வயிற்று ஆரோக்கியம் காப்போம்!
பெரும்பாலும் வயிறு என்ற உறுப்பை நாம் பொருட்படுத்துவதே இல்லை. பசித்து சாப்பிடுகிறோமோ இல்லையோ பார்க்க அழகாக இருப்பவற்றையும் நாக்குக்கு ருசியாக இருப்பவற்றையும் சாப்பிட்டு தீர்க்கிறோம். வயிற்றுக்குள் அடைக்கிறோம். ஆனால் நமது வயிறு இன்னொரு மூளையாக செயல்படுகிறது என்கிறது ஆய்வுகள். உதாரணமாக நம்முடைய மனநிலை மாறுவதற்கு ஏற்ப வயிற்றில் தாக்கம் நிகழ்கிறது. ஏமாற்றம், கோபம், மன அழுத்தம் இவை அனைத்துமே வயிற்றையும் பாதிக்கிறது. செரோடோனின் என்னும் ஹார்மோனுக்கு சந்தோஷ ஹார்மோன் என்ற பெயரும் உண்டு. இந்த ஹார்மோனின் 70 சதவீதம் அளவு வயிற்றில்தான் உருவாகிறது. இதய கோளாறு, நீரிழிவு போன்ற தீவிர பாதிப்புகள் உள்ள ஒருவர், வயிற்றை சரியாக பராமரித்தால் இந்த நோய்களை சமாளிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். வயிறு நம் உடல் ஆரோக்கியத்தை ஒழுங்குப்படுத்துவதாக உள்ளது. வயிற்றில் உள்ள கோடிக்கணக்கான நுண்ணுயிரிகளுக்கு தகவல்களை அனுப்புகின்றன. வயிற்றை சரியாக பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை காக்க முடியும்.
சுத்திகரிக்கப்படாத உணவு
பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டுகளில், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுகிறோம். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை நாம் சாப்பிடாத நாளே கிடையாது. ஏதாவது ஒருவிதத்தில் சீனி என்னும் சர்க்கரை நம் உடலில் சேர்கிறது. இவற்றை முற்றிலும் தவிர்ப்பது வயிற்றுக்கு ஆரோக்கியம் தரும்.
நார்ச்சத்து
நம் வயிற்றில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு, நார்ச்சத்துதான் உணவு. தினமும் பழங்கள், கீரைகளை சாப்பிட வேண்டும். பழங்களை சாறு பிழியாமல் அப்படியே சாப்பிட வேண்டும். சியா விதைகள், பாப்கார்ன் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். ஆப்பிள், வெள்ளரி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை சாப்பிட வேண்டும். மைதா மாவில் செய்யப்பட்டவற்றை தவிர்த்து, கோதுமை சாப்பிடலாம்.
காய்கறிகள்
மாதுளை, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை சாப்பிடுவதோடு அதிக தாவர உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருமுறை சாப்பிடும்போதும் அந்த சாப்பாட்டின் முக்கால் பங்கு காய்கறி இருப்பதுபோல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கொழுப்பு
நல்ல கொழுப்பு கொண்ட உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய், அவகோடா, கடுகு எண்ணெய், ஆலிவ் ஆயில், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவை நல்ல கொழுப்பு கொண்டவை.
போதுமான உறக்கம்
மன அழுத்தம் மற்றும் போதுமான உறக்கம் இல்லாமை ஆகியவையும் வயிற்றை பாதிக்கும். ஒரு நாளில் 7 முதல் 8 மணி நேரம் வரை உறக்கம் வேண்டும். தியானம், யோகாசனம் ஆகியவை நல்ல பயன் தரும்.
உடற்பயிற்சி
சரியான உணவு சாப்பிட்டு முறையாக உடற்பயிற்சி செய்வோருக்கு வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். இவை உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதுடன், அழற்சியை குறைக்கிறது. புற்றுநோய் வரும் வாய்ப்பையும் தடுக்கிறது.
- பொ. பாலாஜிகணேஷ்
|