ஹோம்லி ப்யூட்டி ப்ரியா பவானி சங்கர்



டயட், ஃபிட்னெஸ் டிப்ஸ்!

ப்ரியா பவானி சங்கரிடம் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் இருக்கின்றன. இன்றைய தேதிக்கு கோலிவுட்டின் ஹாட் கேக் இந்த ஹோம்லி குயின்தான். இப்படி எவர் க்ரீன் ஏஞ்சலாக இருக்க எப்படிச் சாத்தியம் என்று ஃபிட்னென்ஸ் சீக்ரெட் கேட்டோம்.

‘சில வருடங்களுக்கு  முன்பு வரை நான்  ஃபிட்னெஸ் பற்றி எல்லாம் யோசித்ததுகூட கிடையாது. இப்போது   என் பணி காரணமாக, ஃபிட்னெஸுக்கு  முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறேன். வாரத்தில் ஆறு நாட்களும் வொர்க்-அவுட் செய்கிறேன். என் ஃபிட்னெஸ் டிரைனர் அறிவுரைப்படி தினமும் ஜிம்மில் மெனக்கெடுகிறேன். 
யாருக்கு எந்த வொர்க் அவுட் தர வேண்டும் என்பதை இருபத்தி நான்கு மணி நேரமும் யோசிப்பவர் அவர், என்பதால் ஒரு நிபுணரிடம் நம்மை ஒப்படைப்பது நமக்கு நல்லதென நினைத்தேன். அதனால், எனது ஃபிட்னெஸ் டிரைனர்  என்ன சொல்கிறாரோ அதைத்தான்  பின்பற்றிவருகிறேன்.   

தினமும் ஜிம்முக்கு போய்   சுமார் இரண்டு மணி நேரம் வொர்க்அவுட் செய்கிறேன். இதில், கார்டியோ எக்சர்சைஸ், ஃப்ளோர் எக்சர்சைஸ், ஸ்ட்ரென்த் எக்சர்சைஸ் நிச்சயமாக இருக்கும்.  இதைத்தவிர, டிரக்கிங்  போவது,  சைக்கிளிங்  செய்வது  ரொம்பப் பிடிக்கும்.  அவ்வப்போது அதற்கான நேரத்தையும் ஒதுக்குகிறேன்.

என்னை பொருத்தவரை,  டயட்டில் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் கிடையாது. வெளியூர் படப்பிடிப்புக்குச் செல்லும்போது வெஜிடேரியன், நான்வெஜிடேரியன், சைனீஸ் வகை உணவுகளை நிறையச் சாப்பிடுவேன். ஹெல்த் ட்ரிங்ஸ் எடுத்துக்க மாட்டேன். என்னுடைய ஃபேவரைட் உணவு, பாசுமதி அரிசியில் செய்யப்பட்ட செட்டிநாடு மட்டன் பிரியாணிதான்.

எதுக்கு சம்பாதிக்கிறோம்.  எதுக்கு வாழறோம். பிடிச்சதை சாப்பிட்டு சந்தோஷமா இருக்கலாமே என்று நினைப்பவள் நான். அதனால் டயட் எல்லாம் எனக்கு செட்டாகாது. கூடுமானவரை உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்வேன் அவ்வளவுதான்.  ஒருவேளை டயட்டை நான்   கடைப்பிடித்திருந்தால்,  என்னுடைய  வொர்க் அவுட்  டைம்  ஒரு அரை மணி நேரம்  குறைந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

அது இல்லாததால்தான் இரண்டு  மணி நேரம் செய்ய வேண்டி இருக்கிறது என்று நினைக்கிறேன். ஸ்லிம்மாக இருப்பதுதான்  ஃபிட்டாக இருப்பது என்று நினைப்பதோ  அல்லது ஸ்லிம்மாக  இருப்பதுதான்  அழகு என்று நினைப்பதோ தவறு. என்னைப்  பொருத்தவரை  அழகுக்கு  எந்தவித வரையறையும்  கிடையாது.   ஃபிட்டாக இருப்பதும் ஆரோக்கியமாக இருப்பதும்  நமக்கு  ஒருவித நம்பிக்கையைக் கொடுக்கும்.  அந்த  நம்பிக்கைதான்  உண்மையான அழகு  என்று நினைக்கிறேன்.

நான் ஒரு காஸ்மடிக் பெர்சன் கிடையாது.  மேக்கப் பொருட்களை எல்லாம் அவ்வளவாக விரும்பமாட்டேன்.  சூட்டிங்கின்போது தேவைப்படுகிற  மேக்கப்பை  செய்து கொள்வேன் அவ்வளவுதான்.  ஸ்கின் கேருக்காக  நேச்சுரல்  ரெமடிஸ்கூட நான்  செய்வதில்லை. உதாரணமாக, என் டெர்மடாலிஜ்ட் சொல்லுவாங்க, தக்காளி நல்லது என்றால்  அதைச் சாப்பிடுங்க, முகத்தில்  போடதீங்க.  தயிர் நல்லது என்றால்  சாப்பிடுங்கள்.

முகத்தில்  போடதீங்க என்று  அதைதான்   பாலோ பண்ணிட்டு  இருக்கேன்.  மற்றபடி  ஹோம் ரெமடிஸ்  எதுவும்  எனக்கு  செட்டாகாது  என்பதால அதை  முயற்சி செய்வதில்லை. மற்றபடி  ஸ்கின் கேர் குறித்து என்னுடைய  டெர்மடாலஜிஸ்ட்டிடம் ஒப்படைத்துவிட்டேன். அதனால்  அதையெல்லாம்  அவர்கள்  பார்த்துக்கொள்வார்கள்.

ஒரு பொண்ணு  சிவந்த நிறமா இருக்கணும்,  ஒல்லியா இருக்கணும்  அதுதான்  அழகு என்பதிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது.  நம்முடைய கண்ணுக்கு நாம அழகா தெரிஞ்சா போதும். உடலை ஆரோக்கியமா வெச்சுக்கணும். அதுதான் முக்கியம்.  உங்கள் ஆரோக்கியத்தில்  கவனம் செலுத்தினாலே  உங்களுக்கு  ஒரு தன்னம்பிக்கை  வரும்.  அந்த தன்னம்பிக்கைதான்  அழகு. அதுபோன்று நம்மை சுற்றி  நிறைய  நெகடிவிட்டி இருக்கும்.

அதையெல்லாம்  மனதில்  ஏற்றிக்கொள்ளாமல்   எப்போதும் பாஸிட்டிவான  விஷயங்களையே  எண்ண வேண்டும்.  என்னைப் பொருத்தவரை யாராவது  என்னை   விமர்சனம்  செய்தால்,  அதை செய்வதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதைத்தான்  யோசிப்பேன்.  அதனால்,  எந்த  விமர்சனத்தையும்  நான் பாஸிட்டிவ்வாக மாற்றிக் கொள்வேன்.

ஆரோக்கியமாக  இருக்க,  மாதத்தில்  இரண்டு நாளாவது,  உங்களுடைய  சோஷியல்  நெட்வொர்க்  எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உங்களுடைய  நெருங்கிய உறவுகளுடன்  நேரத்தைச் செலவிடுங்கள். அது உங்களுக்கு  மகிழ்ச்சியை கொடுக்கும்.  அதுவே  உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்’ என்று எதார்த்தமாகச் சிரிக்கிறார் ப்ரியா.

- ஸ்ரீதேவி குமரேசன்