கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-ஆடிக் காற்றும் அலர்ஜி பிரச்சனையும்!



ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் என்பது பழமொழி. எங்கள் பகுதியில் சித்திரை பத்துக்கு மேல் சிறந்த பெருங்காற்று என்றும் சொல்வார்கள். ஆடி மாதம் தென்மேற்குப் பருவக்காற்று வீசக்கூடிய காலம். காற்றினை ரசித்து அனுபவிக்கும் அதே வேளையில், உங்கள் வீட்டுக்குள்ளும், பணியிடங்களிலும் தூசும் குப்பைகூளமும் அதிகம் சேர்ந்து தொல்லை தருவதையும் பார்த்திருப்பீர்கள். காற்று அதிகம் வீசும் இந்தக் காலகட்டத்தில் கண் மருத்துவராகிய நாங்கள் சந்திக்கும் நோயாளிகளில் சராசரியாக பத்தில் ஒருவராவது ஒவ்வாமை பிரச்சனையுடன் வருகின்றனர். தும்மல், மூச்சிரைப்பு இவற்றுடன் கண் ஒவ்வாமையின் பாதிப்பும் சித்திரை, ஆடி மாதங்களில் அதிகம் பார்க்கிறோம்.

கண்களில் அரிப்பு, சிவப்பு, கண்களில் இருந்து கண்ணீர் வடிதல், நூல் போல பீழை சாடுதல் (Ropy discharge) இவையே ஒவ்வாமையின் அறிகுறிகள். ‘‘எனக்கு எப்பவும் டஸ்ட் அலர்ஜி உண்டு டாக்டர்! தும்மலும் இளைப்பும் வரும். இந்த தடவை கண்ணும் ரொம்ப அரிக்குது” என்று நோயாளிகள் கூறுவதுண்டு.காற்று சில நேரத்தில் அதிகம் காணப்பட்டாலும் வருடத்தில் எப்பொழுது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் ஒவ்வாமை வரலாம்.

தீராத ஒவ்வாமை சிலருக்கு மன உளைச்சலைக்கூட விளைவிப்பது உண்டு. ‘ ‘எங்க வீட்ல யாருக்குமே அலர்ஜி பிரச்சினையில்லை. எனக்கு மட்டும் ஏன் வருது?’’ என்பது பலரின் கேள்வி. ‘சூரியனுக்கு கீழே உள்ள அனைத்துமே, சூரியனுமேகூட ஒவ்வாமையைக் கொண்டுவரக்கூடும்’ (Everything under the sun, including the sun can cause allergy) என்பது மருத்துவத்துறையினர் அடிக்கடி கூறும் பொன்மொழிகளில் ஒன்று.

சிலருக்கு வெயில் பட்டால்கூட ஒத்துக்கொள்ளாது. தோலில் கொப்புளங்கள், வெடிப்புகள், அரிப்பு இவை தோன்றும். ஒருவருக்குப் பொருத்தமாக இருக்கும் உணவு மற்றவருக்கு ஒவ்வாமையை உருவாக்கக்கூடும். முட்டை, மீன், கத்தரிக்காய் போன்ற உணவுகளை உட்கொண்டு ஒவ்வாமை காரணமாக அவதிப்பட்டவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்‌. எந்த வகைக் காளான் சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்ளாது என்று கூறுபவர்களும் உண்டு; எத்தனையோ முறை காளான் சாப்பிட்டிருக்கிறேன், குறிப்பிட்ட வகையை சாப்பிட்டதில் ஒத்துக்கொள்ளாமல் மருத்துவமனையில் சேரும் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டது என்றவர்களும் உண்டு.

சிலருக்கு சில விதமான உடைகள் ஒத்துக்கொள்ளாது. பருத்தி உடை மட்டுமே அணிவார்கள். பட்டு, சிந்தெடிக் வகைகள் ஒவ்வாமை உண்டாக்கக்கூடும். தங்கம், வெள்ளியை சிலரது தோல் ஏற்றுக்கொள்ளும், கைக் கடிகாரத்தின் பட்டையில் இருக்கும் சிறிய உலோகம், சேஃப்டி பின் இவை தோலில் பட்டால் அரிப்பு உண்டாகும். இதை போலத்தான் கண்களுக்கும்.

தீராத கண் அரிப்பு மற்றும் சிவப்பால் அவதிப்பட்டு வந்தார் ஒரு பெண். எங்கெல்லாமோ அலைந்தேன், எவ்வளவோ செலவழித்தேன் என்றார். பெரிய மருத்துவமனைகள் முதல் சிறிய கிளினிக்குகள் வரை அலைந்திருக்கிறார். யாரோ செய்வினைக் கோளாறால் வந்தது இது என்று சொல்ல, பேய் ஓட்டும் இடத்துக்குக்கூட போனாராம். அவர் என்னிடம் வருகையில், உங்கள் வீட்டில் நாய் பூனை எதுவும் வளர்க்கிறீர்களா என்று கேட்டேன்.

‘ ‘நாங்க வளர்க்கல… ஆனா ஒரு பூனை அப்பப்ப வந்து எங்க வீட்ல குட்டி போட்டுட்டுப் போகும். எனக்கு குழந்தைங்க கிடையாதா, அதனால் போயிட்டுப் போகுதுன்னு விட்டுடுவேன்” என்றார். உடன் வந்த அவரது தம்பி, ‘‘டாக்டர் நீங்க சொல்றது கரெக்ட். எப்பெல்லாம் அந்தப் பூனை வருதோ அப்பதான் இவங்களுக்கு இந்தத் தொந்தரவு ரொம்ப அதிகமா இருக்கு” என்றார். விலங்குகளின் ரோமம் குறிப்பாக பூனைகளுடைய மெல்லிய ரோமம், பஞ்சு பொம்மைகள் இவை  பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும்.

‘உங்கள் நலனில் அக்கறை இருந்தால் அந்தப் பூனைக்கு நல்லதாக வேறு ஒரு வாழ்விடத்தை கண்டுபிடித்துக் கொடுங்கள்’ என்றேன் அவரிடம். ‘அதை எப்படித் துரத்துவது?’ என்று மனமில்லாமல் கூறிச் சென்றார். அதன் பின்னும் அவ்வப்போது சிகிச்சைக்காக வருவார். ஓரிரு ஆண்டுகளில் அந்தப் பூனை தானாகவே போய்விட்டதாம். பத்து வருடங்கள் இருக்கும். அன்றிலிருந்து இன்று வரை ஒரு முறைகூட ஒவ்வாமை வரவே இல்லையாம்.

 இதே போல நண்பர் ஒருவரின் மூன்று வயதுக் குழந்தைக்குத் தொடர்ச்சியாக கண்களில் ஒவ்வாமை பிரச்சனை இருந்திருக்கிறது. வீட்டை மாற்றுவது, ஊரை மாற்றுவது, உடைகள் அனைத்தும் புதிதாக வாங்குவது என்று என்னென்னவோ செய்து பார்த்தார்.

என்னிடம் தொலைபேசியில் அது குறித்து கேட்டபோது, டெடி பியர் பொம்மை எதுவும் வைத்திருக்கிறாளா என்று கேட்டேன். ‘‘ஆமா எப்பயும் அந்த டெடி பியரைக் கட்டி புடிச்சிட்டு தான் தூங்குவா, சாப்பிடுவா, ஸ்கூலுக்குக் கூட அது இருந்தா தான் போவேன்னு அடம்பிடிப்பா” என்றார் நண்பர். அந்த டெடி பியரை எடுத்து ஒழித்து வைத்து விடுங்கள் என்றேன். இரண்டே நாட்களில் ஒவ்வாமை ஓடிப் போய்விட்டது.

சிலர், ‘ ‘எனக்கு கண்ணுல அலர்ஜின்னு சொன்னீங்களே…அதிலிருந்து கத்திரிக்காய், தக்காளி எதுவும் நான் சாப்பிடுறதில்லை” என்றார் ஒருவர். உணவுப் பொருட்களுக்கு ஒவ்வாமை வரும் என்பது உண்மைதான். ஆனால், பெருவாரியாக ஒவ்வாமை உருவாக்கக்கூடிய எல்லா உணவுகளையும் தவிர்க்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒவ்வொருவருக்கும்  ஒரு காரணி/ காரணிகள் (Allergen) இருக்கும். அவை என்னென்ன என்பதைக் கண்டுபிடித்து அதை மட்டும் தவிர்த்தால் போதுமானது. பொதுவாக உணவுப் பொருட்கள் தோல் அளவுக்கு கண்ணில் தீவிர ஒவ்வாமையை அவ்வளவாக ஏற்படுத்துவதில்லை.

மேற்கூறியவை தவிர சில செடிகளின் பாகங்கள், குறிப்பாக சில பூக்களின் மகரந்தத் தூள் நிறைய பேருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடியவை. பார்த்தீனியம் செடிகள் உங்கள் வீட்டைச் சுற்றி இருந்தால் உங்களுக்கு ஒவ்வாமை வருவதற்கான வாய்ப்பு அதிகம். மலைப் பிரதேசத்தில் ஒரு பண்ணையில் வேலை பார்த்து வந்த ஒரு தம்பதியின் மகனுக்கு கண்ணில் தீராத ஒவ்வாமை இருந்தது.

அவனை எங்கள் பகுதியில் ஒரு ஹாஸ்டலில் சேர்த்த பின், ஒவ்வாமை அறவே இல்லை என்றார்கள். இப்போதும் விடுமுறைக்கு மலைப் பகுதி ஊருக்குப் போகும் பொழுது சொட்டு மருந்துகளை வாங்கிச் செல்வான் அந்த சிறுவன். முன்னேற்பாடாக இவன் வரும் முன்பு பார்த்தீனியம் வகையிலான செடிகளை அந்த தோட்டத்தில் இருந்து அவன் பெற்றோர் அகற்றி விடுவார்கள். அங்கே போகும் போது மட்டும் லேசா பிரச்சனை இருக்கு’ என்பான் அவன்.

இத்தகைய கண் ஒவ்வாமை பிரச்சினைகளில் மிகத் தீவிரமான வகைகளும் உண்டு. Vernal keratoconjunctivitis என்ற பிரச்சனையை morning misery என்பார்கள். 5-15 வயது வரையிலான குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்த நோய், அதிகாலையில் அதிக கண்கூச்சம், எரிச்சல், தொடர்ச்சியாக நீர் வடிதல், அதீத கண் சிவப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். வசந்த காலத்தில் மலர்கள் மலர்வதால் அதிக அளவில் மகரந்தம் காற்றில் இருக்கும். அதனால் pring cattarh என்ற பெயரும் இந்த நோய்க்கு உண்டு.

தொண்டைப் பகுதியில் இருக்கும் டான்சில், மார்புப் பகுதியில் இருக்கும் தைமஸ் சுரப்பி போன்றவை எதிர்ப்பாற்றலுக்கான உறுப்புகள் (Lymphoid Tissue). ஒரு மனிதனின் 14 வயதுக்குள்ளாக இவை சுறுசுறுப்பாக இயங்கி, மனிதனின் வாழ்நாளுக்கு தேவையான எதிர்ப்பணுக்களை ஓரளவு உடலில் உருவாக்கி விடுகின்றன.

அதன்பின் இவற்றின் பணி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, 14 வயதுக்கு மேல் சுரப்பிகள் தேய ஆரம்பிக்கும். ஒரு அயல்பொருளுக்கு எதிரான அதீத எதிர்ப்பாற்றலையே அலர்ஜி என்கிறோம். அதனால் தீவிர வகை அலர்ஜி உள்ளவர்களுக்கு 14 வயதுக்கு மேல் அறிகுறிகள் குறையலாம். சிலருக்கு அப்போது மந்திரம் போட்டது போல் குறைவதையும் பார்க்கலாம்.

தலையில் பேன், பொடுகு இருக்கும் சிறுவர்கள், பெரியவர்களுக்கும், குடற்புழு இருந்தாலும் கண்ணில் ஒவ்வாமை வரக்கூடும். குழந்தையின் தலையிலிருந்து பேன் எடுத்தாலே எனக்குக் கண்களில் அரிப்பு வருகிறது என்று சில தாய்மார்கள் சொல்லி இருக்கிறார்கள். சத்துள்ள உணவு வகைகளை (குறிப்பாக விட்டமின் C) உட்கொள்வது ஒவ்வாமையினால் ஏற்படும் அசௌகரியங்களை எதிர்த்துப் போரிட உதவும். மருத்துவர் ஆலோசனையுடன் anti histaminics, steroid போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். பழைய பரிந்துரைச் சீட்டை வைத்து மருந்து வாங்கி பயன்படுத்துவது தவறான பழக்கம். அதிகபட்ச ஸ்டீராய்டு பயன்பாடு கண்  நரம்பை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஒத்துக்கொள்ளாத பொருளை தவிர்ப்பதுதான் ஒவ்வாமையைத் தீர்க்க மிகச்சிறந்த வழிமுறை. போர்வை, தலையணை உறை இவற்றில் நூல்கள் வெளிவராத வகையிலான பருத்தித் துணிகளை பயன்படுத்துவது, மின்விசிறி, காற்று குளிர்பதனப் பெட்டி (ஏ/சி) இவற்றில் இருக்கும் அழுக்குகளை அவ்வப்போது களைவது, தூசு புகை இவற்றுக்கு ஊடாகச் செல்லும் பொழுது முகக் கவசம் மற்றும் கண்ணாடி அணிதல் போன்ற எளிய வழிமுறைகள் மூலம் கண்ணைத் தாக்கும் ஒவ்வாமை பிரச்சினைகளிலிருந்து மிக எளிதாகத் தப்பிக்க முடியும்.