பாக்கெட் பால் டேட்டா!



கலர் கலரான பேக்கிங்களில் ஸ்கிம்டு மில்க், பாஸ்டுரைஸ்டு மில்க், டோனுடு மில்க், டபுள் டோனுடு மில்க் என்று பலவகையான பால் பாக்கெட்டுகள் சந்தையில் இருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் என்ன பொருள் என்று பார்ப்போம்.பால்களில் ஸ்கிம்டு, டோனுடு என்று வகை பிரிப்பது எல்லாம் அதில் உள்ள கொழுப்புச்சத்தின் அடிப்படையில்தான். சில சமயங்களில் அதில் கலக்கப்பட்டுள்ள வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் பதப்படுத்திகள் தொடர்பாகவும் இவை வகைப்படுத்தப்படுகின்றன.

ஃபுல் க்ரீம் மில்க் அல்லது ஹோல் க்ரீம் மில்க்

இதில் ஆறு சதவீத கொழுப்புச்சத்து இருக்கும். இது பால் அருந்தும் குழந்தைகள், வளரும் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. பெரியவர்கள் இந்தப் பாலைப் பருக வேண்டியது இல்லை. ஏனெனில் நமக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக கிடைக்க வேண்டிய டயட்டரி ஃபேட் என்பது நாம் உண்ணும் காய்கறிகளிலேயே கிடைத்துவிடும்.

ஸ்டாண்டர்டைஸ்டு மில்க்

இதில் 4.5 சதவீத கொழுப்பு இருக்கும். வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏற்ற பால் வகை என்றால் இதுதான். அனைத்து வயதினருமே இதனைப் பருகலாம்.

டோனுடு மில்க்

இதுவும் நம் நாட்டில் அதிகமானோர் பயன்படுத்தும் பால் ரகம்தான். இதில் மூன்று முதல் மூன்றரை சதவீத கொழுப்புச்சத்து இருக்கும். எனவே, இதுவும் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற பால்தான். பால், தயிர், வெண்ணெய் என எல்லாவகை பால் பொருட்கள் பயன்பாட்டுக்கும் இந்தப் பால் ஏற்றது.

டபுள் டோனுடு மில்க்

இதில் கொழுப்பு சதவீதம் மேலும் குறைக்கப்பட்டிருக்கும். இதில் ஒன்று முதல் ஒன்றரை சதவீதம் வரை மட்டுமே கொழுப்புச்சத்து இருக்கும். பலர் இதனை ஸ்கிம்டு மில்க் உடன் குழப்பிக்கொள்கிறார்கள். சில நிறுவனங்கள் இதில் 99% கொழுப்பு நீக்கப்பட்டது என்று அச்சிடுவதால் வரும் குழப்பம் இது. முழுமையான கொழுப்பு நீக்கப்பட்டது அல்ல இது.

ஸ்கிம்டு மில்க்

இந்த வகையில்தான் கொழுப்புச்சத்து முழுமையாக நீக்கப்பட்டிருக்கும். பாலில் 0.5% கொழுப்பு இருந்தாலும் அது டெக்னிக்கலாக ஸ்கிம்டு மில்க் ஆகாது. நூறு சதவீதம் முழுமையாக நீக்கப்பட்டாலே ஸ்கிம்டு மில்க். ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த விகிதம் சற்று மாறுபடுகிறது. சர்க்கரை நோயாளிகள், செரிமானப் பிரச்சனை உள்ளோர் போன்ரோர் இந்த வகைப் பாலைப் பயன்படுத்துகிறார்கள்.

- சரஸ்