சர்க்கரையைச் சமாளிப்போம்!
நோய் நாடி நோய் முதல் நாடி
கடந்த இரண்டு வாரங்களில் சர்க்கரை வியாதியின் அறிகுறிகள் மற்றும் அதன் வகைகளைப் பற்றி தெரிந்து கொண்டோம். மேலும் சர்க்கரை வியாதியால் உடலில் எந்த உறுப்புக்கள் என்ன மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகிறது என்றும், அதற்கான சிகிச்சை முறைகளைப் பற்றியும் தெரிந்து கொண்டோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியாக, சர்க்கரை நோயைப் எவ்வாறு சரி செய்யலாம் என்றும், அதனைக் கட்டுப்பாடோடு வைப்பதற்கான வழிமுறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
 முதலில் சர்க்கரை நோய் இருக்கிறது என்று மருத்துவரின் ஆலோசனைப்படி தெரிந்து விட்டால், பதற்றமும், பயமும் தேவையில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தற்போதைய மருத்துவ வளர்ச்சியில், முப்பது அல்லது நாற்பது வருடங்கள் எந்தவித பாதிப்புமில்லாமல், இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டும், சர்க்கரை நோயினை கண்ட்ரோலில் வைத்துக் கொண்டும், நிம்மதியாக வாழும் மக்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
 எனவே, எந்தவொரு வியாதி வந்தாலும், அதற்கான சிகிச்சையும், அதற்கான வழிமுறைகளையும் பின்பற்றினாலே போதுமானது, அந்த நோயின் தாக்கத்திலிருந்து நாம் எளிதாக மீண்டு விடலாம் என்பதை முதலில் நம்ப வேண்டும். இங்கு மக்களிடேயே சிகிச்சையை பின்பற்ற வைப்பதும், வழிமுறைகளைத் தொடர்ந்து கடைபிடிக்க வைப்பதும் தான் பெரிய சவாலாக இருக்கிறது.
ஏனென்றால், தற்போது Sudden Death என்பது போன்ற செய்திகளைக் கேள்விப் படுகிறோம். நல்லா தான் இருந்தாங்க, என்னன்னு தெரியல. சட்டுன்னு இறந்து விட்டார் என்று கூறுவதைக் கேட்கிறோம். அதனால் உடலில் நோய் ஏற்படுவது நல்லதா, மருத்துவரைச் சந்திப்பது நல்லதா போன்ற கேள்விகளை வைத்து சில ஆய்வுகள் செய்து, முடிவுகளை வெளியிட்டார்கள்.
உதாரணத்திற்கு, காய்ச்சல் வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக வேலை செய்கிறது என்று பெரியவர்கள் கூறுவது போல், சுகர் மற்றும் பிரஷர் போன்றவற்றிற்கு தொடர்ச்சியாக சிகிச்சை எடுப்பவர்கள் ஆரோக்கியமாக வாழ்கிறார்களா அல்லது மருத்துவமனைக்கே செல்லாமல் இருப்பவர்கள் ஆரோக்கியமாக வாழ்கிறார்களா என்ற கேள்வியை முன் வைத்து மருத்துவத்துறையில் சில ஆய்வுகள் எடுக்கப்பட்டது.
அதாவது, உடலில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சரியாக மருத்துவரைச் சந்தித்து உடனுக்குடன் சிகிச்சை எடுப்பவர்கள் தான், உடலை சரியான முறையில் பேணிக் காத்து, ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் நமக்கு கூறுகிறது.
ஏனென்றால், தொடர்ந்து மருத்துவரை சிகிச்சை சார்ந்து பார்க்கும் போது, மருத்துவருடன் பேசும் போது, வேறுவித தொந்தரவுகள் இருந்தாலும், அதற்கான சிகிச்சைகளையும், மருத்துவரின் வழிகாட்டுதல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவைப் பொறுத்தவரை மருத்துவரை அணுகுவதும், சிகிச்சைகள் உடனுக்குடன் கிடைப்பதும் நமக்கான வரம். அதனால் சர்க்கரை வியாதி என்று தெரிந்தால், அதற்கான சிகிச்சைகளை முறையாக எடுக்கப் பழகுங்கள். சர்க்கரை வியாதி என்று தெரிந்த பின், எவ்வாறு அதனைக் கண்ட்ரோலில் வைக்க முடியும் என்றால், வழிகாட்டுதல் முறைகளை மூன்றாகப் பிரித்து நாம் செய்ய வேண்டும். முதலாவதாக டயட், இரண்டாவதாக உடற்பயிற்சி மற்றும் மூன்றாவதாக மருந்து மாத்திரைகள் போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம், சர்க்கரை வியாதியை கண்ட்ரோலில் வைக்க முடியும்.
டயட் - டயட் என்றதும், சாப்பிடும் உணவைக் குறைத்துக் கொள்வது என்பது மட்டுமே பொருளல்ல. சரிவிகித உணவு உண்ணும் முறையே, அதாவது நாம் தினமும் சாப்பிடும் விதத்தில் சில விஷயங்களை நேர்த்தியாக உட்கொள்வதே டயட் என்பதாகும். அதாவது, 25% புரோட்டீன், 25% கார்போஹைட்ரேட் 40% காய்கறிகள் மற்றும் பழங்கள், மீதம் 10 % கொழுப்பு சார்ந்த உணவுகள் இவற்றை சரிவிகித அளவில் உணவு உட்கொள்ளும் முறையாகும்.
இந்த விகிதத்தில் உணவு எடுத்துக்கொள்ளும் போது, நாம் எந்த உணவையும் கைவிடுவதில்லை. அதனால் உணவின் மீதான ஈடுபாடு சரியாக இருக்கும். சில டயட்களில் சில உணவுகளை சாப்பிடாமல் இருக்கும் போது, அந்த உணவின் மீதான ஈடுபாடு அதிகமிருக்கும்.
அதனால், உணவைப் பார்த்ததும், உடனே சாப்பிட வேண்டுமென்ற எண்ணத்தை கைவிட முடியாமல், டயட்டை கைவிட்டு விடுவார்கள். அதனால் தான், சில டயட்களை தொடர்ச்சியாக மக்கள் தொடர முடியாமல் கைவிடுகிறார்கள். அதனால் தான், சரிவிகித உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறோம். சிலர் சிறுதானியங்களான கம்பு, தினை, கேழ்வரகு மற்றும் கோதுமையை மட்டும் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்பார்கள். இவை மட்டுமே எடுத்துக்கொண்டாலும் சிலருக்கு சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது. அதனால் நாம் சாப்பிடும் மூன்று நேரத்தை பிரித்து, ஒரு நேரம் சிறு தானியங்கள், ஒரு நேரம் கோதுமை, ஒரு நேரம் சாதம் என்று சாப்பிட்டுக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி இருந்தால் பழங்கள் சாப்பிடலாமா என்று சிலர் கேட்கிறார்கள்.
பழங்களில் அதாவது முக்கனி வகைகளான, வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் இந்த மூன்றும் தொடர்ந்து சாப்பிடக் கூடாது. இவற்றில் அதிகளவு சர்க்கரை இருக்கிறது. அதனால் எப்பொழுதாவது சாப்பிடலாம்.
மற்றபடி ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களை தொடர்ந்து சாப்பிடலாம். பழத்தை பகல் 11 மணியளவிலும், மாலை 5 மணியளவிலும் சாப்பிடும்போது, பழத்தின் முழு சத்தும் நமக்கு கிடைக்கும். சாப்பிட்ட உடனே பழத்தை சாப்பிட்டால், பழத்தின் சத்து உடலில் உள்ளே போகாது. மேலும், பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடுவதை விட, சிறிது சிறிதாக கட் பண்ணி சாப்பிடுவதே சிறந்தது.
அடுத்தபடியாக, காபி, டீயில் சர்க்கரை கலந்து சாப்பிடக் கூடாது. வெல்லம், நாட்டுச் சர்க்கரை கலந்தும் கூட காபி, டீ குடிக்கக் கூடாது.. இவற்றிலும் சர்க்கரையின் தீவிரம் அதிகமாக இருக்கிறது.
அதனால் இவற்றை சாப்பிடாமல் தவிர்ப்பதே நல்லது.உடற்பயிற்சி: ஏன் தற்போதைய காலத்தில் சர்க்கரை வியாதி அதிகமாக இருக்கிறது என்றால், முதலில் உணவில் கட்டுப்பாடில்லாமல் இருப்பது, மற்றொன்று உடல் உழைப்பு சார்ந்து எதுவுமில்லாமல் இருப்பதனால் தான் சர்க்கரை வியாதி அதிகமாக இருக்கிறது.
உடலில் இன்சுலின் வேலை பார்க்காமல் இருப்பதால் தான் சர்க்கரை வியாதியே வருகின்றது. அந்த இன்சுலின் சரியாக வேலை செய்ய வைக்கதான், மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இயற்கையான முறையில் இன்சுலின் வேலை செய்ய வைக்க சிறந்த முறை உடற்பயிற்சி தான் சரியான வழியாகும்.
அதனால் தான், உடல் எடை நார்மலாக இருந்தாலும், உடற்பயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டுமென்று கூறுகிறோம். உடற்பயற்சி தொடர்ந்து செய்யும் போது, சிலநேரங்களில் மாத்திரைகள் எடுக்கும் அளவும் கூட குறையும்.
சர்க்கரை வியாதி பரம்பரை வியாதியா என்று கூட சிலர் கேட்பார்கள். உதாரணத்திற்கு, மரபணு ரீதியாக சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் வீட்டில் இருப்பவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது, அவர்களுக்கு மரபணு ரீதியாக சர்க்கரை வியாதி வர வாய்ப்பிருந்தாலும் இந்த உடற்பயிற்சியால் வராமல் போகும் வாய்ப்புகளும் இருக்கிறது.
இதுவே, மரபணு ரீதியாக, வீட்டில் யாருக்கும் எந்தவித உடல் உபாதைகள் இல்லாமல் இருந்தாலும், அவர்கள் வீட்டில் டயட்டோ அல்லது உடற்பயிற்சியோ செய்யாமல் இருக்கும்போது, அவர்கள் எளிதாக சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுவார்கள்.
அதனால் பரம்பரை வியாதி என்று சர்க்கரை வியாதியை குறிப்பிட முடியாது.மருந்துகள்: சர்க்கரை வியாதியில் டைப்1 மற்றும் டைப்2 என இரண்டு வகைகளைப் பார்த்திருக்கிறோம். அதில் டைப்1 சர்க்கரை வியாதிக்கு இன்சுலின் மட்டுமே மருந்தாக இருக்கிறது. அதிலும் டைப் 1 சிகிச்சைக்கு இன்சுலின் மருந்தினை இன்ஜெக்சன் வழியாக மட்டுமே பயன்படுத்த முடியும்.
டைப்1 சர்க்கரை வியாதிக்கு மருத்துவரின் ஆலோசனையோடு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுக்க வேண்டும். அடுத்தபடியாக, பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய்க்கு மருந்தாக இன்சுலின் மட்டுமே சிறந்ததாக இருக்கிறது. மேலும் குழந்தை பிறந்தவுடனேயே சர்க்கரை இயல்பாகவே அவர்களுக்கு நார்மலாக மாறிவிடும். அதன்பின், சர்க்கரை நோய் சார்ந்த சிகிச்சையை மருத்துவரின் ஆலோசனையோடு நிறுத்திக் கொள்ளலாம். மேலும் டைப் 2 வகை சர்க்கரை வியாதியால்தான் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த டைப் 2 வகையைப் பொறுத்தவரை சிகிச்சையில் முதற்கட்டமாக மருத்துவர்கள் ஆலோசனையோடு மாத்திரைகளை சாப்பிட வேண்டும். மாத்திரைகள் கேட்காத போது மட்டுமே இன்சுலின் இன்ஜெக்சன் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சிலருக்கு, சர்க்கரை வியாதி முற்றிய நிலையில் வரும்போது, அவர்களுக்கு கண்டிப்பாக இன்சுலின் தேவைப்படலாம்.
மற்ற சில காரணங்களாலும் சிலருக்கு இன்சுலின் தேவைப்படலாம். டைப் 2 வைப் பொறுத்தவரை சர்க்கரை நோய் கண்ட்ரோல் ஆனதும் மாத்திரைகளை நிறுத்தக்கூடாது. சர்க்கரை நோயைப் பொறுத்தவரை, ஒருசில நாட்கள் கண்ட்ரோலாக காண்பிக்கும். அடுத்த நாளே, மறுபடியும் சர்க்கரை அதிகமாயிருக்கும். அதனால் மருத்துவரின் பரிந்துரைப்படி தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும். எப்பொழுதுமே மாத்திரைகள் எடுப்பதால் பாதிப்புகள் குறைவே தவிர, மாத்திரை எடுக்காமல் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் தான் அதிகமாக இருக்கும்.
ஒரு சிலருக்கு டைப் 2வில் இன்சுலின் இன்ஜெக்சன் போட்டுக் கொண்டிருக்கும் போது, ஒரு கட்டத்தில் தேவைப்பட்டால், மருத்துவரின் ஆலோசனையோடு மாத்திரைகளுக்கு மாறிக் கொள்ளலாம். அதனால், இன்சுலின் போடுபவர்கள் மாத்திரைகளுக்கு மாற முடியாது என்பதெல்லாம் இல்லை.
சிலர், குறைந்த காலம் மட்டும் மாத்திரைகள் எடுத்துவிட்டு, நிறுத்திவிடலாமா என்று கேட்பார்கள். ஏனென்றால், தொடர்ச்சியாக மாத்திரை எடுப்பதால், கிட்னி பாதிக்கப்படுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. உண்மையில், சர்க்கரை வியாதிக்கு மாத்திரை எடுப்பதால், உடலில் இருக்கும் ஆர்கன்கள் ஆரோக்கியமாக இருக்கிறது. மாத்திரை எடுக்காமல் இருக்கும்போது மட்டுமே கிட்னியில் இருந்து அனைத்துமே பாதிக்கப்படுகிறது. அதனால் சர்க்கரை வியாதிக்கு மாத்திரைகள் எடுக்கும்போது, நிறுத்தக்கூடாது.
மாத்திரைகள் சர்க்கரையை கண்ட்ரோலில் தான் வைத்திருக்கிறது. அதனால் மருத்துவரின் ஆலோசனையோடு மருந்துகளை தொடர்ச்சியாக எடுப்பதே சிறந்தது.சர்க்கரை வியாதியை சரியாக கண்ட்ரோலில் வைக்க டயட், உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் இவை அனைத்தையும் சரியாகச் செய்யும்போது, சர்க்கரை வியாதியைப் பற்றிய பயத்தை நாம் கைவிட்டு விடலாம். இதில் ஒன்று மட்டும் செய்து, ஒன்றை விட்டாலும் சர்க்கரை வியாதி கண்ட்ரோலுக்கு வராது என்பதையும் மறந்து விடாதீர்கள்.
பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு
|