விழியே...விடைபெற்று விடாதே!



சுகர் ஸ்மார்ட்

1. நீ என் இன்சுலினை போலவேதான்...

நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது!

- டயாபடீஸ் காதல் வரிகளிலிருந்து...

சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு உச்சி (முடி உதிர்வது) முதல், பாதம் (புண் ஏற்படுவது) வரை பாதிப்புகள் ஏற்படும் என்றாலும், கண்களில் ஏற்படும் பாதிப்புகள் முக்கியமானவை. கட்டுப்படுத்தப்படாத நீரிழிவினால் எந்த அளவுக்கு கண்கள் பாதிக்கப்படும்? இதனால் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை குணமாக்குவது எப்படி? இப்படி நமக்கு எழும் பல கேள்விகளுக்குப் பதில்களை பகிர்ந்து கொள்கிறார் கண் மருத்துவர் மற்றும் விழித்திரை நிபுணர் டாக்டர் வசுமதி வேதாந்தம்.

‘‘முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீரிழிவு மிக வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுப்படி உலக மக்கள் தொகையில் 4 சதவிகிதம் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. உலகிலேயே அளவுக்கு அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருப்பது இந்தியாவில் தான். இதனால்தான் இந்தியாவை ‘நீரிழிவு நோயாளி களின் தலைநகரம்’ என்கிறார்கள். இந்தியாவில், நகர்ப்புற நீரிழிவு நோயாளிகளில் 2 சதவிகிதத்தினருக்கு விழித்திரைப் பாதிப்பு உள்ளது. சென்னையில் மட்டுமே 100 நீரிழிவு நோயாளிகளில் 5 பேருக்கு பார்வை குறைபாடு இருக்கிறது.

கண்களில் ஏற்படும் முக்கியமான பாதிப்புகள்...
கண்ணீர் ஓட்டம் குறைந்து கண்கள் உலர்தல்.

கண்புரை (கேட்ராக்ட்) உருவாகுதல்.
க்ளாக்கோமா என்ற கண் நரம்பு
அழுத்த பாதிப்பு தோன்றுதல்.
விழித்திரை பாதிப்பு.
விழித்திரையில் இருக்கும் ரத்தக்
குழாய்களில் அடைப்பு ஏற்படுதல்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 100 பேரில் 18 பேருக்கு ‘டயாபட்டிக் ரெட்டினோபதி’ எனப்படும் விழித்திரை கோளாறு தோன்றுகிறது. அதில் பெரும்பாலானவர்களுக்கு உடனடி சிகிச்சை அவசியம். விழித்திரை பாதிப்பு எப்படிஏற்படுகிறது? சர்க்கரை நோய் ஏற்படும்போது இயல்பாகவே உடலில் ரத்த ஓட்டம் குறையும்.

அப்போது விழித்திரைக்கு செல்லும் ரத்தக்குழாய்களும் பலவீனமாகி, ரத்தத்தில் இருக்கும் நீர் கசிந்து வெளியேறி, திசுக்களில் கலந்து சொதசொதப்பாக ஆகிவிடும். சிலருக்கு ரத்த மும் கசிந்து வெளியேறும். ஆரம்ப நிலையில் நோயாளிகளுக்கு அறிகுறி எதுவும் தெரியாது. பார்வையும் மங்காது. வழக்கமான கண் பரிசோதனைக்கு சர்க்கரை நோயாளிகள் செல்லும்போது, அவர்களுக்கு ‘இன்டைரக்ட் ஆப்தமோல்ஸ்கோபி’ பரிசோதனை செய்தால், தொடக்கத்திலே பாதிப்பை கண்டறிந்துவிடலாம்.

முதலிலேயே கண்டறிந்தால் சிகிச்சை எளிது.விழித்திரை நரம்புகளுக்கு அழுத்தம் ஏற்பட்டு, ரத்தக் குழாய்கள் உடைந்து கண்களுக்குள்ளே ரத்தம் சிதறி, பார்வை மங்கிய பின் வந்தால், அது நோயாளிகளுக்கு சிரமமான சிகிச்சையாகிவிடும். டைப் 1 நோயாளிகள் சர்க்கரை நோய் கண்டறியப்பட்டு சில வருடங்கள் கழித்து கண்களையும் பரிசோதிப்பது அவசியம். டைப் 2 நோயாளிகள் எப்போது சர்க்கரை நோய் கண்ட றியப் படுகிறதோ, அப்போதிருந்து கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

விழித்திரை பாதிப்புகளை நவீன முறையில் கண்டறிய ‘பண்டஸ் ஃப்ளோரெசின் ஆஞ்சியோகிராபி’ என்ற பரிசோதனை உள்ளது. ஃப்ளோரெசின் என்ற ‘டை’யை கை நரம்பில் செலுத்த வேண்டும். அது விழித்திரை நரம்பு களை சென்றடையும். அதன் மூலம் விழித்திரை நரம்புகள் எப்படி இயங்குகின்றன? அவற்றில் ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது? எங்கெங்கு அடைப்பு, கசிவு இருக்கிறது என்பதை அறியலாம்.

‘ஓ.சி.டி.’ என்ற ‘ஆப்டிகல் கோகரன்ஸ் டோமோகிராபி’ பரிசோதனையைப் பயன்படுத்தி கண்களைத் தொடாமலே திசுக்களின் மாதிரியை சேகரித்துவிடலாம். லேசர் கதிர்களை அடிப்படையாகக் கொண்டே இந்த சோதனை நடக்கும். இது விழித்திரை நரம்புகளின் அடர்த்தியை பலவிதங்களில் ஆய்வு செய்து, பாதிப்பை படங்களாக்கித் தரும். அடுத்து ‘பி ஸ்கேன்’ (B Scan)... அல்ட்ரா சவுண்ட் அலைகளை செலுத்தி விழித்திரை ஒட்டியிருக்கிறதா அல்லது பிரிந்திருக்கிறதா என்று கண்டுபிடிக்கும் சோதனை இது.

இப்பரிசோதனைகளை செய்து, பாதிப்பின் தன்மையை துல்லியமாக கண்டறிந்த பின், அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். விழித்திரையில் ஏற்படும் பாதிப்புகளுக்கு உலர வைத்தல், உறிஞ்சி எடுத்தல், ஆபரேஷன் செய்தல் ஆகிய மூன்று வகை சிகிச்சைகள் உள்ளன.விழித்திரை ரத்தக்குழாய்களில் இருந்து நீரோ, ரத்தமோ கசிந்திருந்தால் லேசர் சிகிச்சை மூலம் அதை உலர வைத்துவிடலாம்.

சில நிமிடங்களிலேயே இந்த சிகிச்சை முடிந்துவிடும். பச்சை நிற கதிர்கள் லேசர் மூலம் பாயும். பாதிக்கப்பட்ட பகுதிகளை சரியாக கணித்து, அதில் சரியான முறையில், தேவைப்படும் இடைவெளியில் லேசர் கதிர்களை பாய்ச்சுவதே இச்சிகிச்சை முறை.

உலர வைப்பதற்கு பதில் உறிஞ்சி எடுக்கும் சிகிச்சையையும் டைப் 1 நோயாளிகளுக்கு வழங்கப்படும். விழித்திரை பாதிப்புகளை நவீன முறையில் கண்டறிய கண்களுக்கு எடுக்கப்படும் சி.டி. ஸ்கேன் போன்ற இச்சிகிச்சையை விழித்திரையில் மேற்கொள்ளலாம். நீரோ, ரத்தமோ கசிந்திருக்கும் பகுதியை கண்டறிந்து, அதற்குரிய மருந்தை செலுத்தி, நவீன ஊசியை பயன்படுத்தி உறிஞ்சி எடுக்க வேண்டும்.

கசிந்த ரத்தம் விழித்திரையில் உறைந்து கட்டிபோல ஆகியிருந்தால், அதை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். இந்த அறுவை சிகிச்சைக்கு ‘விட்ரெக்டமி’ என்று பெயர். விழித்திரை என்பது வளரும் தன்மை கொண்டது அல்ல என்பதையும் சர்க்கரை நோயாளிகள் கவனிக்க வேண்டும். விழித்திரை யில் இருக்கும் ஒரு திசு இறந்து போனால் கூட, அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது.

அதனால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு நோயாளி வந்தால், விழித்திரையில் மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கத்தான் முடியுமே தவிர, இழந்த பார்வையை மீண்டும் பெற முடியாது. அதனால் சர்க்கரை நோயாளிகள் விழித்திரை தொடர்புடைய பரிசோதனைகளை தவறாமல் செய்து, பாதிப்பு இருப்பின், உடனே சிகிச்சை எடுக்கவேண்டும்.

குறிப்பாக விழித்திரை நிபுணரிடம் (ரெட்டினா ஸ்பெஷலிஸ்ட்) சென்று பரிசோதிப்பது மிகவும் நல்லது. சிலருக்கு விழித்திரையில் வலி அதிகமாக இருக்கும். அப்போதே அவர்கள் விழித்திரை நிபுணரிடம் பரிசோதனை செய்து கொண்டால் பார்வை இழப்பில் இருந்து தப்பி விடலாம்.

நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல... 40 வயது கடந்த அனைவரும் கண் மருத்துவரிடம் சென்று கண் அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கண் பிரஷர் அதிகமானால் பார்வைக் குறைபாடு ஏற்படும். எஃப்.எஃப்.ஏ. என்ற கண் பரிசோதனை மூலம் நீரிழிவால் ஏற்படும் ரத்த நாளக் கோளாறுகளை அறிய முடியும். இப்பரிசோதனைக்குப் பிறகு கண்ணுக்குள் இன்ட்ரா விட்ரியாஸ் என்ற ஊசி மருந்தை ஊசி மூலம் செலுத்துவோம். கண்ணுக்குள் வி.இ.ஜி.எப். என்ற ரசாயனம் உண்டு. இந்த ரசாயனத்துக்கு எதிராக வி.இ.ஜி.எப். மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் ரத்தநாளக் கோளாறு குணமாகும்.

விழித்திரையில் ஏற்படும் கோளாறை தடுக்க ஊசி மூலம் சிலிகான் ஆயில் செலுத்தப்படும். இது விழித்திரையை பலப்படுத்தும்’’ என்று லேட்டஸ்ட் சிகிச்சை முறைகளையும் விளக்கிய டாக்டர் வசுமதி வேதாந்தம், இறுதியாகச் சொல்கிற விஷயம் எல்லோருக்குமானதே!‘‘சர்க்கரை நோயாளிகள் கண்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முக்கியமாக என்ன செய்ய வேண்டும்?
வாரத்தில் 5 நாட்களாவது உறுதியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்!’’

ஸ்வீட் டேட்டா

டைப் 1 வகை நோயாளிகளுக்கு 15 ஆண்டுகளாக நீரிழிவு இருந்தால், அவர்களது பார்வை 100 சதவிகிதம் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. டைப் 2 வகையினருக்கு நீரிழிவு நோய் 15 ஆண்டுகள் நீடித்தால், 30 சதவிகிதத்தினரின் பார்வை கடுமையாகப் பாதிக்கப் படக்கூடும்.

விழித்திரையில் இருக்கும் ஒரு திசு இறந்து போனால் கூட, அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. அதனால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு நோயாளி வந்தால், விழித்திரையில் மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கத்தான் முடியுமே தவிர, இழந்த பார்வையை மீண்டும் பெற முடியாது.

2. பாதங்களை சிறந்த முறையில் பராமரித்துக் கொள்வது எப்படி?


உங்கள் பாதங் களை மிகவும் சுத்தமாகவும் ஈரம் படாமலும் வைத்துக் கொள்ளுங்கள்.இரண்டு பாதங் களையும் தினந்தோறும் பரிசோதித் துக் கொள்ளுங்கள். கால் விரல்களுக்கு இடையிலும் கூட... தேவையெனில் வேறு யாராவது ஒருவரின் உதவியை நாடுங்கள். பாதங்களின் கீழ்ப்பகுதியைப் பார்க்க நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை பயன்படுத்தலாம். உங்களுக்கு பார்வைக் கோளாறு இருந்தால், உங்கள் குடும்பத்தில் உள்ள யாரையாவது பாதங்களை பரிசோதிக்குமாறு கூறுங்கள்.

வீக்கமாக உள்ள அல்லது சிவந்து போய் இருக்கும் பகுதிகள், வெடிப்புகள், வெட்டுகள் அல்லது சிராய்ப்புகள், வறண்டு போன சருமத் தழும்புகள், ஜில்லென்று குளிர்வாக உள்ள பகுதிகள் (ரத்த ஓட்டம் தாழ்வாக இருப்பதை இது சுட்டிக் காட்டுகிறது) அல்லது மிகவும் சூடாக இருக்கும் பகுதிகள் (உடலின் அப்பகுதி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது) என ஏதேனும் தென்படுகிறதா என்று கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பாதங்களை தினந்தோறும் வெதுவெதுப்பான தண்ணீரில் (சுடுநீர் வேண்டாம்) நன்றாக சோப்பு போட்டு கழுவவும். குறிப்பாக கால் விரல்களுக்கு இடையில் உள்ள பகுதிகளில் ஈரம் இல்லாதபடி நன்றாக துடைத்து பாதங்களை உலர விடுங்கள்.தினமும் இருமுறை உங்கள் ஷூக்களை சோதித்துக் கொள்ளுங்கள். காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏதாவது ஒரு பொருள் இல்லாதபடி ஷூக்களை மேலும் கீழுமாக கவிழ்த்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

நன்றாக பொருந்தும் ஷூ, சாக்ஸ்களை மட்டுமே அணியுங்கள். ஒரு போதும் வெறும் காலோடு நடக்க வேண்டாம்.கால்விரல் நகங்கள் வளரும் போது ஜாக்கிர தையாக இருக்கவும். விரல் நகங்களை நேர் குறுக்காக வெட்டவும். நகங்கள் தடிமனாகவும், வளைந்தும் இருந்தால் அல்லது உங்களுக்கு பார்வைக் கோளாறு இருந்தால் வேறு யாரையாவது நகங்களை ஒழுங்காக வெட்ட உதவும்படி கேட்டுக் கொள்ளுங்கள்.

சுடுநீரால் ஏற்படும் தீப்புண், நடைபாதை, மணல், சுடுநீர் பாட்டில்கள் மற்றும் ஹீட்டிங் பேடுகள் ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள். சூட்டையோ அல்லது தீப்புண்ணையோ உங்களால் உணர முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.கால் ஆணி அல்லது பாதங்களில் தடிமனாகிப் போய் விட்ட தோலை நீங்களாகவே வெட்டி எறிய முயற்சிக்க வேண்டாம். இந்த தொல்லைகளுக்கு பொடியாட்ரிஸ்ட் எனப்படும் பாத நிபுணரிடம் காட்டி அதற்குரிய சிகிச்சையைப் பெறவும்.

பாதங்களில் சீழ்ப்புண் அல்லது வெளியே தெரியக்கூடிய வகையில் புண், வெட்டுப்பட்ட காயம் அல்லது கொப்புளத்தில் தொற்றுநோய், கால்விரல் சிவந்து மென்மையான நிலை, உணர்வில் மாற்றம் அதாவது, வலி, நடுக்கம், மரத்துப் போய்விட்ட நிலை அல்லது எரிச்சல், பாதங்களை நீங்கள் பார்க்கும் போது ஏதாவது மாற்றம் ஏதாவது வெடிப்புகள் காயங்கள் தென்பட்டால் நீரிழிவு மருத்துவர் அல்லது பொடியாட்ரிஸ்ட்டை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

டாக்டரிடம் நீங்கள் ஆலோசனை பெறும் ஒவ்வொரு முறையும் பாதங்களையும் சரிவர பரிசோதித்துக் கொள்ளுங்கள்.நீரிழிவாளர்களுக்கு என்றே இப்போது மார்க்கெட்டில் கிடைக்கிற காலணிகளை, மருத்துவர் ஆலோசனையுடன் வாங்கி அணியுங்கள். நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சிக்கு பிரத்யேகமான ஷூக்களை அணியுங்கள்.கால் விரல்களுக்கு இடையில் உள்ள பகுதிகளில் ஈரம் இல்லாதபடி நன்றாக துடைத்து பாதங்களை உலர விடுங்கள்.

(கட்டுப்படுவோம்... கட்டுப்படுத்துவோம்!)       

தாஸ்