மாஸ்டர் ஹெல்த் செக்கப்…எப்போ… யாருக்கு…எப்படி?
மாஸ்டர் ஹெல்த் செக்அப் யாருக்கு?
பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்குமே அவரவர்க்கு ஏற்ற பிரத்யேக மாஸ்டர் ஹெல்த் செக் அப்கள் உள்ளன. பொதுவாக, குழந்தைகளுக்கானவை, 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கானவை, 40-60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கானவை, முதியோருக்கானவை என்று பலவகைகளாக மாஸ்டர் ஹெல்த் செக் அப்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர சர்க்கரை நோயாளிகளுக்கு, இதய நோயாளிகளுக்கு, பெண்களுக்கு எனப் பிரத்யேக பரிசோதனைகளும் உள்ளன.
உடல் எடை, உயரம்
உடல் எடை, உயரம் எவ்வளவு எனப் பரிசோதிப்பதன் மூலம் ஒருவரின் பி.எம்.ஐ எவ்வளவு எனக் கண்டறிய முடியும். பி.எம்.ஐ அளவு அதிகமாக உள்ளவர்கள், ஒபிஸிட்டி பிரச்னை உடையவர்கள் எனக் கருதப்பட்டு அதற்கு ஏற்ப பரிசோதனைகளும் சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்படும் என்பதால், இந்த அடிப்படையான பரிசோதனைகள் அவசியம்.
ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம் என்பதும் அடிப்படையான ஒரு பரிசோதனையே. உடலில் உள்ள சிஸ்டாலிக் ரத்த அழுத்தம், டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் ஆகியவற்றின் மூலம் உடலில் ரத்த ஓட்டம் எந்த நிலையில் உள்ளது எனக் கண்டறியலாம். உயர் ரத்தப் பிரச்னை இருப்பது, சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு வித்திடும் என்பதால், இந்த அடிப்படைப் பரிசோதனையும் இன்றியமையாததே.
ரத்தப் பரிசோதனைகள்
ரத்தப் பரிசோதனைகள்தான் மாஸ்டர் ஹெல்த் செக்அப்பின் அடிப்படை. சுமார் இரண்டு எம்.எல் அளவுகளில் மூன்று சாம்பிள்கள் அதாவது மொத்தம் ஐந்து அல்லது ஆறு எம்.எல் ரத்தம் எடுக்கப்படும். இந்த ரத்தத்தைக் கொண்டு, ஹீமோகிராம், பயோகெமிக்கல் பாராமீட்டர், கொழுப்பு அளவு, கல்லீரலின் நிலை போன்ற பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதன் மூலம் சர்க்கரை நோய், ஒபிஸிட்டி, இதய நோய்கள் உட்பட பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பைப் பற்றி கண்டறிய முடியும்.
ஹீமோகிராம்
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, செல்களின் அடர்த்தி, சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை, வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களின் சராசரி விகிதம் போன்ற பரிசோதனைகள் இதில் செய்யப்படுகின்றன. இதன் மூலம் ரத்தசோகை, ரத்தத்தில் ஏற்பட்டு உள்ள நோய்த் தொற்று, ரத்தம் உறைதல் பிரச்னை, நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு, ரத்தப் புற்றுநோய் போன்றவற்றைக் கண்டறியலாம்.
வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் அவசியமானவை. உடலில் நுழையும் நோயை எதிர்த்துப் போராடுபவை. இவற்றில், மீயூட்டோபில், லிம்போசைட், மோனோசைட், இயோசினோபில் என்று பல வகைகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை எப்படி உள்ளது. இதில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று கண்டறிவதன் மூலம் நோய் எதிர்ப்புத் திறனை அனுமானிக்கலாம்.
ரத்தத்தின் பயோகெமிக்கல் பரிசோதனைகள்
உணவு உண்பதற்கு முன்னும் பின்னுமான ரத்த சர்க்கரை அளவு, ரத்தத்தில் சர்க்கரை கலக்கும் சராசரி விகிதம் (HbA1c), ரத்தத்தில் உள்ள யூரியா/கியாட்டின் அளவு, யூரிக் அமிலம், பி.பி பிளட் சுகர் போன்ற பரிசோதனைகள் இதில் செய்யப்படுகின்றன. ஃபாஸ்டிங் சுகர் எனப்படும் உணவு உண்பதற்கு முன்பு ரத்தம் எடுத்து பரிசோதித்துவிட்டு, உணவு உண்ட பின் ஒரு முறை மீண்டும் எடுத்துப் பரிசோதிக்கும்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்தத்தில் சர்க்கரை கலக்கும் விகிதம் போன்றவற்றை அனுமானித்து சர்க்கரை வியாதி உள்ளதா? அதற்கான வாய்ப்புகள் உள்ளதா எனக் கண்டறிய முடியும்.
ரத்தத்தில் உள்ள யூரியா/ கிரியாட்டின், யூரிக் அமிலம் ஆகியவற்றின் அளவுகளைக் கணக்கிடுவதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்பாடு எப்படி உள்ளது. சிறுநீரகப் பிரச்னைகள் ஏதும் உள்ளனவா என்பதைக் கண்டறிய முடியும்.
கொலஸ்ட்ரால் பரிசோதனைகள்
உடலில் உள்ள மொத்த கொலஸ்ட்ரால் அளவு, எல்.டி.எல் கொழுப்பின் அளவு, ஹெச்.டி.எல் கொழுப்பின் அளவு, டிரைகிளிசரைட் அளவு, மொத்த கொலஸ்ட்ராலுக்கும் ஹெச்.டி.எல் கொழுப்புக்கும் உள்ள விகிதம் போன்றவை இந்தப் பரிசோதனையில் ரத்தம் மூலம் கண்டறியப்படுகின்றன.
உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்போது அது நல்ல கொழுப்பைக் காலி செய்து, இதய ரத்த நாளங்களிலும் கல்லீரலிலும் படிகின்றன. இதனால், மாரடைப்பு, கல்லீரல் அழற்சி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் பரிசோதனைகள் செய்வதன் மூலம் இந்த பாதிப்புகளைக் கண்டறியலாம்.
கல்லீரல் செயல்பாடு
ரத்தத்தில் உள்ள மொத்த புரதம்/அல்புமின்/குளோபுலின் அளவு, அல்கலைன் பாஸ்பட்டேஸ் எனும் காரத்தன்மை அளவு, எஸ்.பிளிருபின் அளவு போன்றவற்றைக் கணக்கிடுவதன் மூலம் கல்லீரல் செயல்பாடு எந்த அளவு உள்ளது என்று மதிப்பிடப்படுகிறது.கல்லீரல்தான் உள்ளுறுப்புகளின் அரசன். புரதம், அல்புமின், குளோபுலின், அல்கலைன் பாஸ்பேட் போன்றவை அதிகரிக்கும்போது லிவர் சிர்ரோசிஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் பிளிருபின் அளவு மாறுபட்டால் மஞ்சள் காமாலை பிரச்னை உள்ளது என்று அறியலாம்.
தைராய்டு பரிசோதனைகள்
ரத்தத்தின் மூலம் டி3, டி4, டி.எஸ்.ஹெச் சுரப்புகளின் அளவு பரிசோதிக்கப்படுகிறது. இதனால், தைராய்டு சுரப்பி எந்த நிலையில் உள்ளது, தைராய்டு பாதிப்புகள் ஏதும் உள்ளனவா என்பனவற்றைக் கண்டறியலாம்.
மார்பக எக்ஸ்ரே
மார்புப் பகுதியை எக்ஸ்ரே எடுப்பதன் மூலம் இதயம், நுரையீரல், மூச்சுக்குழாய் உள்ளிட்ட உள்ளுறுப்புகளின் நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.
இ.சி.ஜி
இதயத்தின் செயல்பாட்டை அறிய அடிப்படையான இ.சி.ஜி பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் இதயத்துடிப்பின் அளவு, வேகம் போன்றவற்றைக் கண்டறியலாம்.
பெண்களுக்கான சிறப்புப் பரிசோதனைகள்
கால்சியம், எலெக்ட்ரோலைட், பாஸ்பரஸ் பரிசோதனை
40 வயதுக்குப் பிறகு பெண்களுக்கு எலும்பு தொடர்பான குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், வழக்கமான ரத்தப் பரிசோதனைகளோடு கால்சியம், எலெக்ட்ரோலைட், பாஸ்பரஸ் விகிதங்கள் ரத்தத்தில் எவ்வளவு உள்ளன என்பதும் பெண்களுக்கான ரத்தப் பரிசோதனைகளின்போது கண்காணிக்கப்படுகின்றன.
அல்ட்ரா சோனோகிராம்
சப்த அலைகளை உடலுக்குள் செலுத்தி அதன் எதிரொலிகள் கறுப்பு வெள்ளையாக மானிட்டரில் படிவதன் மூலம் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளின் நிலை எப்படி உள்ளது எனப் பரிசோதிக்கும் முறை இது. இதன்மூலம், கர்ப்பப்பை, சினைப்பை போன்ற உறுப்புகள் என்ன நிலையில் உள்ளன என்று கண்டறியலாம். இது பொதுவாக, கர்ப்ப காலத்தில் கருவின் நிலையை அறிய செய்யப்படுகிறது. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்குமே மாஸ்டர் ஹெல்த் செக்அப் செய்யப்படுகிறது.
பாப்ஸ்மியர் பரிசோதனை
கர்ப்பப்பைவாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை இது. சமீபத்தில் கர்ப்பைப்பை வாய்ப் புற்றுநோய் அதிகரித்து வருவதால் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்குமே இது பரிந்துரைக்கப்படுகிறது.
மேமோகிராம் பரிசோதனை
பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக மேமோகிராம் பரிசோதனை செய்யப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்குமே இந்தப் பரிசோதனை அவசியம் செய்யப்படுகிறது. இதனோடு மார்பக எக்ஸ்ரேவும் எடுக்கப்படுகிறது.
முதியோருக்கான சிறப்புப் பரிசோதனைகள்
டிரெட்மில் பரிசோதனை
பொதுவான இ.சி.ஜி பரிசோதனையில் இதயத்தின் செயல்பாடு குறித்து முழுமையாக அறிய முடியாது என்பதால், 60 வயதைக் கடந்தவர்களுக்கு டிரெட்மில் பரிசோதனை எனப்படும் இதய ஸ்ட்ரெஸ் பரிசோதனை அவசியம் செய்யப்படுகிறது. டிரெட்மில்லில் நடக்கச் செய்து பரிசோதனை செய்வதன் மூலம் இதயம் எப்படி இயங்குகிறது என்று கண்டறிய முடியும்.
டெக்ஸா ஸ்கேன் பரிசோதனை
முதுமைக் காலத்தில் ஏற்படும் பிரச்னைகளில் முக்கியமானது எலும்புத் தேய்மானம். எனவே, 60 வயதைக் கடந்தவர்களுக்கு எலும்பின் அடர்த்தியைப் பரிசோதிப்பதற்காக டெக்ஸா ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது.
ப்ராஸ்டேட் பரிசோதனை
60 வயதைக் கடந்த ஆண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் ப்ராஸ்டேட் கோளாறுகள் முக்கியமானது. எனவே, டிஜிட்டல் ரெக்டல் எக்ஸாம் எனப்படும் ப்ராஸ்டேட் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. இதன்மூலம், ப்ராஸ்டேட் செயல்பாடு எப்படி உள்ளது எனத் தெரிந்துகொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கான பரிசோதனை
சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய்கள் உள்ளிட்ட தீவிரமான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்களுக்கு வழக்கமான பரிசோதனைகளுடன் சில பிரத்யேகப் பரிசோதனைகளும் உள்ளன.
டப்ளர் பரிசோதனை
ரத்த நாளங்களிலும் இதய நாளங்களிலும் ரத்த ஓட்டம் எப்படி உள்ளது என்பதைப் பரிசோதிப்பதற்காக வேகமான சப்த அலைகளைச் செலுத்தி டப்ளர் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால், ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அது கண்டறியப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு வலி உணர்வு குறைவு என்பதால் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் தெரியாது. எனவே, இந்தப் பரிசோதனை அவசியம்.
கால் அழுத்தப் பரிசோதனை
சர்க்கரை நோயாளிகள் கால்களை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால், கால்களின் அழுத்தம் எப்படி உள்ளது என்று கண்டறிவதற்கான கால் அழுத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் காலின் உணர்வுத்திறன், ஆரோக்கியம் ஆகியவற்றைக் கண்டறிந்து பாதுகாக்கலாம்.
கண் பரிசோதனை
சர்க்கரை நோயாளிகளுக்கு கண்களில் அழுத்தம் அதிகரிக்கும்போது பார்வை இழப்பதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, மாஸ்டர் ஹெல்த் செக்அப்பின் போது கண் அழுத்தம், கண்ணின் செயல்திறன் ஆகியவை பரிசோதிக்கப்படுகின்றன.
- இளங்கோ கிருஷ்ணன்
|