மகளிர் மனநலம் காப்போம் ஹேப்பி வுமன்ஹுட்!உடல் ஆரோக்கியம் மூன்று விஷயங்களை உள்ளடக்கியது. உடல்நலம் மற்றும் மனநலம். இதில் உடல்நலனைப் பற்றி அக்கறைகொள்ளும் அளவுக்கு, மனநலனைப் பற்றிப் பலரும் அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. உடல்நலனைப் பேணுவது எந்த அளவு முக்கியமோ அதே அளவு மனநலனைக் காப்பதும் அவசியம். மனநலம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அதைப் பெண்களுக்கு மட்டும் எனப் பிரித்துப் பார்க்க‌ முடியாது.

என்றாலும், மாதவிடாய் முதல் மெனோபாஸ் வரை ஹார்மோன்களால் ஏற்படும் மனநிலை மாற்றங்களாலும், ஆணாதிக்கக் குடும்ப அமைப்புகள் அவர்களுக்குத் தரும் கட்டுப்பாடுகளாலும், பாதுகாப்புக் குறைந்த சமூகத்தால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளாலும், ஆண்களைவிட பெண்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகும் சூழல்கள் அதிகமாக உள்ளன. பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் பற்றியும், சிகிச்சை முதல் உணவு வரை அதற்கான தீர்வுகள் பற்றியும் இங்கு விரிவாகக் காண்போம்.

குழந்தைப் பருவத் தாக்கங்கள் வலுவானவை!

ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என இருபாலருக்குமே, குழந்தைப் பருவத்தில் ஏற்படும் தாக்கங்கள் மிகவும் வலுவானவை. பின்நாட்களில் ஏதேனும் மனநலப் பிரச்னைகள் ஏற்பட, அவை காரணமாக அமையக்கூடும். குழந்தை வளர்ப்பு அடக்குமுறைகள், குழந்தைகள் மீதான வன்முறைகள், சிறார் பாலியல் கொடுமைகள், பெண் குழந்தைகளைப் பொருத்தவரை ஆண் குழந்தைகளுடனான பாகுபாடுகள் போன்றவை அவர்களுக்கு மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்.

குறிப்பாக, குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவு ஏற்படுவது பெரும்பாலும் நன்கு தெரிந்த நபர்கள் மூலம்தான். தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத வயதில் நடப்பவை பற்றிப் பின்னாளில் அவர்கள் அறியவரும்போது, மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாவார்கள். எனவே, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது குடும்பம், பள்ளி, சமூகம், அரசு என அனைவரது கூட்டுப் பொறுப்பு.

பதின் பருவம்... மயக்கமா, தயக்கமா, குழப்பமா?

பதின்பருவப் பெண்களின் மனதில் பயம், தயக்கம், குழப்பம் போன்ற உணர்வுகள் மேலோங்கி இருக்கும். எது சரி, எது தவறு எனப் பல கேள்விகள் உருவாகும். அவற்றுக்கு எல்லாம் சரியான தீர்வை வழங்க வேண்டியது பெற்றோரின் கடமை. பூப்பெய்தும் வயதில் மாதவிடாய் பற்றிய புரிந்துணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதேபோல், தங்கள் உணர்வுகளைக் கையாள அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும். எதிர்பாலினத்தவரோடு ஆரோக்கியமாகப் பழகக் கற்றுத் தர வேண்டும். ஆண்களுடன் பேசாதே, பழகாதே என அவர்களை அடக்காமல், சரியான முறையில் அவர்களைக் கையாள்பவர்களாகப் பெண்களை உருவாக்க வேண்டும். பாலியல் கல்வி இந்த வயதில் அவசியமானது. பொதுத் தேர்வு, பாடச்சுமை குறித்த அச்சங்கள் மன அழுத்தமாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மாதவிடாய் மூட்ஸ்விங்ஸ்!

பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்பு மனம் சார்ந்த பிரச்னைகள், எரிச்சல் உணர்வு, மன உணர்வுகளில் வேறுபாடுகள் போன்றவை தோன்றும். இது `ப்ரீமென்ஷுரல் சிண்ட்ரோம்’ (Premenstrual syndrome) என்று அழைக்கப்படும். காரணமே இல்லாமல் கோபம், அழுகை வரும்போது, புறச்சூழல் மீது கோபம் கொள்ளாமல், இது ஹார்மோன்களின் செயல் என்று புரிந்துகொண்டு அவற்றைக் கடக்க வேண்டும்.

வேலைச் சூழல் மனப் பதற்றங்கள்!

வேலைச் சூழலில் பெண்கள் பல பிரச்னைகளைச் சந்திப்பார்கள். தங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள், நம்பிக்கை துரோகம், ஆணாதிக்கம், வேலையை சரியாகச் செய்கிறோமா, சிறப்பாகச் செயல்படுகிறோமா போன்ற பதற்றங்களும் இருக்க வாய்ப்புண்டு. இவற்றையெல்லாம் எதிர்கொள்ள நேரிடும்போது, அவையெல்லாம் தங்கள் மனநலனை பாதிக்க அனுமதிக்கக் கூடாது. ‘ஜஸ்ட் ஆபீஸ் பிரச்னை’ என்று அவற்றைக் கையாள, தாண்டி வர கற்றுக்கொள்ள வேண்டும்.

திருமண உறவுச் சிக்கல்கள்!

காதல் திருமணமாக இருந்தாலும் சரி, பெற்றோர் நிச்சயித்த திருமணமாக இருந்தாலும் சரி, கல்யாணத்துக்குப் பின் பெண்களின் வாழ்வில் பல புதிய மாற்றங்கள் நிகழும். விளைவாக, மனதிலும் பல மாற்றங்கள் ஏற்படும். ஒருவேளை இரு குடும்பங்களுக்கு இடையே பிரச்னைகள் வந்தால் எப்படிக் கையாள்வது, இணையுடன் எப்படி சுமுக உறவை ஏற்படுத்துவது
போன்ற‌ பல சவால்கள் அவர்கள் முன்பு இருக்கும். ஒவ்வொரு சூழலையும் பக்குவத்துடன், நிதானத்துடன் கையாண்டால் நிம்மதி உறுதி செய்யப்படும், மன உளைச்சல் எட்டிப் பார்க்காமல் இருக்கும்.

மெனோபாஸ் கேள்விகள்!

மெனோபாஸ் காலகட்டத்தில் பல பெண்களுக்கு மெனோபாஸ் குறித்த பல சந்தேகங்கள் இருக்கும். கூடவே, ‘நாம் பெண்மையை இழந்துவிட்டோமோ, இதன் பிறகு, நம் பாலியல் வாழ்வு எப்படி இருக்கும், நம் கணவருக்கு நம்மை பிடிக்குமா’ என்றெல்லாம் பல சந்தேகங்கள் தோன்றும். இதுவே அவர்களை ஒருவித மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும். ஹார்மோன் அளவுகள் மாறுபாடு காரணமாகவும் இந்தக் காலகட்டத்தில் மனதளவில் பல மாற்றங்கள் உண்டாகும். எனவே, சம்பந்தப்பட்ட பெண்கள் இது மெனோபாஸால் ஏற்படும் மன மாற்றங்கள் என்பதைப் புரிந்துகொண்டு அவற்றை எதிர்கொள்ள வேண்டும்.

தைராய்டும் காரணமாகலாம்!

உடல் சார்ந்த பிரச்னைகளான தைராய்டு பிரச்னைகள் (Hypothyroidism, Hyperthyroidism), உடல் பருமன் (Obesity) போன்றவற்றுக்கும் மனநலத்துக்கும் சம்பந்தம் உண்டு. எனவே, இந்தப் பிரச்னைகளுக்கு சரியான சிகிச்சை எடுக்கும்போது, அதனால் ஏற்பட்ட மனநலப் பிரச்னைகளும் நீங்கிவிடும்.

பெண்களுக்கு அதிகம் ஏற்படும் மன பாதிப்புகள்!

பெண்களுக்கு மனச்சோர்வு (Depression), மன அழுத்தம் (Stress), மனப் பதற்றம் (Anxiety) போன்றவை அதிக அளவில் ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது. மேலும், ஏதாவது அதிர்ச்சி தரக்கூடிய சம்பவங்களால் பாதிப்படைந்திருந்தால் `பி.டி.எஸ்.டி’ (PTSD - Post Traumatic Stress Disorder) ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மன அழுத்தம்... மூன்று நிலை!

மன அழுத்தத்தில் லேசான, மிதமான மற்றும் கடுமையான மன அழுத்தம் என மூன்று வகை உண்டு. உரிய நேரத்தில் மனநல மருத்துவரிடம் சென்றால், பாதிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கான தீர்வை வழங்குவார். மன அழுத்தம் மிகவும் தீவிரமாகும்போது தற்கொலை எண்ணங்கள் தோன்ற வாய்ப்புண்டு என்பதால், சிகிச்சை
அவசியம்.

ஹார்மோன் மாற்றங்களால் மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுமா?

கர்ப்பகாலம், குழந்தை பிறந்த பிறகான காலம், மெனோபாஸ் போன்ற நேரங்களில் ஹார்மோன்களில் அதிக அளவு மாற்றம் இருக்கும். மன அழுத்தம் ஏற்பட இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமையும்.தவிர, தைராய்டு அளவுகள் மாறுபடும்போது மனநலப் பிரச்னைகள் தோன்றலாம். அதற்காக தைராய்டு பிரச்னை உள்ள அனைவருக்கும் மனநலப் பிரச்னை இருக்க வேண்டும் என்று பொருள் இல்லை. ஆனால், மனநலப் பிரச்னை இருப்பவர்களுக்கு தைராய்டு அளவுகளையும் சோதனை செய்து பார்க்கலாம்.

உதாரணமாக, தைராய்டு சுரப்பியில் பிரச்னை உள்ளவர்கள் ஒருவித மந்தமாக இருப்பார்கள், அதிகம் தூங்குவார்கள். இந்த மந்த நிலையே அவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும். நம்மால் ஏன் சுறுசுறுப்பாக இருக்க முடியவில்லை என ஏங்குவார்கள். உடற்பயிற்சி போன்றவற்றை செய்யும்போது தைராய்டு அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதோடு மன அழுத்தத்தையும் குறைக்க முடியும்.

மனப்பிரச்னை இருப்பதை எப்படிக் கண்டறியலாம்?

முன்பு கலகலவெனப் பேசிக்கொண்டிருந்த பெண் திடீரென அமைதி ஆகிவிடுவது, நன்றாகப் படித்துக்கொண்டிருந்த மாணவி படிப்பில் பின்தங்குவது, தன்னுடைய வேலைகளைச் சிறப்பாகச் செய்துகொண்டிருந்த பெண்ணின் அன்றாட வாழ்வில் ஏதோ தொந்தரவு தெரிவது போன்றவை மனநலப் பிரச்னைகளின் அடிப்படையாக இருக்கலாம்.

பிறருடன் பழகுவதில் பிரச்னை

இருப்பது, தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளாமல் இருப்பது போன்றவற்றை வைத்தும் அறியலாம். இவர்கள் தங்களைக் கவனித்துக்கொள்ளும் எண்ணமே இல்லாமல் இருப்பார்கள். காரணமே இல்லாமல் அழுவது, எரிந்து விழுவது என மாற்றம் தெரியும்.

வழக்கமாக இல்லாமல் இப்படி புதிதாய் தெரியும் மாற்றங்களை நிச்சயமாக அவர்களுடன் இருப்பவர்களால் அறிய முடியும். சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோரோ, கணவரோ இப்படிப்பட்ட மாற்றங்கள், அறிகுறிகள் தென்பட்டால் முதலில் அவர்களிடம் பேச வேண்டும். சில பெண்களுக்கு, தங்கள் பிரச்னையைக் கேட்க யாரும் இல்லாததே ஒரு பிரச்னையாக இருக்கும். அவர்களின் கூற்றைக் கேட்ட பிறகு, வீட்டினராலேயே அவர்களுடைய பிரச்னைக்குத் தீர்வு தர முடியும் என்றால், அதைச் செயல்படுத்தவும். இல்லையெனில் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

- லயா