செக்கச் சிவந்த செர்ரி!



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் நிறத்திலும் சுவைக்கத் தூண்டும் வகையிலும் ஆனது செர்ரிப்பழம். செர்ரிப்
பழம் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இப்பழத்தின்  மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்:செர்ரிப்பழம் குறைந்த கலோரியை உடையது. வைட்டமின் சி நிறைந்தது. துத்த
நாகம், இரும்பு, பொட்டாசியம், மற்றும் மாங்கனீஸ் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.

செர்ரிப்பழத்தின் தோல், ஆன்தோசையனின் பிக்மென்ட்ஸ்சை அதிகமாகக் கொண்டது. இந்த ஆன்தோசையனின் பிக்மென்ட்ஸ் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடன்டாக (Anti-Oxidents) செயல்படுகிறது. இதனால் வயது மூப்பினால் வரும் உடற்பருமன், புற்றுநோய், நரம்பியல் நோய் மற்றும் சர்க்கரை நோய் அணுகாமல்  தடுக்கிறது. மேலும், செர்ரியில் உள்ள ஆன்தோசையனின், மூட்டுகளில் தேங்கும் யூரிக் அமிலத்தை அகற்றி, மூட்டுவலி, வீக்கத்தை குறைக்கிறது.

செர்ரிப்பழத்தில் பைட்டோஸ்டெரால் அதிகமுள்ளதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பினைக் கரைத்து உடல் எடையை சீராகப் பராமிக்க உதவுகிறது. இயற்கை உணவுகளால் உடல்எடையைக் குறைக்க விரும்புவோர் தினமும் செர்ரிப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.செர்ரிப்பழத்தில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது.

இது நமது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், சருமத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. இதனால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான இளமையில் முதுமையான தோற்றம், வறண்ட தோல், தோல் சுருக்கம் போன்றவற்றிற்கும் நல்ல தீர்வு தருகிறது.  மேலும், பல்வேறு பருவகால நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

இப்பழத்தினை  தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது. ஞாபகசக்தியை அதிகரிக்க உதவுகின்றது. கண்பார்வை பிரச்சினைகளை சரிசெய்கின்றது.

மேலும் தூக்கமின்மையினால் வரும் தலைவலி, எரிச்சல், சோர்வுஇவற்றைப் போக்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கிறது.செர்ரிப்பழத்தில் அடங்கியிருக்கம் வைட்டமின்கள் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தைத் தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

-ஸ்ரீ