டியர் டாக்டர்



அதிக பழங்கள் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும் என சொல்வோம். ஆனால், ‘பழங்கள் சாப்பிட்டால் ஆரோக்கியம் அழியும்’ என்ற கட்டுரையை படித்தவுடன் அதிர்ச்சியாகிவிட்டேன்.  விழிப்புணர்வு தந்த குங்குமம் டாக்டருக்கு  நன்றிகள் பல!
- விஜயா ரவிபாலன், திருச்சி.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என வயது வித்தியாச மின்றி தாக்கும் ரத்தசோகை நோய் - அதிலும் குறிப்பாக பெண்களை அதிகம் தாக்கும் நோயாக மாறிவிட்டது பற்றிப் படித்ததும் உஷாராகி விட்டேன். இனிமேல் என் வீட்டுப் பெண்களுக்கு சத்தான உணவுகள் கொடுத்து ரத்தசோகை வராமல் பார்த்துக் கொள்வேன்.
- ராமகிருஷ்ணன், கோவை.

‘அவனுக்கென்ன... பணம் நெறைய வருது... தொப்பையும் வருது’ என்கின்றனர். அந்தத் தொப்பையினால் என்ன கேடு, அதன் ஆபத்தென்ன என்பதை டாக்டர் ராஜ்குமார் விரிவாக சொல்லிட்டாரே...
‘இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு?’ கட்டுரையில் சித்த மருத்துவர் ராமசாமி பிள்ளை வழங்கியிருந்த மூலிகைகளில் மண்டிக்கிடக்கும் மருத்துவ ரகசியங்கள் ஒருபுறம் ஆனந்தப்பட வைத்தது. அதே நேரம் நமது மூலிகைகளைக் கொண்டு மருந்து தயாரித்து, அதை நமக்கே அதிக விலைக்கும் வெளிநாடுகள் விற்றுவரும் கொடுமை குறித்த தகவல்கள் அதிர்ச்சி
அளிப்பதாகவும் இருந்தன.
- எஸ்.துரைசிங் செல்லப்பா, உருமாண்டம்பாளையம்.,
இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘கலக்கல் கஃபே!’ - வெளியுலகம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய நல்ல பணி! சம்பந்தப்பட்டவர்களுக்கும் சிறப்பாக வெளியிட்டு பெருமைப்படுத்தியிருந்த குங்குமம் டாக்டருக்கும் நன்றி. கட்டுரையின் கடைசி வரிகள்,  கண் கலங்க வைத்துவிட்டன.
பாப்பாக்குடி இரா.செல்வமணி., திருநெல்வேலி,
வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

சிறப்புமிக்க தானிய வகைகளில் அமெரிக்கன் சோளத்தைவிட, இந்திய சோளம் சிறந்தது எனக் கூறிய எஸ்.மல்லிகா பத்ரிநாத் பாராட்டுக்குரியவர்.
- டெய்சி வித்யாஹி, கோவை.

குறைந்த விலையில் மருந்துகள் பற்றி ஆரோக்கியமான அலசலையும் நல்ல தகவல்களையும் திரட்டியிருந்தது சிந்திக்கச் செய்தது.  எத்தனை பரிசோதனை செய்துகொண்டாலும், உடலில் உப்பையும் சர்க்கரையையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டுவிட்டால், சிறுநீரகம் கெட வாய்ப்பே இல்லை என்ற தகவல் தெம்பூட்டியது.
- சிம்மவாஹினி, வியாசர் காலனி, சென்னை.

‘அலட்சியம், அதிமேதாவித்தனம் போன்ற காரணங்களால் நோயாளி தன்னைத்தானே டாக்டராக நினைத்துக்கொள்ளக் கூடாது. அது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்லதல்ல’ என்று நரம்பியல் டாக்டர் லட்சுமி நரசிம்மன் சொன்ன அறிவுரைகள் எல்லோருக்குமான அலாரம்! குங்குமம் டாக்டர் இதழை தவறாமல் வாங்கிப் படித்து பெட்டகமாகப் பாதுகாத்து வருகிறேன்.
- சாந்தமீனா, சென்னை-47.