நிணத்திசுப் புற்றுநோய் தடுப்பது எப்படி?



நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பது நிணநீர் மண்டலம் (Lymphatic system). ரத்தச் சுற்றோட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கிறது. ரத்தத் தந்துகிகளின் தமனிப் பகுதி ரத்தம் அதிக அழுத்தத்துடன் இருக்கும் என்பதால், அந்த ரத்தத்திலிருந்து சிறிதளவு பிளாஸ்மா, நிணவணுக்கள், சில புரதங்கள், செல்களின் சில கழிவுகள், சில கரைசல் பொருட்கள் ஆகியவை தந்துகிகளிலிருந்து வடிகட்டப்பட்டு, ஒரு வெளிர் திரவமாக திசுக்களிலுள்ள செல்களுக்கு இடையே வருகிறது. இதுதான் ‘நிணநீர்’ (Lymph). நாளொன்றுக்கு 2லிருந்து 3லிட்டர் வரை நிணநீர் சுரக்கிறது.
 
நிணக்கணுக்கள் என்பது என்ன?

நிணநீர் உடலில் ஆங்காங்கே சிறு சிறு நிண நாளங்களில் சேகரிக்கப்படுகிறது. பல சிறிய நிண நாளங்கள் ஒன்று சேர்ந்து, பெரிய நிண நாளமாக உருவாகிறது. பேருந்து செல்லும் பாதையில் பேருந்து நிறுத்தங்கள் இருப்பதைப்போல், இந்த நாளங்கள் செல்லும் பாதையில் ‘நிணக்கணுக்கள்’ (Lymph nodes) இருக்கின்றன. குறிப்பாக, தலை, கழுத்து, அக்குள், வயிறு, தொடை இடுக்குகள் ஆகிய இடங்களில், தோலுக்கு அடியில், ஒரு பட்டாணிக் குவியல் மாதிரி காணப்படுகின்றன. இப்படி, உடலில் சுமார் 600 நிணக்கணுக்கள் இருக்கின்றன.

எங்கும் ஒரு சங்கிலித் தொடர்போல் அமைந்துள்ள நிண நாளங்கள் தாம் கொண்டுவரும் நிணநீரை அருகில் உள்ள நிணக்கணுக்களில் சேர்க்கின்றன. அந்த நிணக்கணுக்களில் இருந்து வேறு புதிய நிண நாளங்கள் புறப்படுகின்றன. அவற்றில் மறுபடியும் நிணநீர் பயணிக்கிறது. இறுதியில் இந்த நாளங்கள் வலது, இடது கழுத்துப் பட்டை எலும்பின் அடியிலுள்ள சிரைக்குழாய்களில் (Subclavian veins) இணைகின்றன. அதன் வழியே ரத்த ஓட்டத்தில் நிணநீர் கலக்கிறது.

நிண நாளங்களில் வால்வுகள் உள்ளதால், நிணநீர்ப் போக்குவரத்து ஒரு திசைப் பயணமாக இதயத்தை நோக்கியே நிகழ்கிறது. நிண நாளங்களைச் சுற்றியுள்ள தசைகளின் இயக்கத்தால் இந்தப் போக்குவரத்து சாத்தியமாகிறது. அப்போது  திசுக்களிலிருந்து பாக்டீரியா மற்றும் சில நுண்ணுயிரிகளை நிணநீர் உறிஞ்சிக்கொள்கிறது. அவற்றை நிணக்கணுக்கள், மண்ணீரல், தைமஸ் ஆகிய நிணவகை உறுப்புகள் வடிகட்டி வெளியேற்றுகின்றன.

இவ்வாறு, நிணநீர், நிண நாளங்கள், நிணக்கணுக்கள், தைமஸ், மண்ணீரல், எலும்பு மஜ்ஜை, குடல் மற்றும் சுவாச மண்டல நிணத்திசுக்கள் போன்ற நிணவகை உறுப்புகள் அனைத்தையும்
கொண்டது நிணநீர் மண்டலம்.
 
என்ன பணி செய்கிறது?  

நிணநீரில் கலக்கும் உடல் கழிவுகளை நீக்கி, நோய்க்கிருமிகளை அழித்து, அயல்பொருட்களை அகற்றிச் சுத்தப்படுத்தி, மீண்டும் அந்த நிணநீரை ரத்தத்துக்கு  அனுப்புவது இந்த மண்டலத்தின் முக்கிய வேலை. அதோடு, தந்துகிகளின் சுவரில் நுழைய முடியாத அளவுக்குப் பெரிதாக உள்ள உணவு மூலக்கூறுகள் நிண நாளங்களின் வழியே உடலுக்குள் செல்கின்றன. உதாரணமாக, குடலில் குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்படும் கொழுப்பு உணவு நிண நாளங்கள் வழியாகவே ரத்தத்தில் கலக்கிறது.  

நெறிகட்டு என்பது என்ன?  

நோய்த்தொற்று ஏற்படும்போது, உடலுக்குள் புகுந்துகொள்ளும் நோய்க்  கிருமிகளோடு போராடி அவற்றை அழிப்பதற்கு நிணக்கணுக்கள் நிறைய நிணவணுக்களைத் துணைக்கு அழைத்துக் கொள்கின்றன. அப்போது நிணக்கணுக்கள் கோலிக்குண்டு அளவுக்குப் பெரிதாகின்றன. இந்த நிலைமையைத்தான் ‘நிணக்கணு வீக்கம்’ அல்லது ‘நெறிகட்டு’ என்கிறோம்.

உதாரணமாக, காலில் புண் வந்தால் தொடை இடுக்கில் நெறி கட்டும். நோய்க்கிருமிகளின் பாதிப்பு மிக அதிகமாக இருந்து, அது நிண நாளங்களை அடைத்துக்கொள்ளுமானால், திசுக்களில் நீர் கோத்து, வீங்கிவிடும். பாதங்களில் நோய்த்தொற்று ஏற்படும்போது கால் முழுவதும் சிவப்பு நிறத்தில் வீங்குவது இப்படித்தான்.  

உடலில் புற்றுநோய் இருந்தால், அது உடலுக்குள் பரவக்கூடிய பாதைகளில் ஒன்று நிணநீர்ப் பாதை. எந்த உடற்பகுதியில் புற்றுநோய் இருக்கிறதோ அதோடு தொடர்புடைய நிணக்கணுக்களைத் திசு ஆய்வு (Biopsy) செய்தால், புற்றுநோய் பரவியுள்ளதா என்பது தெரிந்துவிடும். உதாரணமாக, மார்பகத்தில் புற்றுநோய் இருந்தால், அக்குளில் உள்ள நிணக்கணுக்களைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ள முடியும்.  

நிணத்திசுப் புற்றுநோய்  

உடலுக்குள் இருக்கும் ஒரு புற்றுநோய் வகையானது நிணத்திசுக்களில் பரவுவது ஒருபுறம் இருக்க, நிணத்திசுக்களிலேயே புற்றுநோய் ஏற்படுவதும் உண்டு. அந்த வகைக்கு ‘நிணத்திசுப் புற்றுநோய்’ (Lymphoma) என்று பெயர். இதில் இருவகை உள்ளன. 1. ஹாட்ஜ்கின்ஸ் நிணத்திசுப் புற்றுநோய் (Hodgkin’s Lymphoma) 2. ஹாட்ஜ்கின்ஸ் அல்லாத நிணத்திசுப் புற்றுநோய் (Non-Hodgkin’s Lymphoma). 

இவை இரண்டுக்கும் பொதுவான தன்மைகள் உள்ளன. அதேநேரத்தில் இவை பரவும் விதத்தில் சில வித்தியாசங்கள் உண்டு. அவற்றைப் பொறுத்து சிகிச்சை முறைகள் வேறுபடுவதுண்டு. நாம் இவற்றின் பொதுவான குணங்களை மட்டும் இப்போது பார்ப்போம்.  

அபாயக் காரணிகள் என்னென்ன?  

ரத்தவெள்ளணுக்களில் ‘பி’ செல் (B cell), ‘டி’ செல் (T cell) என இருவகை உண்டு. இந்த செல்கள் பிரிந்து வளரும்போது அவற்றின் டி.என்.ஏ. (D.N.A) எனும் இரட்டை வட மரபணுச் சரடுகளில் பிறழ்வுகள் (Mutation) ஏற்பட்டு புற்றுசெல்களாக மாறுவதுதான் நிணத்திசுப் புற்றுநோயின் அடிப்படை அறிவியல். பெரும்பாலானோருக்கு ‘பி’ செல்களில்தான் இந்த மாற்றம் ஏற்படுகிறது. இது நிணத்திசுக்களை மட்டுமல்லாமல், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றையும் பாதிக்கிறது.  

1.வயது: சிறு வயதிலேயே வரக்கூடிய புற்றுநோய் இது. ஆனாலும் 20 - 30 வயதினருக்கும் 55 வயதிற்குப் பிறகும் வருகிறது.

2.வம்சாவளி: பெற்றோருக்கு இந்தப் புற்றுநோய் வந்திருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு இது வர வாய்ப்பிருக்கிறது.  

3.பாலினம்: பெண்களைவிட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உண்டு.  

4.பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி: உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இது வருகிறது.  

5.தொற்றுநோய்கள்: சில வைரஸ் தொற்றுக்கள் நீடிக்கும்போது இது வரலாம். உதாரணத்துக்கு, எப்ஸ்டின் பார் வைரஸ் (Epstein-barr virus) மற்றும் ஹெச்ஐவி வைரஸ் (HIV virus) நிணத்திசுப் புற்றுநோயை உருவாக்குகின்றன.  
 
அறிகுறிகள் என்னென்ன?

1.கழுத்தில் வலி இல்லாத நெறிகட்டிகள் தோன்றுவது. 2 செ.மீ.க்கும் அதிகமாக வீங்குவது. தொட்டால், கல் போன்று கடினமாக இருப்பது.  

2.அக்குள், தொடைப் பகுதிகளி்லும் நடுநெஞ்சிலும் இந்த மாதிரி நெறிகட்டிகள் ஏற்படலாம்.  

3.விட்டுவிட்டு காய்ச்சல் வருவது.  

4.பசி குறைவது.  

5.உடல் சோர்வு.  

6.உடல் எடை குறைவது.  

7.இரவில் வியர்ப்பது.  

8.எலும்புகளில் வலி ஏற்படுவது.  

9.நடு நெஞ்சிலும் வயிற்றிலும் அடிக்கடி வலி வரலாம்.  

10.உடலெங்கும் அரிப்பு ஏற்படலாம்.  

இந்த அறிகுறிகள் எல்லாமே சாதாரண நோய்களிலும் ஏற்படக்கூடும். ஆகவே, இவை இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். காரணம், ஒருவேளை இவை நிணத்திசுப் புற்றுநோயின் அறிகுறிகளாக இருந்தால், அதை ஆரம்பத்திலேயே கணித்துவிட்டால், புற்றுநோய் 100 சதவீதம் குணமாவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பை நம் அலட்சியப்போக்கால், தவற விட்டுவிடக்கூடாது.  

பரிசோதனைகள் என்னென்ன?  

வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், மார்பு எக்ஸ்-ரே, வயிற்று அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, சி.டி.ஸ்கேன் (CT Scan), எம்.ஆர்.ஐ. ஸ்கேன் (MRI Scan), ‘பெட் - சிடி’ ஸ்கேன் (PET-CT Scan) போன்ற பரிசோதனைகள் நோயாளியின் தேவையைப் பொறுத்து மேற்கொள்ளப்படும். புற்றுநோயை உறுதி செய்ய திசு ஆய்வும் மேற்கொள்ளப்படும்.  

புற்றுநோய் நிலைகள்  

நிலை 1: ஏதாவது ஒரு வகை நிணத்திசுவில் மட்டும் புற்றுநோய் காணப்படும் ஆரம்ப நிலை இது. உதாரணத்துக்கு, கழுத்தில் உள்ள நிணதிசுக்களில் மட்டும் புற்று காணப்படுவது.  

நிலை 2: இரண்டு பகுதிகளில் புற்றுநோய் காணப்படும் நிலை இது. உதாரணமாக, கழுத்து மற்றும் அக்குளில் புற்றுநோய் காணப்படுவது.  

நிலை 3: இரண்டாம் நிலையில் உள்ளவை அனைத்தும் உடலின் வலது, இடது என இரண்டு பக்கமும் காணப்படும் நிலை.  

நிலை 4: புற்றுநோய் கல்லீரல், மண்ணீரல், எலும்புகள் எனப் பல உறுப்புகளில் பரவியிருப்பது.  

சிகிச்சை முறைகள் என்னென்ன?  

நிணத்திசுப் புற்றுநோய்க்கு மருந்து சிகிச்சைதான் (Chemotherapy) பெரிதும் பயன்படுகிறது. சிலருக்கு உடலின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கதிர்வீச்சு சிகிச்சை (Field Radiotherapy) வழங்கப்படுகிறது. இன்னும் சிலருக்கு ‘பயோதெரபி’ (Biotherapy) எனும் சிகிச்சையும் வழங்கப்படுவது உண்டு.  

இந்த நோயாளிகள் சிகிச்சைக்குப் பிறகு பல ஆண்டுகள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டியது முக்கியம். காரணம், இந்தப் புற்றுநோய் மறுபடியும் வரக்கூடும். அப்போது மறுபடியும் மருந்து சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை பலன் தரும்.