பலம் தரும் பண்ணைக் கீரை!



கீரைகள் நம் உடலை ஊட்டி உயிரைக் காக்கும் அற்புத சஞ்சீவிகள். அதனை உணர்ந்ததால்தான் நம் முன்னோர் கீரைக்கு இணையான உணவே இல்லை என சொல்லியிருக்கிறார்கள். பலவிதமான கீரைகளை நாம் பயன்படுத்தி வந்தாலும் நடைமுறையில் மிகக் குறைவாகவே அறியப்பட்ட கீரையினங்களும் உண்டு. மிகச் சிலர்தான் இதன் பயன்பாடு அறிந்து இதனை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். அப்படியான கீரைகளில் ஒன்று பண்ணைக் கீரை.

பண்ணைக் கீரை (Celosia argentea) பெரும்பாலும் வயல்வெளிகளில் வளரக்கூடிய செடியினம். இதில் அநேக விதம் உண்டு. அதாவது, சிறுபண்ணை, நறும் பண்ணை, புற்பண்ணை, புனல் பண்ணை போன்ற பல வகைகள் உள்ளன. இவற்றுள் நறும் பண்ணை தவிர மற்றவை ஒரே இனத்தைச் சேர்ந்தவை. குணத்திலும் வினைபுரிதலிலும் ஒன்றுபட்டே
இருக்கும்.

பண்ணை கீரையானது மயில் கீரை, மகிழிக்கீரை, மௌலிக் கீரை, மசிலிக் கீரை எனப் பல பெயர்களில் வழங்கி வருகிறது. இக்கீரையானது துவர்ப்பியாகவும், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.இதில் பீட்டா கரோட்டின் அதிக அளவில் நிறைந்துள்ளது. விட்டமின் இ, போலிக் அமிலம், விட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை நிறைந்துள்ளது. இதில் புரதச்சத்து 4.7 சதவீதம், மேலும் அமராந்தைன், அக்சாலிக் அமிலம் மற்றும் பைட்டிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்களும் நிறைந்துள்ளது.

பண்ணைக் கீரையின் பயன்கள்

பண்ணை கீரையைப் பற்றி அகத்தியர், குணவாகடம் என்னும் நூலில்
கீழ்வருமாறு கூறுகிறார்.
“பண்ணையிளம் கீரையது பற்று மலமிளக்கும்
எண்ணுங் குடலுக்கிதங்
கொடுக்கும் - பெண்ணேகேள்!
சீதங் கரப்பான் சிரங்குபுண்
மாற்றிவிடும்
கோதங் கிலையதனைக் கொள்”
பண்ணை கீரையானது வயிறு மந்தம், இருமல், சீதபேதி, மூத்திரத்தாரை நோய், பெரும்பாடு, சொறி, சிரங்கு, கரப்பான், கழலை, புண் போன்றவைகளை நீக்கும். மலத்தை இளக்கும், குடலுக்கு
வன்மையைக் கொடுக்கும்.

வாரம் ஒரு முறை பண்ணைக் கீரையை சுத்தம் செய்து, அதனுடன் பருப்பு சேர்த்தோ, சேர்க்காமலோ வேகவைத்து கடைந்து சாதத்துடன் சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டு வர உடலுக்கு நன்மை தரும்.பண்ணைக் கீரையை சுத்தம் செய்து வேகவைத்து வெங்காயம், மிளகாய், புளி சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

குடல் புண் மற்றும் சரும வியாதிகளை குணப்படுத்த இக்கீரையை பருப்புடன் சேர்த்து வேகவைத்து, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கடைந்து சாதத்தில் நெய் விட்டு கலந்து சாப்பிட ஜீரண குடல் மற்றும் மலக்குடல் வலிமை அடையும். மேலும், சரும நோய்களான சிரங்கு, கரப்பான், புண் போன்ற நோய்கள் போகும்.

பெரும்பாடு நீங்கபண்ணை கீரையின் பூக்களை பறித்து சுத்தம் செய்து, அவற்றை 250 மில்லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கசாயம் ஆக்கி தினமும் காலையில் குடிக்க மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குணமாகும்.கழிச்சல், சீதபேதி குணமாகஇக்கீரையின் பூக்களை சுத்தம் செய்து வெந்நீர் விட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை வடிகட்டி குடிக்கவும்.

இவ்வாறு ஏழு நாள் குடிக்க கழிச்சல், சீதபேதி குணமாகும்.இருமல் குணமாகநன்கு வளர்ந்த பண்ணைக் கீரையின் கதிர்களை சேகரித்து, அவற்றில் காணும் பூக்களை கசக்கினால் கீரை விதை போன்று பொடி பொடியான விதைகள் கிடைக்கும். இந்த விதைகளை சேகரித்து வைத்துக்கொண்டு தேவையான பொழுது, ஒரு டீஸ்பூன் எடுத்து பொடித்து அதை பாலுடன் கலந்து காலை, மாலை இருவேளை குடிக்க இருமல் குணமாகும்.

இரத்தபேதி, சீதபேதி நீங்க சுத்தம் செய்த விதைகளை ஒரு டீஸ்பூன் எடுத்து, இரண்டு டம்ளர் பாலில் போட்டு வேகவைத்து சாப்பிட சொட்டு மூத்திரம், சீதபேதி நீங்கும்.பண்ணைக் கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவது நிற்கும். நாட்பட்ட மலச்சிக்கல் இருப்பவர்கள், இக்கீரையை வாரம் இரு முறை உணவோடு சேர்த்து உண்ண மலக்குடல் சுத்தமாகும்.பண்ணை கீரையின் சாற்றை புண்மீது தடவி வர புண் ஆறும்.

- திலீபன் புகழ்