் கப் உளுந்து - 1 கப் பாசிப்பருப்பு - 1 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 8 இஞ்சி - 1 துண்டு சோம்பு - கால் தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: குதிரைவாலி அரிசியையும், பருப்பு வகைகளையும் ஒன்றாக சேர்த்து இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, ஊற வைத்த அரிசி கலவையுடன் மிளகாய் வற்றல், சோம்பு, இஞ்சி சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்னர், தோசைக்கல்லை சூடாக்கி மெல்லிய அடைகளாக வார்த்து எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் நிதானமாக வேக வைத்து எடுக்கவும். சுவையாக குதிரைவாலி அடை தயார்.
பலன்கள்: குதிரைவாலி அரிசி செரிமானப் பிரச்னைகளை நீக்கும், உடல் எடை குறைப்புக்கு உதவும், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது, எலும்புகளுக்கு வலிமை தரும் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டது. மேலும், இதில் இரும்பு, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், புரதம், மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
சோள அடை
தேவையானவை
சோளம் - 2 கப் துவரம் பருப்பு - 1 கப் கடலைப் பருப்பு - 1 கப் உளுந்து - 1 கப் பாசிப்பருப்பு - அரை கப் பெரிய வெங்காயம் - 2 மிளகாய் வற்றல் - 6 பெருங்காயம் - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: சோளத்தை 6 மணி நேரம் ஊறவைக்கவும். துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து என நான்கு பருப்புகளையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஊறவைத்த அரிசியையும், பருப்பையும் தனித்தனியாக அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.
அதனுடன் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிச் சேர்த்து கூடவே பெருங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுத்ததாக தோசைக்கல்லை சூடாக்கி மாவை ஊற்றி எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும். சுவையான சோள அடை தயார்.
பலன்கள்: சோளத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் (பி, சி), தாதுக்கள் (இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம்), மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்துகின்றன.
இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன மற்றும் சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கின்றன. மேலும், சோளம் பச்சையம் இல்லாதது, கண் பார்வைக்கு நல்லது, மேலும் இரத்த சோகையைத் தடுக்கவும் உதவுகிறது.
- ஸ்ரீதேவி குமரேசன்
|