ஹெல்த் கைடு! இல்லத்தரசிகள் கவனத்துக்கு…ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் உலாவும் பிரபல வீடியோ ஒன்று... ஒருவரிடம், “உங்கள் மனைவி என்ன செய்கிறார்?” என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், “வீட்டில் சும்மாதான் இருக்கிறார்” என்பார். “சமையல் யார் செய்வார்கள்?”, “துணி யார் துவைப்பார்? “வீட்டை யார் சுத்தம் செய்வார்?”, “குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது?” எனும் ஒவ்வொரு கேள்விக்கும் “மனைவி சும்மாதான் இருக்கிறார். அதனால், அவர்தான் செய்கிறார்” என்று பதில் சொல்கிறார் கணவர்.

இப்படி, வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்பவர்களாக இல்லத்தரசிகள் இருந்தாலும், அவர்களை வேலையற்றவர்கள் என்றுதான் சொல்கிறது நம் சமூகம்.
தன் கணவன், தன் குழந்தை, தன் வீடு என்று தன் வாழ்வில் எல்லாவற்றையும் குடும்பத்தினரின் நலனுக்காகத் தியாகம் செய்பவள் இல்லத்தரசி. காலையில் எழுவது முதல், இரவு தூங்கச் செல்வது வரை தன் குடும்பத்தினர் நலன் ஒன்றுக்காகவே தீவிரமாக உழைப்பவள்.

குடும்பத்தில் யாருக்காவது ஒருவருக்கு உடல்நலக் குறைவு என்றாலும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, பிரத்யேக உணவு தயாரித்துக்கொடுப்பது, மருந்து மாத்திரைகள் தருவது என்று அவர்கள் குணம் பெற ஓயாது கவனம் செலுத்தும் குடும்பத்தலைவிகள், தங்கள் உடல்நலத்தைப் பராமரிக்கிறார்களா என்றால், இல்லை. உடல்நிலை சரி இல்லாவிட்டால்கூட ஏதேனும் ஒரு மாத்திரையை விழுங்கிவிட்டு, சிலர் அதைக்கூட செய்யாமல் வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள். இப்படி, இல்லத்தரசிகள் செய்யும் தவறுகளையும் செய்ய வேண்டியவற்றையும் கவனிக்க வேண்டியது நம் காலத்தின் அவசிய தேவையாகிறது.

உணவு மற்றும் உடல் பருமன்

கணவனுக்குப் பிடிக்கும், குழந்தைக்குப் பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து சமையல் செய்யும் பெண்கள், தங்களுக்கு என்று உணவு எதையும் தயாரிப்பது இல்லை.
தவறு: நம் நாட்டில் அதிக அளவில் பெண்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் உள்ளனர். ரத்தசோகை உட்பட பல பிரச்னைகள் இதனால் ஏற்படுகிறது. குடும்பத்தினர் உணவை அதிகமாக எடுத்துக்கொண்டால், குடும்பத்தலைவிக்குக் குறைவாகக் கிடைக்கும். அதுவே, அவர்கள் குறைவாக உட்கொண்டால், உணவு மீதமாகிவிடும். எனவே, உணவை வீணாக்கக் கூடாது என, குடும்பத் தலைவியே அதைச் சாப்பிடுவார்.

இந்த இரண்டு செயல்களால் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.பெரும்பாலும், நம் உணவு கார்போஹைட்ரேட் நிறைந்தது. அதிக கார்போஹைட்ரேட் உடலில் கொழுப்பாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படும். இதனால், உடல் பருமன் இந்தியப் பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது.சரி: கார்போஹைட்ரேட் குறைவாகவும், அதற்கு இணையாக, புரதம், கொழுப்புச்சத்து சமஅளவிலும், போதுமான அளவு நார்ச்சத்தும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவு குறைவாக எடுத்துக்கொள்ள நேர்கையில் ஊட்டச்சத்து இழப்பைத் தவிர்க்க, டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ், ஹெல்த்தியான நொறுக்குத்தீனிகள் எடுத்துக்கொள்ளலாம். உணவைத் தவிர்த்தால், வளர்சிதை மாற்றம் மாறுபடும்.மீதமான உணவு அடுத்தநாள் வைத்துப் பயன்படுத்தக்கூடியதாக இருந்தால் பயன்படுத்தலாம். இல்லை என்றால், உறுதியுடன் ‘நோ’ சொல்ல வேண்டும். அனைத்தையும் போட்டு நிரப்பிக்கொள்ள, வயிறு ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல.

வழக்கமான சமையலில் இருந்து அவ்வப்போது மாறுதல்களைச் செய்யலாம். டயட்டீஷியன், நியூட்ரீஷியனிஸ்ட் பரிந்துரையைப் பெற்று, அதன் அடிப்படையில் சிறுதானியங்கள், பச்சைக் காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.புதுமையான ரெசிபிகளைச் செய்யும்போது, குடும்பத்தினரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ளாமை

பெண்கள் சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்வது இல்லை. அதற்கு பதில், காபி, டீ மட்டும் அருந்திவிட்டு எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு
செய்வர்.தவறு: காலையில் கணவனுக்கு குழந்தைக்கு உணவு தயாரித்து, அவர்களை அனுப்பிவிட்டு, வீட்டு வேலை எல்லாம் முடித்த பின் உணவு எடுத்துக்கொள்வது அல்லது காலை உணவைத் தவிர்த்துவிட்டு மதியம் உணவு எடுத்துக்கொள்வது பெரும்பாலான குடும்பத்தலைவிகளின் பழக்கம். அதேபோல, இரவு அனைவரும் உண்ட பிறகு கடைசியில் மிச்சம் மீதியை உட்கொள்வர்.
சரி: யாராக இருந்தாலும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

மேலும், இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையில், 10 மணி நேரத்துக்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது.

நீண்ட இடைவெளி இருந்தால், அது செரிமானத்தைப் பாதிக்கும். அதிகம் சாப்பிட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும். இதனால், உடல் பருமன் ஏற்படும்.

காலை உணவை 8 மணிக்குள்ளும், மதிய உணவை 1-2 மணிக்குள்ளும், இரவு உணவை 7-8 மணிக்குள்ளும் சாப்பிட வேண்டும்.

அன்றைய தினத்தை திட்டமிட்டுச் செயல்பட்டாலே, நேரமின்மை பிரச்னையைத் தவிர்க்கலாம்.

உடற்பயிற்சி இல்லாமை

பெண்கள், திருமணத்துக்குப் பிறகு உடல் பருமனாக இருக்கின்றனர். இதனால், மூட்டு வலி, ஹார்மோன் செயல்திறன் குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
தவறு: ‘சமையல், வீட்டை சுத்தம்செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது என்று வீட்டு வேலைகள் அனைத்தும் செய்வதே ஒரு மிகப்பெரிய உடற்பயிற்சிதான். எனவே, தனியாக உடற்பயிற்சி செய்வது அவசியம் இல்லை’ என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர்.

சரி: வீட்டு வேலைகள் செய்வதால், ஓரளவுக்கு கலோரி எரிக்கப்படுவது உண்மைதான். ஆனால், எடுக்கும் கலோரிக்கு இணையாக இவை எரிக்கப்படுவது இல்லை.
இதனால், உடல் பருமன், சர்க்கரை நோய் எனப் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, தினசரி 45 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்யலாம்.
முடிந்தால், ஜிம்மில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பல பெண்கள், ஆர்வத்துடன் ஜிம்மில் சேர்வார்கள். சில வாரங்கள் பயிற்சி செய்வார்கள். பிறகு, “உடல் இளைக்கவில்லை” என, ஜிம்முக்குச் செல்வதையே நிறுத்திவிடுவார்கள்.

அதீத கற்பனை, ஆசைகளுடன் ஜிம்முக்குச் செல்லக் கூடாது. இலக்கை நிர்ணயித்து, கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறைத்து, ஃபிட்டாக வேண்டும். தினசரி நடைப்பயிற்சி, வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சிகளைச் செய்யலாம். இது, உடலை உறுதியாக்கும்.உடற்பயிற்சி, மனதை அமைதிப்படுத்தும். உடல் எடை கட்டுக்குள் இருக்க உதவும். நல்ல தூக்கம் வரும். இதனுடன், யோகா, தியானம், நடைப்பயிற்சி, நீச்சல் போன்றவற்றையும் செய்யலாம்.

குழந்தைப்பேறுக்குப் பிறகு பெரும்பாலான பெண்களுக்குத் தங்கள் உடல் மீது உள்ள ஈர்ப்புக் குறைந்துவிடுகிறது அல்லது அதிக வேலை, குழந்தைப் பராமரிப்பு காரணமாக, உடல் மீது கவனம் செலுத்த முடிவது இல்லை. முதலில், தங்கள் உடலை நேசிக்க வேண்டும். அப்படி நேசித்தால் மட்டுமே அதற்கு எது நல்லதோ அதைச் செய்ய முடியும். உடலை ஆரோக்கியமாக, ஃபிட்டாக பராமரிக்க என்ன செய்ய வேண்டும் என்ற தேடுதல் இருக்க வேண்டும்.

சுய மருத்துவம்

குடும்பத்தினருக்கு உடல்நலக் குறைவு என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, அவர்களுக்கான பிரத்யேக உணவு தயாரித்துக் கொடுப்பது, சரியான நேரத்துக்கு மாத்திரை மருந்து கொடுப்பது என்று கவனித்துக்கொள்வர். அதுவே தங்களுக்கு என்று வரும்போது உடலை கவனிக்க மாட்டார்கள்.

தவறு: நீண்ட காலம் தலைவலி, வயிற்றுவலி இருக்கும். மருந்துக் கடையில் மாத்திரை வாங்கி வரச்சொல்லி எடுத்துக்கொள்வார்கள். அதிக அளவில் சுய மருத்துவம், வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்கள் பெண்கள்தான். இதனால், பிரச்னையை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுக்காமல், முற்றிய நிலையில் மருத்துவமனைக்குச் செல்லும் நிலைக்கு ஆளாகின்றனர். இதனால், அதிக செலவும், மனஉளைச்சலும்தான் உருவாகின்றன.

சரி: காய்ச்சல் என்றால் ஓரிரண்டு நாட்களுக்குத்தான் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியாகவில்லை என்றால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
எப்போதோ ஒரு நாள் வரும் தலைவலி, வயிற்றுவலிக்கு மருத்துவரை அணுக வேண்டியது இல்லை. ஆனால், தொடர்ச்சியாகப் பிரச்னை இருந்தால், இடைவெளிவிட்டு மீண்டும் மீண்டும் வந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இதனால், மிகப்பெரிய பாதிப்பு வருவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியும்.

உடல்நலக் குறைவு இருந்தால், தயங்காமல் ஓய்வு எடுக்க வேண்டும். வேலைக்குச் செல்பவராக இருந்தால், விடுப்பு எடுத்து ஓய்வெடுக்க வேண்டும்.ஆண்டுக்கு ஒரு முறையாவது மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

தூக்கமின்மை

குடும்பத் தலைவிகள் பெரும்பாலும் நான்கைந்து மணி நேரம் தூங்குவதே பெரிய விஷயமாக இருக்கிறது. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, இரவு 12 மணிக்குப் படுக்கைக்குச் செல்லும் பெண், அதிகாலை நான்கைந்து மணிக்கு விழித்து, காலை உணவைத் தயாரிக்க வேண்டி உள்ளது.

இதனால், தூக்கம் தொலைத்து உடல் நலனைக் கெடுத்துக்கொள்கிறார்கள்.
தவறு: குடும்பத் தலைவிகள், தங்களுக்கு என்று நேரம் ஒதுக்காமல், வேலை வேலை என்று இருக்கின்றனர். முன்பு, மதிய நேரத்தில் குட்டித்தூக்கம் போடும் பழக்கம் இருந்தது. ஆனால், இன்றோ அந்த நேரத்தை டி.வி சீரியலுக்குக் கொடுத்துவிடுகின்றனர். இதனால், போதுமான ஓய்வு இன்றி பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

சரி: இன்றும் ‘பின் தூங்கி, முன் எழும்’ பழக்கம் பெண்களுக்கு உள்ளது. இது ஏழு முதல் எட்டு மணி நேரத் தூக்கமாக இருந்தால் தவறு இல்லை. ஏழு மணி நேரத்துக்கும் குறைவான நேரம் தூக்கம் என்றால் தவறு.எட்டு மணி நேரம் தொடர்ந்து எந்தத் தடையும் இன்றி தூங்கும்போதுதான், உடல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும்.

- சரஸ்