ரத்த அழுத்தம் கட்டுக்குள் வர!இன்றைய சூழலில் நிறையபேருக்கு ரத்த அழுத்தம் உள்ளது. இதற்காக, பலரும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க மாத்திரை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால், இயற்கை உணவு முறையை கடைப்பிடித்தாலே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.மன இறுக்கம், மன அழுத்தம் இருந்தால் இதயம் சுருங்கி விரிவடைவதில் சிரமம் ஏற்பட்டு ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. ஆம் பொதுவாக கோபப்படுபவர்களுக்கு ரத்த அழுத்தம் இருப்பதைப் பார்க்கிறோம். கோபம் அடையும்பொழுது இதயத்துடிப்பு நமிடத்துக்கு 25 முதல் 30 வரை அதிகரிக்கும்.

அடுத்த முக்கிய காரணம் கவலைப்படுதல், கவலைப்படும் பொழுது இதயம் சுருங்கி விரியும் தன்மையில் மாற்றம் ஏற்படுகின்றது. அதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகின்றது. சிலர், வாழ்க்கையில் கடந்த காலத்தில் நிகழ்ந்த அனுபவங்களை எண்ணி கவலைப்படுவர். அல்லது எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்று வருந்துவர், இப்படி வாழ்வதால் நிகழ்காலம் முழுவதும் கவலை சூழ்ந்து ரத்த அழுத்தம் ஏற்படுகின்றது. டென்ஷன் அடுத்த காரணமாகும். சிறிய விஷயங்களுக்குக்கூட பதற்றம், டென்ஷன் ஆகின்றவர்களுக்கும் ரத்த அழுத்தம்
விரைவில் வருகின்றது.

சுரப்பிகளில் தலைமை சுரப்பியான பிட்யூட்டரி சுரப்பி அதிகமாக சுரந்தால் ரத்த அழுத்தம் வரும். மனிதனின் எண்ணம் சாந்தமாக இருந்தால் இச்சுரப்பி சரியாகச் சுரக்கும்.ரத்த அழுத்தத்துக்கு அடுத்த காரணம் உணவுப்பழக்கம். நல்ல காரமாக அசைவ உணவுகளை அடிக்கடி உண்பவர்கள், நாவின் ருசிக்காக அடிக்கடி ஹோட்டலில் உண்பவர்கள், எண்ணெய் பண்டங்கள் அதிகமாக உண்பவர்கள், இரவு நேரம் கழித்து அளவுக்கு அதிகமாக உணவு உண்டு உடன் படுக்கைக்கு செல்பவர்கள் இவர்களுக்கெல்லாம் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

பழங்களில் - சப்போட்டா, நெல்லிக்காய், மாதுளை, திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, பேரிக்காய், உலர்ந்த திராட்சை இவற்றை அதிகளவு எடுத்துக்கொள்ளலாம்.

காய்கறிகளில் - வாழைத்தண்டு, பீட்ரூட், கேரட் சூப், காலிஃபிளவர், முள்ளங்கி, வெள்ளரிக்காய், முட்டை கோஸ்.

கீரைகளில் - அகத்திக்கீரை, வல்லாரை, முருங்கைக்கீரை, புதினா, கொத்துமல்லி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, பசலைக்கீரை.

பயறு வகைகளில் - பச்சைப் பயறு, பச்சை பட்டாணி, சோயாபீன்ஸ், கொண்டைக்கடலை போன்றவற்றை வழக்கப்படுத்திக் கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

- பொ. பாலாஜி