வலியைக் குறைப்பது மனிதாபிமானம்!



சேவை

‘உண்மையாக சிரிப்பதற்கு, உங்களுடைய வலியை ஏற்றுக் கொண்டு, அதனோடு விளையாட உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார் சார்லி சாப்ளின். மன வலிகளுக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கலாம். உடல் வலிகளுக்கு..? சிறு கல் காலில் இடறிவிடுகிறது...

நகம் பெயர்ந்து சம்மட்டியால் அடித்தது மாதிரி குத்திக் குடைகிறது வலி... பட்டவர்களுக்குத்தான் அந்த வேதனை புரியும். வயிற்றுவலி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் குறித்த செய்திகளைக் கூட நாம் பத்திரிகை களில் படிக்கிறோம். ஆக, உலகிலேயே மிகக் கொடுமையானதும் மனிதர்களால் தாங்க முடியாததும் இந்த வலியே!

வலிகளைப் போக்குவதற்காகவே ஓர் அறக்கட்டளை நிறுவி, நடத்தி வருகிறார் டாக்டர் ரிபப்ளிகா. ‘ஆர்.எம்.டி. பெயின் அண்ட் பாலியேட்டிவ் கேர் ட்ரஸ்ட்’ என்ற அவரின் தொண்டு நிறுவனம் சென்னை-மதுரவாயல், பெரிய பாளையம், மதுரை என கிளை பரப்பி அதற்கான மருத்துவமனைகளை உருவாக்கியிருக்கிறது. தி.நகரில் உள்ள ரிபப்ளிகாவின் மருத்துவ மனையில் அவரை சந்தித்தோம்.

‘‘குடியரசு தினத்தன்னிக்கிப் பொறந்ததால எனக்கு ‘ரிபப்ளிகா’னு பேரு வச்சுட்டாங்க’’ என்று சிரித்தபடி பேச்சைத் தொடங்குகிறார்... ‘‘1994ல ஹாஸ்பிடலை ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல நானும் பொது மருத்துவம்தான் செஞ்சு கிட்டு இருந்தேன். அதோட மகப்பேறு மருத்துவமும் பார்த்தேன். அப்போ எனக்கு ஒரு பழக்கம்... முதியவர்கள், ரொம்ப முடியாத நோயாளிகளுக்கு வீட்டுக்கே போய் சிகிச்சை கொடுப்பேன். வீட்டுல வச்சு கவனிக்க முடியாத, ஆதரவு இல்லாத சிலரை நானே பராமரிக்கவும் ஆரம்பிச்சேன்.

முக்கியமா, அவங்களோட வலியைக் குறைக்குறதுல கவனம் செலுத்தினேன். அந்த நேரத்துல என் கிளாஸ்மேட் ஒருத்தர் என்னை பார்க்க வந்திருந்தார். ‘நீங்க பண்றது ஒரு சயின்டிஃபிக் அப்ரோச்... மெடிக்கல் ஸ்பெஷா லிட்டி... வெளிநாட்டுல இது ரொம்ப பிரபலம்... ‘பாலியேட்டிவ் கேர்’னு சொல்லுவாங்க. இதையே நீங்க நல்லா பண்ணலாமே’ன்னு யோசனை சொன்னார். அப்போ கேரளாவுல மட்டும்தான் ‘பாலியேட்டிவ் கேர்’ இருந்தது. அங்கே போய் ட்ரெயினிங் எடுத்துக்கிட்டேன்... ஒரு சர்டிஃபிகேட் ப்ரோக்ராம் படிச்சேன்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவங்களோ, வேற வலிகளை எதிர்கொள்றவங்களோ... அவங்களோட வலியைக் குறைச்சு, வாழும் காலத்தில் வலியில்லாம வச்சுக்க உதவறது தான் பாலியேட்டிவ் கேர். புற்றுநோய், உடலின் ஒரு இடத்துலருந்து இன்னொரு இடத்துக்கு ஈசியா பரவிடும். அதனால வலி அதிகமாகும். நோயாளிக்கு கீமோ தெரபியோ, மத்த சிகிச்சைகளோ கொடுக்கும் போது அந்த வலியும் சேர்ந்துக்கும். குடல் புற்றுநோய், கர்ப்பப்பைப் புற்றுநோயெல்லாம் ரொம்பக் கொடுமை.

குடல் புற்றுநோய் வந்தா ஜீரண சக்தி குறைஞ்சிடும். வாந்தி வந்துக்கிட்டே இருக்கும். விட்டு விட்டு வலி வரும். கர்ப்பப்பைப் புற்றுநோய்ல சிறுநீர் கழிப்பதே பெரிய பிரச்னையா ஆகிடும். அவதிப்படுற நோயாளிகள்ல சிலர் ‘டாக்டர்... தாங்க முடியலை... இதுக்கு நாங்க செத்துப் போனாலும் பரவாயில்லை... ஏதாவது மருந்து கொடுத்து சாகடிச்சிடுங்க’ம்பாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு பாலியேட்டிவ் கேர்ல தீர்வு கிடைக்கும்.

பாலியேட்டிவ் கேர் மாற்று மருத்துவம் கிடையாது. அலோபதி மருத்துவம்தான். கேன்சர், எலும்பு முறிவு, இதய நோய்களுக்கெல்லாம் ஸ்பெஷலிஸ்ட் இருக்கற மாதிரி, இதுவும் மருத்து வத்துல ஒரு அம்சம். வலியோட இருக்கறவங்களுக்கு உதவறதுதான் எங்க நோக்கம். பக்கவாதம் நரம்புத்தளர்ச்சியால் ஏற்படுவது. பாதிக்கப்பட்டவங்களுக்கு எப்பவும் வலி இருக்கும். சாப்பாட்டை ஸ்பூன்லதான் ஊட்டணும். தசைகள் பலவீனமா இருக்கறதால விழுங்கறது கூட சிரமம் தான்.

உடலை பேலன்ஸ் பண்ண முடியாது. ‘பொத்’னு கீழே விழுந்திடுவாங்க. படுக்கையிலேயே கிடப்பாங்க. நோயைக் குணப்படுத்த முடியாதுன்னாலும், அவங்களை பராமரிக்கறது ரொம்ப முக்கியம். இதை அவங்க குடும்பத்தாருக்குப் புரிய வைப்போம். அவங்களை பராமரிக்க குடும்பத்தோட சேர்ந்து நாங்க உதவுவோம். 

ஒருத்தருக்கு மஞ்சள்காமாலையோ, ஹெபடைட்டிஸோ ரொம்ப நாளைக்கு இருந்தா, அது குடலை பாதிக்கும். கல்லீரல் சரியா வேலை செய்யாததால உடம்புல வலி உண்டாகும். கால்ல வீக்கம் ஏற்படும். அவங்க வலியை எப்படி குறைக்கிறதுன்னு நாங்க பார்ப்போம். அப்படிப்பட்டவங்கள்ல சிலருக்கு டயாபடீஸ் இருக்கும். அதையும் கணக்குல எடுத்துக்கிட்டு ட்ரீட் பண்ணுவோம்.

எங்க சிகிச்சையோட மத்த மருத்துவ சிகிச்சையையும் தொடரலாம். மற்ற மருத்துவர்களுக்கு நோயைக் குணப்படுத்தறதுதான் குறிக்கோள். எங்களுக்கு நோயாளிகளின் வலியைக் குறைக்கிறது முக்கியம். வலியோட வந்து, அதுலருந்து விடுதலை பெற்று, என் கையைப் பிடிச்சு நன்றி சொன்ன எத்தனையோ நோயாளி கள் இருக்காங்க. சமீபத்துல ஒருத்தர் தன் மனைவியை என்கிட்ட கூட்டிட்டு வந்தார். அவங்களுக்கு மார்பகப் புற்றுநோய்.

எத்தனையோ சிகிச்சை... வருமானத்துக்கு மீறி செலவு... குணமாகலை... வலி குறையவே இல்லை. நோயை குணப்படுத்த முடியாதுன்னு எந்த டாக்டரும் சொல்லலைங்கறதுதான் பிரச்னையே. மன உளைச்சல், வலியில அந்தப் பெண் நாலு மாசமா தூங்கலை. என்கிட்ட வந்தவங்க நாலு நாள் நிம்மதியா தூங்கினாங்க. அவங்க வலியைக் குறைக்க முடிஞ்சதுல எங்களுக்கும் ஒரு நிம்மதி.

நோய் ரொம்ப முத்தின நிலைமைலதான் பாலியேட்டிவ் கேரை தேடி வரணும்னு சிலர் நினைக்கிறாங்க. ஒரு நோயை கண்டறியும் போதே, பேஷன்டையும் இன்வால்வ் பண்ண ணும். இந்தப் பிரச்னைகளாலதான் இந்த நோய்... குணப்படுத்தறது எவ்வளவு தூரம் சாத்தியம் அப்படிங்கறதையெல்லாம் புரிய வைக்கணும். அதுக்கப்புறம் அவங்களோட உடல் வலியை குறைக்கறது சுலபம்’’ என்கிற ரிபப்ளிகா, இந்தப் பணியில் ஈடுபடக் காரணம் ஒரு சம்பவம்...

‘‘ஒரு கூலித் தொழிலாளி... விரைல கேன்சர். கட்டி வந்து ரொம்ப அவஸ்தை... துர்நாற்றம் வேற... மனைவிக்கு கூலி வேலை. ரெண்டு குழந்தைங்க. ஏழ்மையான குடும்பம். வலியால 10 நாளா தூங்காம இருந்திருக்கார். ஒருநாள் கோடம்பாக்கத்துல ரயில்ல பாய்ஞ்சு தற்கொலை செஞ்சுக்கவும் முயற்சி செஞ்சிருக்கார். என்கிட்ட கூட்டிட்டு வந்தாங்க. இருமல், இன்ஃபெக்ஷன் ஏற்பட்டதுல உடம்புல என்னென்னவோ பிரச்னைகள். அஞ்சு நாள் வச்சு பராமரிச்சோம். வலியில்லாம கடைசி நாட்கள்ல நிம்மதியா இருந்தார்...

இறந்துட்டார். அப்ப தான் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். வசதி இருக்கறவங்க எப்படியோ தங்களை பாத்துக்கறாங்க... சாதாரண வலி மாத்திரை கூட வாங்க வசதி இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க? அப்படிப்பட்டவங்களுக்கு உதவறதுக்காக இந்த அறக்கட்டளையை ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல வெறும் 5 படுக்கையோட ஆரம்பிச்சது இந்த மருத்துவமனை’’ என்கிற ரிபப்ளிகாவிடம், வலி குறைக்கும் மருந்துகள் குறித்து கேட்டோம்.

‘‘இதுக்கு முக்கியமா தேவைப்படுறது மார்பின் (Morphine)... ஓபியத்துல இருந்து கிடைக்கும் முக்கியமான கெமிக்கல். மார்பினை 25 வருஷத்துக்கு முன்னாடி பயன்படுத்திக்கிட்டு தான் இருந்தோம். அப்புறம் தடை பண்ணிட்டாங்க. இப்போ பயன்படுத்த கவர்ன்மென்ட்டே அனுமதிச்சிருக்காங்க.

 இதை நோயாளிகளுக்குக் கொடுக்க தனிப் பயிற்சி எடுத்துக்கணும். யாருக்கு, எந்த அளவு, எப்படி, எந்த மாதிரி கொடுக்கலாம், எப்படி பத்திரப்படுத்தணும்கிறதையெல்லாம் ட்ரெயினிங்ல சொல்லித் தருவாங்க. ஒரு நோயாளிக்கு உடனே மார்பினை கொடுத்திட மாட்டோம். அதுக்கு 4 ஸ்டேஜ் இருக்கு. சாதாரண பெயின் கில்லர் மாத்திரைகளை எல்லாம் கொடுத்துப் பாத்துட்டு, முடியாத பட்சத்துலதான் கொடுப்போம். மார்பின் மருந்து, மாத்திரை, பேட்ச் வடிவங்கள்ல கிடைக்குது. யார் யாருக்கு எந்த வடிவத்துல தேவைப்படுதோ அதுக்கு ஏத்த மாதிரி பயன்படுத்துவோம்.

மார்பின் சாதாரண பெயின் கில்லரை விட உயர்ந்தது. எந்த இடத்துல வலி இருக்கோ அங்கேயும், மூளை நரம்புலயும் வேலை செய்யும். இதுலயும் பக்க விளைவுகள் இருக்கு. மலச்சிக்கல் அதிகமாக இருக்கும். அதுக்கும் மாத்திரை கொடுப்போம். 3 மாசம் வரைக்கும் உயிரோட இருப்பாங்கன்னு நினைச்சவங்க கூட, மார்பின் எடுத்துக்க ஆரம்பிச்சதுக்குப் பிறகு, 3 வருஷங்கள் இருந்திருக்காங்க. சாகக் கிடக்கற நோயாளியின் இன்ஃபெக்ஷனை கட்டுப்படுத்தி, வலிக்கு நிவாரணம் கொடுத்தாலே அவங்க நல்லபடியா இருப்பாங்க... இது நாங்க அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்ட உண்மை.

இப்போ எங்க ஆர்.எம்.டி. பெயின் அண்ட் பாலியேட்டிவ் கேர் மூணு இடங்கள்ல இயங்குது... மதுரவாயல், பெரியபாளையம், மதுரை. மதுரவாயல்ல 52 படுக்கை வசதி இருக்கு. பெரியபாளையத்துல சுத்தி இருக்கற கிராமங்கள்ல வீடு வீடா நர்ஸ்களும் டாக்டரும் போய் முடியாதவங்களுக்கு சிகிச்சை கொடுக்கறாங்க.

இப்போ அங்கே 262 நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்துக்கிட்டு இருக்கோம். பெரியபாளையம் சென்டர்ல 5 படுக்கை வசதியும், மதுரை மையத்துல 25 படுக்கை வசதியும் இருக்கு.  வலிக்கான சிகிச்சை, மருந்து, உணவு எல்லாமே இலவசம் தான். இந்த சேவையை நாங்க நன்கொடை வசூல் செஞ்சுதான் நடத்திக்கிட்டு இருக்கோம். என்னோடு 4 டாக்டர்கள் இணைந்து இந்த அறக்கட்டளையில ஆர்வமா பணியாற்றிக்கிட்டு இருக்காங்க. பெண்களுக்கு நர்ஸ் ட்ரெயினிங் கொடுத்து வீடு வீடாகப் போய் நோயாளிகளை பராமரிக்க கற்றுத் தர்றோம்.

மார்பகப் புற்றுநோய்னு வந்த ஒரு அம்மாவை மதுரவாயல்ல சேர்த்தோம். இப்போ வலி குறைஞ்சு, அவங்களுக்கு புற்றுநோய் இருக்கறதையே நம்ப மாட்டேங்கறாங்க. ‘டாக்டர்! நான்தான் சரியாகிட்டேனே... வேலைக்குப் போகலாமா’ன்னு கேட்கறாங்க. இப்போ சில மருத்துவர்களும் நோயாளிகள்கிட்ட எங்களைப் பத்தி சொல்லி, இங்கே அனுப்பி வைக்கிறாங்க. சிகிச்சையோடு, முதியோர் பராமரிப்பு, தன் வேலையை தானே செஞ்சுக்க முடியாதவங்களை கவனிச்சுக்கறது, பல்வேறுவிதமான நோய் தாக்குதலுக்கு ஆளானவங்களை பாத்துக்கறதுன்னு பல பணிகளை இங்கே செய்யறோம்.

ஒருத்தரோட வலியை குறைக்க உதவறது மனிதாபிமானம். அதை செய்யறதுல எங்களுக்கு ஒரு திருப்தி...’’ ரிபப்ளிகாவின் அடுத்தகட்ட பணி என்ன? ‘‘சென்னைக்கருகே, குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் ரோட்டுல அமரம்பேடுங்கற இடத்தில ஆர்.எம்.டி. பெயின் அண்ட் பாலியேட்டிவ் கேர் மருத்துவமனையை கட்டிக்கிட்டு இருக்கோம்.

50 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை. புற்றுநோயாளிகள், முதியோர், ஆதரவற்றவங்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் மருத்துவமனை!’’சிகிச்சையோடு, முதியோர் பராமரிப்பு, தன் வேலையை தானே செஞ்சுக்க முடியாதவங்களை கவனிச்சுக்கறது, பல்வேறுவிதமான நோய் தாக்குதலுக்கு ஆளானவங்களை பாத்துக்கறதுன்னு பல பணிகளை இங்கே செய்யறோம்...

-மேகலா
படங்கள்: ஆர்.கோபால்