ஹேப்பி ஹேர் கலரிங்!
நீண்ட கூந்தல் வளர்ப்பு பழைய பஞ்சாங்கம் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில், தற்போதைய புதிய டிரண்ட், விதவிதமாக கூந்தல் நிறத்தை அழகுப்படுத்திக் கொள்வதே. இவ்வாறு அடிக்கடி ஹேர் கலரிங் செய்து கொள்வது, ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கின்றனர் சரும மருத்துவர்கள். முன்பெல்லாம் இளநரை அல்லது குறைந்த வயதில் முடி நரைத்துப் போனவர்கள் ஹேர் டை உபயோகிப்பார்கள்.
 ஆனால், தற்போது அப்படியில்லை, தங்களது தலைமுடியை ஆரஞ்சு, நீலம், பிரவுன் என்று பல வண்ணங்களில் அழகுபடுத்திக் கொள்வதே அழகு என்று உலாவருகிறார்கள். இளைஞர்கள் பலரும் அதில் நிறைந்திருக்கும் ஆபத்தை உணராமலே. ஏனென்றால், ஹேர் கலரிங் செய்வதற்காக பயன்படுத்தும் வண்ணங்களில் இருக்கும் வேதிப் பொருட்கள், உடலில் பலவித பிரச்னைகளை உருவாக்குகிறது.
பொதுவாக, கருப்பு நிறத்தில் இருந்து அதிக வேறுபாடு இல்லாமல் லேசான மாற்றம் செய்தால் எந்த பிரச்னையும் வராது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவே, வாரத்திற்கு ஒருமுறை, மாதம் ஒருமுறை அல்லது நீண்ட நாட்கள் என்று அவர்களது விருப்பத்துக்கேற்றவாறு, கூந்தலின் இயற்கையான நிறத்திலிருந்து முற்றிலும் அடர்ந்த நிறங்களுக்கு மாற்றும்போது நாளடைவில் பலவித உபாதைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர்.
ஹேர் கலரிங் என்னென்ன பிரச்னைகளை உண்டாக்குகிறது பார்ப்போம்:ஹேர் கலரிங்குக்காக பயன்படுத்தும் டையில் அமோனியம் மற்றும் பெராக்சைடு கலக்கப்பட்டிருக்கும். ஹெவி டைக்காக கொஞ்சம் பிபிடி சேர்த்திருப்பார்கள்.
முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் இந்த ரசாயனக் கலவைகளை அடிக்கடி நாம் பயன்படுத்தும் போது, ஹேர் கலரின் வண்ணத்தை தரும் பிபிடியின் அளவு சற்று அதிகமானால் புற்று நோய், தோல் அலர்ஜி, கூந்தல் வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும். கூந்தலின் வளர்ச்சி தடுக்கப்படும். சிலருக்கு சாயங்களின் ஒவ்வாமை நாளடைவில் சரும பிரச்னை மற்றும் கண்களிலும் பிரச்னைகளை உண்டாக்கிவிடும்.
எனவே, ஹேர் கலரிங் செய்வதற்கு முன்பு, சிறிதளவை எடுத்து காது ஓரத்தில் சிறுபகுதி முடியில் மட்டும் தடவி அந்த இடத்தில் எரிச்சல், தடிப்பு, அலர்ஜி எதுவும் இருக்கிறதா என்பதை அறிந்த பின்பு உபயோகிக்கலாம்..
அதுபோன்று, ரசாயனத் தயாரிப்புகளை மண்டை ஓட்டில் படாமல் முடியில் மட்டும் படுமாறு தடவ வேண்டும். மேலும், நீண்ட நேரம் ஹேர் கலரை தலையில் வைக்கக் கூடாது. ரசாயனப் பொருட்கள் உடலினுள் இறங்கும் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் கூந்தலை அலசிவிட வேண்டும்.
- தவநிதி
|