சின்னம்மை… தடுக்க… தவிர்க்க!



நவீன மருத்துவம் எவ்வளவோ முன்னேறிய இன்றைய நாட்களிலும் சின்னம்மை நமக்கு சவாலான ஒரு பிரச்சனைதான். என்னதான் தடுப்பூசி கண்டுபிடித்தாலும் இன்றும் பலருக்கும் சின்னம்மை பரவிக்கொண்டுதான் உள்ளது.
அம்மையை கடவுளோடு தொடர்புபடுத்தி வீட்டிலேயே வேப்பிலை கட்டி படுக்க வைத்ததெல்லாம் அக்காலத்தில் சுத்தமாகவும் ஒதுக்கமாகவும் இருக்க வேண்டும் என்ற புரிதலில்தான். வேப்பிலை மருத்துவக்குணம் கொண்டது என்பதால்தான் வேப்பிலைய அம்மைக்குப் பயன்படுத்தினார்கள். இன்று அம்மை குறித்த நவீன மருத்துவப் புரிதல் நன்கு உருவாகியுள்ளது. அது சார்ந்த விழிப்புணர்வு மக்களிடையே உருவாக வேண்டியது அவசியம்.

சின்னம்மை வருவதற்கு காரணமானது வெரிசெல்லா-ஜோஸ்டர் என்னும் நுண்ணுயிரியாகும். இது எரிச்சல் தரும் திரவம் நிறைந்த, சிறிய கொப்புளங்களுடன் கூடிய சினப்பை உருவாக்குகிறது. இதுவரை சின்னம்மை நோய் வாராதவர்கள் அல்லது அதற்கு எதிராக தடுப்பூசி போடாதவர்களை இது மிக விரைவாகத் தொற்றிக்கொள்ளும். தடுப்பூசி போடுவதன் மூலம் குழந்தைகளை சின்னம்மையிலிருந்து பாதுகாக்க முடியும்.

அமெரிக்காவில் உள்ள நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் அவ்வப்போது தடுப்பூசிகளைப் பரிந்துரைக்கின்றன.தடுப்பூசி போடுவதன் குறிக்கோளானது, பாதுகாப்பான மற்றும் திறமையான வழியில் சின்னம்மை நோய் மற்றும் அதன் விளைவுகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பதேயாகும்.

 உங்களுக்கு ஏற்கெனவே சின்னம்மை வந்திருந்தால், வேறு ஒருவரிடம் இருந்து உங்களுக்குப் பரவாது. நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் எந்த வயதிலும் சின்னம்மை உங்களைத் தாக்கலாம். சின்னம்மை நோய் வந்த பெரியவர்கள் உடல்நிலை மிகவும் சரியில்லாமல் போகலாம். எனவே, குழந்தைப் பருவத்தில் சின்னம்மை வருவது அல்லது அதைத் தவிர்க்க தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது.

சின்னம்மை பரவும் முறை

சின்னம்மை எந்த வயதுள்ள குழந்தையையும் பாதிக்கும். உங்கள் குழந்தை நோய்வாய்ப்படுவதற்கு முன்பு சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்ட பின் ஒன்று முதல் மூன்று வாரங்கள் வரை நன்றாக இருப்பதாகத் தோன்றலாம். நோயின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு முதல் தோல் சினப்பு தொடங்கிய ஐந்து நாட்களுக்குப் பிறகு வரை, குழந்தைகள் நுண்ணுயிரியை பிறருக்குப் பரப்பலாம்.நுண்ணுயிரி பின்வரும் வகைகளில் பிறருக்குப் பரவுகிறது:

1.சின்னம்மையால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொள்ளுதல்

2.பாதிக்கப்பட்ட நபரின் தும்மல் அல்லது இருமலை சுவாசத்தில் உள்ளிழுப்பது

3.பாதிக்கப்பட்ட குழந்தையின் கண்ணீர், மூக்கு ஒழுகல் அல்லது வாயிலிருந்து எச்சில் போன்ற உடல் திரவங்களுடன் தொடர்பு கொள்ளுதல்

அறிகுறிகள்

சின்னம்மை அறிகுறிகள் மிகவும் வெளிப்படையானவை. ஒரு குழந்தைக்கு சின்னம்மை இருக்கிறதா என்பதை, அவரது தோலைப் பார்த்து, சுகாதார பராமரிப்பு அளிப்பவர்கள் எளிதாகக் கண்டறிவார்கள். சின்னம்மை அறிகுறிகள் பொதுவாகப் பின்வரும் வரிசையில் நிகழ்கின்றன:

1.காய்ச்சல்

2.உடல் சோர்வடைதல்

3.தலைவலி

4.ஓரிரு நாட்கள் நீடிக்கும் வயிற்று வலி

5.மிகவும் எரிச்சல் தரும், கூட்டமான சிறிய கொப்புளங்களை ஒத்திருக்கும் சினப்பு

6.குழியான பகுதிகளில் பால் போன்ற நீர் நிரம்பி இருப்பது

7.கொப்புளங்கள் உடைந்த பிறகு, சிரங்குகள் போல தெரிவது

8.தோற்றத்தில் நிறம் மாறிய தோல்

9.மறைந்து போகும் கரும்புள்ளிகள்

சின்னம்மை நோய் சிக்கல்களின் அபாயங்கள் என்ன?

சின்னம்மையால் சிக்கல்கள் ஏற்படுவது அரிதானது, ஆனால் அவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அவற்றில் பின்வருவன உள்ளடங்கி இருக்கலாம்:
தோல், இரத்த ஓட்டம் மற்றும் மென்மையான திசுக்களில் பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது.

 மூளை வீக்கம்
 நுரையீரல் அழற்சி (நிமோனியா)
நீர்ச்சத்து இழப்பு
இரத்தம் உறைதல் அல்லது குணமடைவதில் சிக்கல்கள்
கல்லீரல் பிரச்சினைகள்

சிகிச்சைகள்

சின்னம்மைக்குத் தடுப்பூசி ஒரு நல்ல தீர்வு. சின்னம்மை தடுப்பூசி பற்றி நாம்  என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?
நீங்கள் இரண்டு டோஸ் எடுக்க வேண்டுமென்று பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் குழந்தை 13 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், முதல் டோஸ் 12 முதல் 15 மாதங்களுக்குள் கொடுக்கப்பட வேண்டும், இரண்டாவது டோஸ் 4 முதல் 6 வயதிற்குள் கொடுக்கப்பட வேண்டும்.

நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், இதற்கு முன் தடுப்பூசி போடாதவராகவும் இருந்தால், குறைந்தது 28 நாட்கள் இடைவெளியில் பிரித்து 2 டோஸ்களை எடுத்துக்கொள்ள வேண்டும். சின்னம்மை தடுப்பூசி அந்த நோயைத் தவிர்ப்பதில் கிட்டத்தட்ட 90% திறனுள்ளதாக இருக்கும்.

சின்னம்மைக்கு யார் தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாது?

சின்னம்மை தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாத சிலர் இருக்கிறார்கள். உங்களுக்கு பின்வரும் நிலைமைகள் இருந்தால், நீங்கள் சின்னம்மை தடுப்பூசி
போட்டுக் கொள்ளக்கூடாது:

1.தடுப்பூசி அல்லது அதில் உள்ளடங்கிய பொருட்களை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் எவரும்

2.கர்ப்பமாக இருக்கும் அல்லது அவர் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகம் கொண்ட ஒருவர்

3.உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் பிரச்சினைகள் இருந்தால்

4.காசநோயாளி

5.உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததாக இல்லை என்றால்

6.உங்களுக்கு இரத்தம் ஏற்றப்பட்டு இருந்தால் அல்லது ஏதேனும் உயிரியல் தடுப்பூசிகளைப் பெற்றிருந்தால்.

சின்னம்மை
சில விளக்கங்கள்

சின்னம்மையின் 3 நிலைகளுக்கு இடையில் என்ன வித்தியாசம்?

சின்னம்மையின் மூன்று நிலைகள் சினப்பின் தோற்றத்தைப் பொறுத்தது. முதல் நிலை சிவப்பாகவும் மற்றும் கரடுமுரடாகவும் உள்ள சினப்பு. திரவம் நிறைந்த கொப்புளங்கள் கொண்ட சினப்பு இரண்டாவது நிலையாகும். மூன்றாவது நிலையில் கொப்புளங்கள் வெடித்து பொக்குகள் ஏற்படுவது.

சின்னம்மை வரும்போது, அது வழக்கமாக எங்கிருந்து தொடங்குகிறது?

சின்னம்மை பொதுவாக முதலில் உங்கள் முகம் மற்றும் உடற்பகுதியில் தோன்றும். பின்னர் அது உங்கள் உடலின் எஞ்சிய பகுதி முழுவதும் பரவுகிறது.
எனக்கு இரண்டு முறை சின்னம்மை வருமா?ஒருவருக்கு இரண்டு முறை சின்னம்மை வருவது அசாதாரணமானது, ஆனால் அது நடக்கும்.

சின்னம்மை எவ்வளவு காலம் நீடிக்கும்?

சின்னம்மை பொதுவாக 10 முதல் 14 நாட்கள் இருந்து பின்னர் போய்விடும்.தடுப்பூசி பாதுகாப்பானதா மற்றும் திறனுள்ளதா?

தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அடிக்கடி கேள்வி எழுப்புகின்றனர். சின்னம்மை தடுப்பூசி அறிமுகப்படுத்தியதில் இருந்து அது திறனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை ஆய்வுகள் தொடர்ந்து உறுதிப்படுத்தியுள்ளன. சிவத்தல், வலி, வீக்கம், மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில், ஊசி குத்திய இடத்தில் சிறு கட்டிகள் ஆகிய அனைத்தும் பொதுவான பக்க விளைவுகளாகும்.