கர்ப்ப கால 10 நம்பிக்கைகள் உண்மை என்ன?பத்து மாத புதிய உயிர் ஒன்றை உருவாக்கும் பயணம் பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம். நாம் நினைப்பதைக் காட்டிலும், தாயின் வயிற்றில் கரு உருவாவது மிகவும் சிக்கலான விஷயம். இந்தக் காலகட்டத்தில் கணவன், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரின் கவனமும் அந்த கர்ப்பிணியின் மீது இருக்கும். கர்ப்பிணியை சந்திக்கும் மூத்தவர்கள், “வயிறு மேல இருக்கு... பெண் குழந்தைதான்” என்பது உள்பட பல்வேறு விஷயங்களைச் சொல்லிச் சென்றுவிடுகின்றனர்.

கர்ப்பகாலத்தில், கர்ப்பிணியின் உடலில் பலவிதமான அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் சில அறிகுறிகளை வைத்துப் பிறக்கப்போவது ஆணா, பெண்ணா எனக் கணித்துவிட முடியும் என உலகம் முழுவதும் உள்ள மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என இன்னும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.மக்கள் மத்தியில் பொதுவாக நிலவி வரும் கர்ப்பகாலம் குறித்த தவறான நம்பிக்கைகளையும் அவற்றுக்கான சரியான அறிவியல் விளக்கங்களையும் தெரிந்துகொள்வோம்.

தவறான நம்பிக்கை - 1

தாயின் வயிற்றுக் கோணத்தை வைத்தும் பருமனை வைத்தும் பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. கர்ப்பமான தாயின் வயிறு மேலே இருந்தால் பெண் குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம் எனவும் கீழே இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் எனவும் கூறுவர்.

உண்மை நிலை:

தாயின் வயிற்றில் தோலுக்குக் கீழே உள்ள கொழுப்புப் படலத்தின் அளவு, தசை வலிமை, வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நிலை ஆகியவற்றைப் பொறுத்தே கருவைச் சுமக்கும் வயிற்றின் அளவு மாறுபடும். எனவே, தாயின் வயிற்றின் அமைப்புக்கும் பிறக்கப்போகும் குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தவறான நம்பிக்கை - 2

தாய்க்கு உப்புச் சுவை பிடித்தால் ஆண் குழந்தையும் இனிப்புச் சுவை பிடித்தால் பெண் குழந்தையும் பிறக்கும்.

உண்மை நிலை:

நமது உடலில் தாதுஉப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும்போது உடல் தானாகவே சுவைத் தேடல் மூலம் குறைபட்ட ஊட்டச்சத்தைக் கேட்டுப் பெறும். இதை ‘ஃபுட் க்ரேவிங்’ என்பார்கள். ‘ஃபுட் க்ரேவிங்’குக்கும் குழந்தையின் பாலினத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

தவறான நம்பிக்கை - 3

கர்ப்பமுற்ற மூன்றாவது மாதத்தில் தாய் அதிகமாக வாந்தி எடுத்தால், குழந்தைக்கு முடி அதிகம் இருக்கும்.

உண்மை நிலை:

குழந்தையின் உச்சந்தலை, முடியின் அடர்த்தி பரம்பரை மரபணுக்களைப் பொறுத்தது. இதற்கும் வாந்தி, நெஞ்செரிச்சல் ஆகியவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தவறான நம்பிக்கை - 4

தாய்க்கு வலியில்லாத சுகப்பிரசவம் ஆகியிருந்தால், அவரது பெண்ணுக்கும் சுகப்பிரசவமே ஆகும்.

உண்மை நிலை:

இதற்கு விஞ்ஞானரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. குழந்தையின் எடை, வயிற்றில் குழந்தையின் நிலை, தாயின் இடுப்பு எலும்பின் சுற்றளவு, கர்ப்பகாலத்தில் தாயின் உணவுக் கட்டுப்பாடு, உடல் ஆரோக்கியம் ஆகியவையே சுகப்பிரசவமா அல்லது சிசேரியனா என முடிவு செய்யும் முக்கியக் காரணிகள்.

தவறான நம்பிக்கை - 5

கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்வதால், கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

உண்மை நிலை:

கருவுற்ற தாயின் வயிற்றின் கீழ்ப் பகுதியில் (Abdominal wall) ஏழு அடுக்குத் தோல் படலம் கருவைப் பாதுகாக்கிறது. இந்தத் தோல் படலம், வெளியில் இருந்து வரும் எதிர்பாராத அதிர்வுகளிடமிருந்து கர்ப்பப்பை நீரில் மிதக்கும் கருவைப் பாதுகாக்கிறது.

கரு முட்டையில் விந்து நுழைந்து, கர்ப்பப் பையில் கரு பதிந்ததும், ‘செர்விக்ஸ்’ எனப்படும் கர்ப்பப்பை வாய் இறுக்கமாக மூடிக்கொள்ளும். இதனால் மேற்கொண்டு விந்து நுழைய முடியாது. ஆகையால், உடலுறவு கொள்வதால், குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், அதீத ரத்தப் போக்கு, வெள்ளைப்படுதல், கருச்சிதைவுக்கான வாய்ப்பு மற்றும் வேறு சில கோளாறுகள் உள்ள தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் உறவு வைத்துக் கொள்வது நல்லது.

தவறான நம்பிக்கை - 6

குங்குமப் பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாகப் பிறக்கும்.

உண்மை நிலை:

தோலின் நிறம், மெலனின் நிறமியின் அளவைப் பொறுத்தது. குழந்தையின் கண், காது, மூக்கு, கை, கால் உள்ளிட்ட உடற்பகுதிகளின் அமைப்பு, தோலின் நிறம், குணாதிசயங்கள் ஆகியவை, தாய், தந்தை, முன்னோர்கள் ஆகியோரின் மரபணுக்களைச் சார்ந்தது. தாய் ஊட்டச்சத்து பானங்களைப் பருகுவதன் மூலமாகவோ குங்குமப்பூவைப் பாலில் கலந்து சாப்பிடுவதனாலோ, குழந்தையின் சரும நிறத்தில் எந்த மாறுதலும் ஏற்படாது.

தவறான நம்பிக்கை - 7

கர்ப்பகாலத்தில் தாயின் ஊட்டச் சத்துக்காக இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிட்டால், குழந்தையின் சரும நிறம் கறுக்கும்.

உண்மை நிலை:

இது உடல்நலத்துக்கே ஆபத்தான, மிகத் தவறான நம்பிக்கை. கர்ப்பிணிக்கு கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து மிகவும் அவசியம். இந்தியாவில், பிரசவ காலத்தில் ஏற்படும் மரணங்களில், 50 சதவிகிதம் ரத்தச்சோகையினால் ஏற்படுகிறது. இந்த நோய் வராமல் தடுக்க, மருத்துவர் ஆலோசனையின் பேரில் தாய்மார்கள் கட்டாயம் இரும்புச்சத்து
மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.

தவறான நம்பிக்கை - 8

மாதவிலக்கு தள்ளிப்போன மூன்றாவது மாதத்தில்தான் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உடனே செய்து கொண்டால், கரு கலைந்துவிட வாய்ப்பு உண்டு.
உண்மை நிலை:

இந்தத் தவறான நம்பிக்கை, தமிழகத்தில் பல குடும்பங்களில் நிலவுகிறது. சிக்கலான பிரசவத்தில் மிக முக்கியமானது எக்ட்டோபிக் கர்ப்பம் (Ectopic pregnancy). இந்த நிலையில் கர்ப்பப்பைவாய் (Cervix) வழியாக உள்ளே நுழையும் விந்தணு, கரு முட்டையை அடையாமல், இடையில் உள்ள கருக்குழாயில் (Fallopian tube) தங்கி, அங்கேயே கரு உருவாகி வளரத் தொடங்கிவிடும். கருவின் எடையைத் தாங்க முடியாமல் கருக்குழாய் வெடித்து, சிசுவுக்கு ஆபத்து ஏற்படும். கரு, முட்டையில்தான் உருவாகி வளர்ந்து வருகிறது என்பதை உறுதிசெய்துகொள்ள, மாதவிலக்கு தள்ளிப்போனதுமே கட்டாயம் மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து, ஸ்கேன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தவறான நம்பிக்கை - 9

தாயின் வயிற்றில் மச்சம் இருந்தால், சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும்.

உண்மை நிலை:

மச்சம் (nevus) என்பது, நிறமியைத் தயாரிக்கும் தோல் செல்களான மெலனோசைட்கள், தோலில் ஒரு சில இடங்களில் அளவுக்கு அதிகமாக இருப்பதால் மச்சம் உருவாகிறது. மனிதர்களுக்கு 40 வயது வரை புதிய புதிய மச்சங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தோலின் நிறத்தைப் பொறுத்து இவை சிவப்பு, கறுப்பு, பழுப்பு எனப் பல நிறங்களில் உடலில் தோன்றும். இதற்கும் கர்ப்பத்துக்கும், பிரசவத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

தவறான நம்பிக்கை - 10

குழந்தையின் உடல்பருமன் முன்னோர்களின் மரபணுக்களை மட்டுமே சார்ந்தது.

உண்மை நிலை:

கருவுற்றிருக்கும் தாய்மார்களின் தவறான உணவுப் பழக்கம் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். கருவுற்ற சமயத்தில் அதிக அமிலத்தன்மை உடைய உணவுகள், மசாலா மற்றும் நிறைவுறாக் கொழுப்பு கலந்த உணவுகளைத் தாய்மார்கள் சாப்பிட்டால், அவை குழந்தையின் உடல்பருமனை அதிகரிப்பதோடு, ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே, கருவுற்ற காலத்தில் தாய்மார்கள் காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், தானியங்கள், பருப்பு - பயறு வகைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

- சரஸ்