அழகியல் சிகிச்சைகள் அவசியம்தானா?!ஹெல்த் அண்ட் பியூட்டி

அழகியல் சிகிச்சைகள் குறித்து நிறைய குழப்பங்களும், அச்சங்களும் இருக்கின்றன. அதற்கேற்றார்போல் சில நேரங்களில் அவை உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துபவையாகவும் மாறுவது குறித்து சில செய்திகளையும் பார்க்கிறோம்.
மாடலிங், சினிமா போன்ற பிரபலமான துறையினர் அழகு சிகிச்சைகள் எடுத்துக் கொள்கிற செய்திகள் அவ்வப்போது நமக்குள்ளும் ஆசைகளை உண்டாக்குகிறது. நிறைய பணம் தேவைப்படும் காஸ்ட்லியான சிகிச்சைகள் அவை என்ற எண்ணமும் பரவலாக உண்டு.

உண்மையில் அழகு சிகிச்சைகள் அவசியம்தானா? அவற்றை செய்யாவிட்டால்தான் என்ன நஷ்டம்?!
- அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர் சசிகுமார்
முத்துவிடம் கேட்டோம்...

‘‘முதலில் ஒரு விஷயத்தில் நாம் தெளிவு பெற வேண்டும். அழகியல் சிகிச்சைகள் என்பது மருத்துவ சிகிச்சையின் ஒரு பிரிவுதான். அது ஒன்றும் தனிப்பட்ட, மருத்துவத்துறைக்கு சம்மந்தமில்லாத விஷயமல்ல. உண்மையில் அழகியல் சிகிச்சைகளானது ஒரு நபரின் தோற்றப் பொலிவையும், உருவ அமைப்பினையும் சரி செய்ய பயன்படுத்தப்படும் மருத்துவத்தின் ஒரு பிரிவே. இதன் மூலமாக ஒருவர் தன் உருவத்தை இளமையாக்கி தன்னுடைய தன்னம்பிக்கையை மீட்டெடுக்க இயலும். இதனால் உடலளவிலும், மனதளவிலும் அவர்கள் பயனடைகின்றனர்.

நம் நாட்டில் பிளாஸ்டிக் மற்றும் அழகியல் அறுவை சிகிச்சைகளை அதில் தேர்ச்சி பெற்று நிபுணத்துவம் வாய்ந்த பிளாஸ்டிக் மற்றும் அழகியல் சிகிச்சை நிபுணர்கள்(Plastic & Cosmetic Surgeons) வழங்கி வருகின்றனர். இந்த அழகியல் சிகிச்சையில் பிரதானமாக இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அறுவை சிகிச்சை முறை, மற்றொன்று அறுவை சிகிச்சை இல்லாத முறை.

இவற்றில் ஒருவரின் தேவைக்கு ஏற்ற சிகிச்சை முறையினை மருத்துவர்கள் தேர்வு செய்து பரிந்துரைக்கின்றனர். அவ்வாறு பரிந்துரைக்கும் சிகிச்சை அந்த நபருக்கு பாதுகாப்பானதாகவும், பயனளிப்பதாகவும் இருக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது.

ஒரு நபரின் தலை முதல் பாதம் வரை இந்த அழகியல் சிகிச்சையை செய்ய இயலும். அந்த நபரின் தேவையே அதனை முடிவு செய்யும். அதிலும் குறிப்பாக 18 வயதினை கடந்தவர்களுக்கே பெரும்பான்மையான அறுவை சிகிச்சைகளை பரிந்துரை செய்கிறோம். உதாரணமாக, தலைமுடி மாற்று(Hair transplant), ஆண்களுக்கு ஏற்படும் மார்பகங்கள் பிரச்னை(Male breast/Gynecomastia), உடல் கொழுப்பினைக் குறைப்பது(Liposuction), பெண் மார்பகங்கள் அளவினை அதிகப்படுத்துவது அல்லது குறைப்பது(Female breast enlargement or reduction), கர்ப்பத்துக்கு பின் ஏற்படும் அடிவயிற்றின் பருமனை சரிசெய்தல்(Abdominoplasty or Tummy tuck), காது ஓட்டையினை சரி செய்வது(Ear lobe repair) போன்ற அறுவை சிகிச்சைகளை பலர் செய்து கொள்கின்றனர்.

அறுவை சிகிச்சை அற்ற முறைகளுக்கும் மக்கள் மத்தியில் சமீப காலங்களில் அதிக வரவேற்பு உள்ளது. முகப் பொலிவினைக் கூட்டுவதற்கான(Chemical peels, Lasers, Mesotherapy, Skin polishing treatments), முடி உதிர்வை குறைப்பதற்கான(PRP, PRF, Light therapy, Cell therapy), முகப்பருக்கள் மற்றும் தழும்புகளை சரி செய்வதற்கான(Acnes & Acne Scar management), முகசுருக்கங்கள் மற்றும் தொய்வினை நீக்கி இளமை தோற்றம் பெறுவதற்கான (Botox, Fillers & thread lift treatments) சிகிச்சைகளை பலரும் தற்போது நாடுகின்றனர்.

அழகியல் சிகிச்சைகளை பலரும் தேவையற்ற ஒன்று என கருதுகின்றனர். அது மிகவும் தவறான எண்ணம். ஒருவர் தன் உடல் மற்றும் தோற்ற குறைபாடுகளால் உடலளவிலும், மனதளவிலும் பல இன்னல்களை சந்திக்கின்றனர். இந்த வகை சிகிச்சைகளை செய்து கொள்வது, அவர்கள் மீண்டும் தங்களின் உடல் அமைப்பினையும், தன்னம்பிக்கையையும் மீட்டெடுக்க உதவும்.

இந்த அழகியல் சிகிச்சை சரியான வயதினை அடைந்த, மருத்துவ குறைபாடுகள் இல்லாத, சரியான எதிர்பார்ப்பினை கொண்டவர்கள் யார் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எந்த ஒரு அழகியல் சிகிச்சையினையும் வரையறுக்கப்பட்ட வரம்பிற்குள் செய்வதே நல்லது.

மேலும் இந்த துறையில் சரியான நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது. யார் ஒருவர் இந்த வகை சிகிச்சைகளுக்கு அடிமையாகி விடுவார் என்று தோன்றுகிறதோ, அந்த நபரை இவ்வகை சிகிச்சைகளுக்கு உட்படுத்தாமல் இருப்பதே நல்லது. அழகியல் சிகிச்சை முறைகள் மருத்துவ காப்பீட்டின் கீழ் வருவதில்லை.

இந்த வகை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் விலையும் சற்று அதிகமாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் இந்த வகை சிகிச்சைகள் விலை உயர்ந்ததாக உள்ளது. இந்த வகை மருத்துவ சேவை அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது. எனவே இந்த சிகிச்சை முறைகள் பணம் படைத்தவர்களுக்கும், பிரபலங்களுக்கும் மட்டுமே என்கிற கூற்றும் தவறானது’’ என்கிறார் மருத்துவர் சசிகுமார் முத்து.

- க.கதிரவன்