கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையாஎன் குழந்தைக்கு ஏழு வயதாகிறது. அவளுக்கு அடிக்கடி அம்மைநோய் வந்துவிடுகிறது. இதற்கு என்ன தீர்வு?
- தேவேந்திரவேலன், ஆரணி.

சாதாரணமாக நோய்த்தொற்று, பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் மூலம் ஏற்படுகிறது. வைரஸ் கிருமிகள் மூலமாகப் பரவும் நோய்கள் சிலவற்றால் சருமத்தில் சிவந்த தடிப்பு, கொப்பளம் ஏற்படலாம் அல்லது சருமம் சிவப்பு நிறத்தில் மாறலாம். பொதுவாக அம்மை வெயில் காலத்தில்தான் அதிகம் பரவும். வெயில் காலத்தில் உடலின் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும். அதனால் முகத்தில் கொப்பளங்கள், வேனல் கட்டிகள் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அம்மைநோய்க்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. சிலருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், மறுபடியும் அம்மை நோய் வர வாய்ப்பிருக்கிறது. பொதுவாக வெயில் காலத்தில் திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் கொப்பளங்கள் வந்தாலே அது அம்மை என முடிவெடுத்துவிடக் கூடாது. சருமப் பிரச்னையின் காரணமாகவும் சிவந்த திட்டுகளும், முகத்தில் கொப்பளங்களும் வரக்கூடும். மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் போதும். அம்மை என்று நினைத்து நீங்களாக சிகிச்சையில் இறங்க வேண்டாம்.

எனக்கு 22 வயதாகிறது. நான்கு அல்லது ஐந்து மாதங்கள் பீரியட்ஸ் வராமலேயே இருந்தது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிட்டேன். இப்போது 15 நாட்கள் வரையில் பிரீயட்ஸ் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. எதனால் இப்படி ஏற்படுகிறது... இதற்கு என்ன தீர்வு?

- கே.அமுதா, கோவை.

முதலில் ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை செய்து பீரியட்ஸ் சரியாக வராததன் காரணத்தைக் கண்டறிய வேண்டும். பெரும்பாலும் இரண்டு மாதங்கள் வரையில் பிரீயட்ஸ் வராமல் இருக்கலாம். அதற்கு மேல் வரவில்லை எனில், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று உடனடியாக மாத்திரை உட்கொண்டு பிரீயட்ஸ் வரவைத்துவிட வேண்டும்.

நான்கு, ஐந்து மாதங்கள் வரையெல்லாம் காத்திருக்கக் கூடாது. பதினைந்து நாட்கள்வரையில் பிரீயட்ஸ் வருகிறதெனில், மருத்துவரை அணுகி ரத்தப்போக்கை நிறுத்த மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அதீத ரத்தப் போக்கினாலும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.உடனடியாக உங்கள் கைனகாலஜி மருத்துவரை நாடி அவசியமான பரிசோதனைகள் செய்துகொண்டு சிசிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். அதுவே சிறந்தது.

என் மனைவிக்கு 40 வயது. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அரசு ஊழியர். அவள் தினமும் இரண்டு, மூன்று மணி நேரம் மட்டுமே தூங்கு
கிறாள். கேட்டால், தூக்கம் வரவில்லை என்கிறாள். இதற்குக் காரணம் என்ன?
- ராஜநாராயணன், தேன்கனிக்கோட்டை.

மன அழுத்தத்தால், இப்படியான தூக்கம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். நல்ல உறக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை என்பதால், இந்தப் பிரச்னையை தட்டிக் கழிக்க வேண்டாம். தூக்கத்துக்கான வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றச் சொல்லுங்கள். உதாரணமாக தினமும் எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். தூக்கத்துக்கான நேரத்தை நெறிப்படுத்த வேண்டும். டீ, காபி அதிகம் குடிக்கும் பழக்கம் இருந்தால், அதைக் கைவிடவேண்டியது அவசியம்.

இரவு உணவை, படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரே முடித்துக்கொள்ளவும். படுக்கையில் மொபைல், லேப்டாப், மூக்குக்கண்ணாடி போன்றவை இல்லாமலிருப்பது நல்லது. தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே டிஜிட்டல் சாதனங்களை தூரமாக வைத்துவிடவும்.

தூங்கும்போது, ஒருபக்கமாகச் சாய்ந்து படுக்காமல், முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி மல்லாக்கப் படுப்பது நல்லது. 40 வயது பெண் என்பதால், அவர் தற்போது மெனோபாஸ் காலத்தில் இருக்கக்கூடும். மெனோபாஸ் காலத்தில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். முக்கியமாக, இந்தக் காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் சுரப்புகள் குறையத் தொடங்கும்.

உடலுக்குத் தூக்கத்தை கொடுக்கும் அடிப்படை ஹார்மோன்களான இவை குறைவதால்கூட தூக்கமின்மை பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தேவைப்படும்பட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.