மணிக்கட்டு வலியே மறைந்து போ!



வலியை வெல்வோம்!

சென்ற இதழில்,
“டென்னிஸ் மற்றும் கோல்ஃபர்ஸ் எல்போ”
எனப்படும் முழங்கையின்
தசைநார்களில் ஏற்படும் வலி
மற்றும் வீக்கம், அழற்சியைப் பற்றி பார்த்தோம். இந்த இதழில்
‘க்யூபிடல் டன்னல் சிண்ட்ரோம்’,
மற்றும் ‘கார்பல் டன்னல் சிண்ட்ரோம்’ எனப்படும் முழங்கை மற்றும் மணிக்கட்டில் செல்லும் நரம்புகளில் ஏற்படும் அழுத்தத்தால் உண்டாகும் வலி, வீக்கம், அழற்சியைப் பற்றிக் காண்போம்.

சிண்ட்ரோம் என்றால் பல அறிகுறிகள் ஒரு சேர, ஒரே நேரத்தில் தோன்றும் நோயின் நிலையைக் குறிப்பதாகும்.

க்யூபிடல் டன்னல் சிண்ட்ரோம் (Cubital Tunnel Syndrome)

க்யூபிடல் டன்னல் சிண்ட்ரோம் என்பது முழங்கையில் உள்ள “அல்நார் நரம்பு” (ulnar nerve) அழுத்தப்படுவதால் ஏற்படும் ஒரு நோய். இது “செல்ஃபோன் எல்போ” (cell phone elbow) என்றும் அழைக்கப்படுகிறது. க்யூபிடல் டன்னல் அல்லது அல்னார் டன்னல் என்பது முழங்கையின் உட்புறத்தின் பக்கவாட்டில் (medial side) உள்ள ஒரு குறுகிய சுரங்கப்பாதை போன்ற பகுதி.

இது மேல் கையினுடைய (upper arm) ஹுயுமரஸ் என்ற எலும்பின் கீழ் பகுதியான மீடியல் எபிகாண்டைல்(medial epicondyle) , ஃபன்னி போன் (funny bone) என்றழைக்கப்படும் அல்னா எலும்பின் மேற்பகுதியான ஆலிக்கிரானான் பிராசஸ், கியூபிடல் டனல் ரெட்டினாகுலம் என்ற தசை நார் மற்றும் தசையின் இணைப்புத் திசு ஆகியவை சேர்ந்து சிறிய சுரங்கம் போன்ற அமைப்பாகக் காணப்படும். 

இந்தச் சுரங்க அமைப்பின் வழியாகத்தான் கழுத்தில் இருந்து வரும் அல்னார் (ulnar nerve) என்ற நரம்பு செல்கிறது.இந்நரம்பானது முழங்கையிலிருந்து முன்கை மற்றும் கை வரை சென்று, மோதிர விரல் மற்றும் சிறு விரல்களுக்கு உணர்வு மற்றும் தசை இயக்கத்தை வழங்குகிறது.

சில சமயம் நாம் முழங்கையில் அடித்துக்கொண்டால் ‘ஷாக்’ அடிப்பதை போன்ற ஒரு உணர்வு ஏற்படும் அல்லவா? நாம் இடித்துக்கொள்வது அல்னா என்ற எலும்பின் மீது ஆனால் தசைப்பகுதிகளற்ற தோலின் மேற்பகுதியில் இருக்கும் அல்னார் நரம்பானது, அதன் கீழுள்ள ஹுமரஸ் எலும்பில் அழுத்தப்பட்டு நமக்கு ஷாக் அடிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

க்யூபிடல் டன்னல் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கு முழங்கையின் இயக்கமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதாவது, அல்னார் நரம்பானது நம் முழங்கையின் இறுக்கமான பாதையில் செல்கிறது. அதனால் நாம் முழங்கையை மடக்கி நீட்டுவதால் (flexion, extension) கூட அங்கு அழுத்தத்தை உண்டாக்கும்.

முழங்கையை வளைப்பதால்...

அதாவது, நீண்ட நேரம் முழங்கையை 90 டிகிரியிலேயோ அல்லது அதற்கு மேலோ வளைத்திருக்கும் போது, நரம்பு நீட்டி (stretched), சுருக்கப்படுவதால் சேதமடைய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து அல்லது திரும்பத் திரும்ப இயக்கம் (Repetitive Motion)முழங்கையை அடிக்கடி வளைப்பது மற்றும் நீட்டுவதால் நரம்பின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.

வெளிப்புற அழுத்தம்

முழங்கையை மேஜை போன்ற கடினமான மேற்பரப்பில் நீண்ட நேரம் சாய்த்து வைத்திருந்தால்கூட நரம்பை நேரடியாக அழுத்தலாம்.இந்த இயக்கங்களினால் ஏற்படும் மாற்றங்கள் நரம்பின் இரத்த ஓட்டத்தைக் குறைத்து, அழற்சி (inflammation) அல்லது நரம்பு சேதத்தை (nerve damage) உண்டாக்குகின்றன.

காரணங்கள்

*நீண்ட நேர மொபைல் போன் பயன்பாடு: போனைக் காதுக்கு அருகே பிடித்துப் பேசும் போது முழங்கையை வளைத்து வைத்திருப்பதால், நரம்பை அழுத்துகிறது.

*தொழில் சார்ந்து தொடர்ந்து முழங்கையை வளைத்த படியே செய்யும் பணிகள் (எ.கா. டிரைவர்கள், தட்டச்சு செய்பவர்கள்).

*காயங்கள்: முழங்கை எலும்பு முறிவு அல்லது அடிபடுதல்.

*உடலியல் காரணிகள்: நீரிழிவு நோய் (diabetes) அல்லது மூட்டுவலி (arthritis).

அறிகுறிகள்

*மோதிர விரல் மற்றும் சிறு விரல்களில் உணர்வின்மை (numbness) அல்லது கூச்ச உணர்வு (tingling).

*முழங்கை மற்றும் முன்கையில் வலி.

*கை பலவீனம், குறிப்பாக பிடிப்பதில் (grip) சிரமம்.

*முழங்கையைத் தொடும்போது “மின்சார அதிர்ச்சி” (electric shock) போன்ற உணர்வு.

சிகிச்சை முறைகள் பிசியோதெரபி

*தசைகளை வலுப்படுத்தவும், நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவும் பயிற்சிகள். இரவில் முழங்கையை வளைப்பதைத் தவிர்க்க ஸ்பிளிண்ட் (splint) அணிவது.

*பாதிக்கப்பட்ட கையிற்கு ஓய்வு கொடுப்பது மற்றும் முழங்கையை அழுத்தும் செயல்களைத் தவிர்ப்பது.

மருத்துவ சிகிச்சை

எலும்பியல் நிபுணர்களின் ஆலோசனையின்படி, அழற்சி எதிர்ப்பு மருந்துகள், வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் ஊசி எடுத்துக்கொள்ளலாம்.

அறுவைசிகிச்சை

பிரச்னை தீவிரமாக இருந்தால் மருத்துவ நிபுணர்கள் அறுவைச்சிகிச்சையைப் பரிந்துரைப்பர். இதனால் நரம்பின் மீதான அழுத்தம் குறைக்கப்படுகிறது.

 தடுப்பு முறைகள்

மொபைல் போன் பயன்படுத்தும்போது, முழங்கையை நீண்ட நேரம் வளைப்பதைத் தவிர்க்கவும்.ஹேண்ட்ஸ்-ஃப்ரீயை (hands-free) பயன்படுத்தவும் (காதுகளில் பிரச்சினையை உண்டாக்கும் அளவுக்குப் பயன்படுத்த வேண்டாம்).முழங்கைக்கு கீழே மென்மையான பட்டையை (padding) வைத்தும் அழுத்தத்தைக் குறைக்கலாம்.

தொடக்கத்திலேயே கவனித்து, சரியான சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், இதன் தாக்கத்தைக் குறைக்கலாம்.

கார்பல் டன்னல் சிண்ட்ரோம்

மணிக்கட்டின் உடற்கூறு அமைப்பை (Anatomy) தெரிந்து கொண்டால் மட்டுமே இதைப்பற்றி ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.மணிக்கட்டு என்பது மனித உடலில் ஒரு சிக்கலான மற்றும் முக்கியமான பகுதியாகும். இந்த மூட்டானது முன்னங்கை (forearm) மற்றும் கை (hand) ஆகியவற்றை இணைக்கிறது. மணிக்கட்டானது எலும்புகள், தசைநாண்கள் (tendons), நரம்புகள் (nerves), மற்றும் இரத்த நாளங்களால் (blood vessels) ஆனது.

மணிக்கட்டில் உள்ள முக்கிய எலும்புகள் “கார்பல் எலும்புகள்” (carpal bones) என்று அழைக்கப்படுகின்றன, 8 சிறிய எலும்புகள் இரண்டு வரிசைகளாக அமைந்துள்ளது.
கார்பல் டன்னல் என்பது மணிக்கட்டில் உள்ள ஒரு குறுகிய சுரங்கப்பாதை (tunnel) ஆகும். இது கார்பல் எலும்புகளால் அடிப்பகுதியும் பக்கங்களும், மேற்பகுதியானது “டிரான்ஸ்வர்ஸ் கார்பல் லிகமென்ட்” (transverse carpal ligament) என்ற கடினமான இணைப்பானது திசுவால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கத்தின் வழியாக “மீடியன் நரம்பு” (median nerve) மற்றும் ஒன்பது தசை நார்கள் (flexor tendons) செல்கின்றன. இந்த நரம்புதான் நமது கட்டை விரல், ஆட்காட்டி விரல் மற்றும்
நடுவிரலின் இயக்கத்துக்கு உதவுகிறது.

இந்தச் சுரங்கத்தில் மீடியன் நரம்பு அழுத்தப்படும்போது, கைவிரல்களில் உணர்வின்மை (numbness), கூச்ச உணர்வு (tingling), அல்லது வலி (pain) ஆகியவை ஒரு சேர ஏற்படும். இது பெரும்பாலும் மணிக்கட்டைத் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகப் பயன்படுத்துவதால் (repetitive strain) அல்லது மணிக்கட்டு வளைவதால்உண்டாகிறது.

மணிக்கட்டு நீண்ட நேரம் வளைந்திருக்கும்போது, கார்பல் டன்னலுக்குள் அழுத்தம் அதிகரித்து, மீடியன் நரம்பு சுருங்குகிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைந்து, நரம்பு சேதமடைகிறது.
உதாரணமாக, தொடர்ந்து டைப்பிங் செய்வது, செல்போன் மற்றும் கைகளில் வேறு சாதனங்களைப் பயன்படுத்துவது அல்லது அதிக நேரம் மணிக்கட்டை ஒரே நிலையில் வைத்திருப்பது போன்றவைதான் பெரும்பாலான காரணங்களாக உள்ளன.

காரணங்கள்

கார்பல் டன்னல் சிண்ட்ரோம் பல காரணங்களால் ஏற்படலாம் அவற்றில் சில,

*தொடர்ச்சியான மணிக்கட்டு இயக்கம் (repetitive motion)
*கர்ப்பம் (pregnancy) அல்லது ஹார்மோன் மாற்றங்கள்
*நீரிழிவு நோய் (diabetes) அல்லது மூட்டுவலி (arthritis)
*மணிக்கட்டு காயங்கள் (wrist injuries).

அறிகுறிகள்

*உணர்வின்மை,
*கூச்சம்,
*வலி, மற்றும் கை பலவீனம்

பெரும்பாலும் இவை இரவு நேரங்களில் அதிகமாக இருக்கும்.

சிகிச்சை முறைகள்

கார்பல் டன்னல் சிண்ட்ரோமிற்கு பல சிகிச்சை முறைகள் உள்ளன. அவை நோயின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும்.

மருத்துவ சிகிச்சை

எலும்பு அறுவைசிகிச்சை நிபுணரின் ஆலோசனையின் படி வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க ஊசிகள் மற்றும் மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.

அறுவைசிகிச்சை

பிரச்னை தீவிரமாக இருந்தால் கார்பல் டன்னல் விடுவிப்பு அறுவைசிகிச்சை செய்வர் (Carpal Tunnel Release).

பிசியோதெரபி

*மணிக்கட்டு தசைகளை வலுப்படுத்தும் மற்றும் மூட்டில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் பயிற்சிகள்.

*மணிக்கட்டுக்கு ஓய்வு கொடுப்பது.

*பணியிடத்தில் எர்கோனாமிக் கருவிகளைப் பயன்படுத்துவது (ergonomic tools).

*மணிக்கட்டு பயிற்சிகளைத் தவறாமல் செய்வது.

*கார்பல் டன்னல் ஸ்பிளின்ட் அல்லது பிரேஸ் அணிவது, மணிக்கட்டு வளையாமல் நேராக வைத்திருக்க உதவுகிறது.

மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை பெறவும், சுயமருத்துவத்தை தவிர்க்கவும்.

இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி