நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களின் கவனத்துக்கு...



எச்சரிக்கை

பல பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் கிளை பரப்பிய போது, அவர்களின் நேரத்துக்கு ஏற்றாற்போலவே நம் வேலை நேரமும் அமைந்தது. 8 மணி நேரமாக இருந்த வேலை நேரமானது 10 மணி நேரத்தையும் தாண்டியது. ஒரு கம்ப்யூட்டர் முன் பல மணி நேரம் அமர்ந்து வேலை பார்க்கும் நிர்ப்பந்தம்.

முதுகுவலியில் இருந்து மூட்டுவலி வரை எத்தனை எத்தனை பிரச்னைகள்... இப்படி நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் பலவிதமான சிக்கல்கள் வரக்கூடும் என்றே பல்வேறு ஆய்வுகளும் எச்சரிக்கின்றன.

அலுவலகத்தில் அமர்ந்து பல மணி நேரம் பணிபுரிவது கட்டாயமாகி விட்ட சூழலில், இதனால் வரும் பிரச்னைகள் குறித்தும், தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பி.கண்ணன் பேசுகிறார்...

‘‘அந்த காலத்தில் வியர்க்க விறுவிறுக்க உடல் உழைப்பு செய்தே ஒவ்வொரு பருக்கையையும் சாப்பிட வேண்டி இருந்தது. அதனால்தான்   நம் முன்னோர் நோய்கள் இன்றி ஆரோக்கியமாக இருந்தனர்.

இயற்கை உணவுகளை மட்டுமே உண்டு வந்ததும் மற்றொரு காரணம். காலப்போக்கில் மக்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து செய்யும் வேலையை கௌரவமாகக் கருத ஆரம்பித்தனர். ‘வொயிட் காலர் வேலை’ என்பதை மக்கள் விரும்ப ஆரம்பித்தார்கள். பல மணி நேரம் குளிர்சாதன அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பது முதலில் எல்லோருக்கும் உவப்பானதாக இருந்தது. இதையே பன்னாட்டு நிறுவனங்களும் சரியாக பயன்படுத்திக் கொண்டன.

சமீப காலமாகத்தான் சரியான உடற்பயிற்சிகளும் முறையான உணவுப் பழக்கங்களும் இல்லாத தால் பல்வேறு நோய்கள் வருவது மக்களுக்கும் தெரிய வந்துள்ளது. வாரம் 5 நாட்கள் வேலைநாட்கள் என்று வைத்துக்கொள்வோம்.

8 மணி முதல் 9 மணி நேரம் வேலை என்று கொண் டால், வீட்டில் போய் டி.வி. பார்ப்பார்கள் அல்லது அங்கும் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து பொழுதைக் கழிப்பார்கள். இப்படியாக, ஒரே நாளில் 20 மணி நேரம் தாண்டியும், வேலை, பயணம், பொழுதுபோக்கு என்றே கழியும்.

இதுபோன்ற உடற்பயிற்சி யற்ற வாழ்க்கை முறையை ஒருவர் தொடர்ந்தால், அவருக்கு கொழுப்புச் சத்து, நீரிழிவு, ரத்த அழுத்தம் அதிகமாதல் என சகல பிரச்னைகளும் வரக்கூடும். நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரியும் பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் சுரப்பு நிற்கும் போது, இதய நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை எளிதில் வரும். ஒரு நபர் 5 ஆண்டுகளை இப்படி அதிக உடல் உழைப்பில்லாமல் கழிக்கிறார் எனில், அவர் 20 சதவிகித ஆரோக்கிய நாட்களை தனது வாழ்நாளில் இழக்கிறார் என்றே அர்த்தம்...’’

நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் பிரச்னைகளை விவரிக்கும் டாக்டர் கண்ணன் அதைத் தவிர்க்கும் வழிமுறைகளையும் வலியுறுத்துகிறார்.‘‘நமது உடல் நலமுடன் உள்ளதா என்பதை அறிய எளிய வழி உண்டு. இதற்காக பி.எம்.ஐ. எனப்படும் பாடி மாஸ் இன்டக்ஸ் சரியான அளவு உள்ளதா என்பதை அடிக்கடி சரிபார்ப்பது அவசியம். உயரத்துக்கு ஏற்ற எடை இருந்தால் நல்லது. எடை அதிகமாக இருந்தாலோ  பருமன் நோய் ஏற்படும்.

* வாரம் 5 - 6 நாட்கள், குறைந்தபட்சம் 8 மணி நேரம் வேலை பார்ப்பது என்பது கட்டாயம் என்கிற போது, முடிந்த அளவு முதுகை வளைக்காமல் நேராக உட்கார வேண்டும்.

*கம்ப்யூட்டர் மானிட்டரானது பார்வை மட்டத்துக்கு 15 டிகிரி கோணம் கீழே இருக்க வேண்டும். மவுஸ், கீபோர்டை கைகளின் தொலைவில் இருந்து தள்ளி வைக்கக் கூடாது. இதனால் கைகளை அதன் மீது பரப்பி வேலை செய்ய வேண்டியிருக்கும். இப்படி நெடுநேரம் வேலை செய்வதால் தோள்பட்டைகளில் வலி ஏற்படும்.

*கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது அடிக்கடி முழங்கைகளை இருக்கையின் கைப்பிடியில் வைத்து ஓய்வு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் முழங்கைகளில் வலி ஏற்படும்.

*உட்காரும் இருக்கையின் உயரத்தை உங்களின் உயரத் துக்கு ஏற்ப சரியாக வைக்க வேண்டும். உங்கள் உயரத்து க்கு சரியாக மானிட்டர் இல்லையென்றால், அண்ணாந்து பார்த்து வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் கழுத்து எலும் பில் உள்ள தட்டுகள் தேய்மானம் அடை ந்து தீவிரமான கழுத்துவலியை ஏற்படுத்தும்.

*கம்ப்யூட்டர் டேபிளின் கீழே முட்டிகளை குறுக்கி, மடக்கி அமர்வார்கள் சிலர். இதனால் முட்டி யில் உள்ள நடு எலும்பான ‘பேட்டல்லா’ தேய்மானம் அடையும். இது எக்ஸ்ரேயில் பார்த்தால் கூட தெரியாது. முட்டியின் பின்புறம் வலிக்கிறது என்பார்கள். அதை வைத்துதான் கண்டறிய முடியும்.

*வயிற்றை முன்னே அழுத்தி உட்கார்வ தால் கொழுப்புகள் கரையாமல் தொப்பை எளிதாக வரும். இப்போது ஆண்களின் வயிற்றின் அளவும், இடுப்பின் அளவும் அதிகரிக்க இவ்வித கரையாத கொழுப்புகளே காரணமாகும். வயிற்றில் கொழுப்புகள் சேர்ந்தால் சுரக்கும் இன்சுலினை வேலை செய்யவிடாது. இதனால் நீரிழிவு பிரச்னை ஏற்படும்.

*ஆரோக்கியமற்ற துரித உணவுகளை சாப்பிடும் பழக்கமும் இதனுடன் சேர்ந்து கொண்டால், முதுகெலும்பின் தாது அடர்த்தியை பாதித்து, இளம் வயதிலேயே முதுகுவலி வர வழிவகுக்கும். முதுகெலும்பின் தட்டுகள் பிதுங்கி வெளியே வர ஆரம்பிக்கும். இதனால் ‘இன்டர்வெர்டிபிரல் டிஸ்க் புரோலாப்ஸ்’ என்னும் பிரச்னையை கொண்டு வந்து கடுமையான முதுகு வலியை ஏற்படுத்தும்.

கவனிக்காமல் விட்டால் ‘ஷயாடிகா’ எனப் படும் இடுப்பில் இருந்து கிளையை ஆரம்பிக்கும் ஷயாடிக் நரம்பில் மின்சாரம் போன்று பரவும் வலியையும் ஏற்படுத்தும். டூவீலர் அதிகம் ஓட்டுபவராக இருந்தால் இன்னும் வலி அதிகமாகும்.

*உணவுப்பழக்கங்களை சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் இ அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சுறுசுறுப்பாக இருக்கலாம். வாரத்தில் குறைந்தது 4 நாட்களாவது தகுந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

*இருக்கையில் அதிக நேரம் அமராமல் அவ்வப்போது ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறிய நடை நடக்கலாம்...’’

-விஜய் மகேந்திரன்
மாடல்: ஷைலு
படங்கள்: ஆர்.கோபால்,
ஏ.டி.தமிழ்வாணன்