மாஸ்க்கின் தரத்தை நிர்ணயிப்பது யார்?!கவர் ஸ்டோரி

‘‘மாஸ்க்கைப்பற்றிய எந்தவொரு நிலையான இயக்க நடைமுறையையும் (Standard Operating Procedure SOP) அரசாங்கம் இதுவரை பரிந்துரைக்கவில்லை. ஐ.சி.எம்.ஆரும் இதுவரை எதுவும் வழிகாட்டுமுறையை கொடுக்கவில்லை’’ என்கிறார் இந்திய நுகர்வோர் சங்கத்தின் மக்கள் தொடர்பு அலுவலரான சோமசுந்தரம்.

என்.95 மாஸ்க், சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும் துணி மாஸ்க் என 3 வகையான மாஸ்க் நம்மூரில் உபயோகிப்பதைப் பார்க்கிறோம். வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் நம் உடலின் உள்ளே செல்லாமல் தடுப்பதற்காக முகத்தில் நாம் அணிந்துகொள்ளும்  சர்ஜிகல் மாஸ்க் தயாரிப்பதற்கு பல விதிமுறைகள் ‍இருக்கிறது.
இதற்கு பல அரசு அலுவலகங்கள் மற்றும் பரிசோதனைக்கூடங்களில் சாம்பிள் கொடுத்து பரிசோதிக்கப்பட்டு அனுமதிச் சான்றிதழ் வாங்க வேண்டும். சோதனை நடைமுறைகளும் நிறைய உள்ளது. ஆனால், பல பிரபல கம்பெனிகள் மாஸ்க் தயாரிப்பில் தற்போது இறங்கியிருக்கின்றன. அதன் விளம்பரங்களையும் மீடியாக்களில் வெளியிட்டு வருகின்றன.

போலீஸ் அதிகாரிகள் கேட்பார்கள் என்றோ, மாஸ்க் போடாமல் எந்த கடைக்கும் போக முடியாது என்றோ கண்ட இடங்களில் கண்ட மாஸ்க்கையும் அணிந்துகொண்டு சுற்றுபவர்கள்தான் அதிகம். அதையே திரும்பத் திரும்பவும் உபயோகிப்பார்கள். பலர் கைக்குட்டையையே மாஸ்க்காக முகத்தைக் மூடிக்கொண்டு போவதையும் பார்க்க முடிகிறது.  கைக்குட்டையானது வெளியில் இருந்து வரும் தூசியை மட்டும் தடுக்கும். வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களைத் தடுக்காது. இது பனியன் மற்றும் போர்வை துணியில் தயாரிக்கும் மாஸ்க்குகளுக்கும் பொருந்தும்.

மாஸ்க் தயாரித்தால் அதனை 5 வகையான சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். அதன் பின்னரே பயன்பாட்டிற்கு வர வேண்டும். பாக்டீரியாவை வடிகட்டும் திறன், துகள் வடிகட்டும் திறன், சுவாச எதிர்ப்புத்திறன், எச்சில் துளி எதிர்ப்புத்திறன், எரியக்கூடிய தன்மை என 5 வகை சோதனைகள் இருக்கிறது. ஆனால், கொரோனா வந்த பிறகு மாஸ்க் தயாரிப்பு என்பது நம் நாட்டில் குடிசைத்தொழிலாக மாறிவிட்டது. எந்த ஒரு வழிகாட்டுதலோ, நடைமுறையோ இல்லாமல் அரசு அனுமதி மற்றும் பரிசோதனைக்கூடங்களின் சான்றிதழ் பெறாமலேயே தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.

கட்டுகிற புடவைக்கு மேட்சிங் கலரில் தரமற்ற மாஸ்க்குகளும் சாலை ஓரங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. Reusable என்று இப்போ நிறைய விளம்பரங்கள் வருகிறது. என்.95, 98 வகையான மாஸ்க்குகளுக்கு மட்டுமே Reusable என்பது பொருந்தும். இதேபோல் சர்ஜிக்கல் மாஸ்க் என்று சொல்லப்படும் சாதாரண மாஸ்க்குகள் 0.3 மிலிகிராம் அளவு கொண்ட பாக்டீரியாக்கள் வரை உள்ளே செல்லாதவாறு தடுக்கும் தன்மை கொண்டது.

என் 95,98 மாஸ்க்குகள் 0.1 அளவு வரையிலான பாக்டீரியாக்களை வைரஸ்களை தடுக்கும் தன்மை கொண்டது. என் 95,98 மாஸ்க்கும், சர்ஜிகல் மாஸ்க்கும் கொஞ்சம் காஸ்ட்லி என்பதாலும், மருத்துவர்களுக்கும், மருத்துவ உதவியாளர்களுக்கும் கிடைக்காமல் போய்விடும் என்பதால் துணி மாஸ்க்கை உபயோகப்படுத்தச் சொன்னார்கள். முடிந்தவரை அங்கீகரிக்கப்பட்ட சர்ஜிக்கல் மற்றும் என் 95, 98 மாஸ்க்குகளை மெடிக்கல் ஷாப்புகளிலும் விற்பனைக்கு அனுமதி தரப்பட்டுள்ள கடைகளிலும் வாங்கி பயன்படுத்துவது சிறந்தது.

கடைசியாக ஒரு தகவல்... கோடிக்கணக்கான மாஸ்க்குகள் இப்போது இந்தியாவுல மக்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். கொரோனா பீரியட் முடிந்து மாஸ்க் வேண்டாம் என்று முடிவெடுத்தால், மக்களால் தூக்கி எறியப்படற  மாஸ்க்குகளே மிகப்பெரிய சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தும் ஆபத்து காத்திருக்கிறது. மாஸ்க் பயன்படுத்த அறிவுறுத்தும் அரசு, அதனை பயன்படுத்திய பின்னர் எவ்வாறு அப்புறப்படுத்துவது என்கிற முன்னெச்சரிக்கை விழிப்புணர்வினையும் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

- என்.ஹரிஹரன்

மாஸ்க் எப்படி அணிய வேண்டும்?

* முகத்திற்கும், கவசத்திற்கும் இடைவெளி இல்லாமல் வாய், மூக்கு இரண்டையும் நன்றாக மூடியிருப்பது போல் மிகவும் இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ இல்லாமல் அணிய வேண்டும்.

* மாஸ்க்கை அணிவதற்கு முன் கைகளை சோப்புப்போட்டு கழுவியபின்னரே மாஸ்க்கை தொட வேண்டும்.

* ஒரு முறை அணிந்தபிறகு அதை தொடக்கூடாது. வீட்டிற்கு வந்தபின்னர்தான் அவிழ்க்க வேண்டும்.

* கழட்டும்போது காதின் பின்புறமாக நாடாவை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். நடுவில் கையை வைத்து கழட்டக் கூடாது.

* சர்ஜிக்கல் மாஸ்க் என்றால் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதும், துணி மாஸ்க் என்றால் சோப்பால் துவைப்பதும் அவசியம்.

* கழற்றியபிறகு கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

* குழந்தைகளுக்கு அவர்களுக்கேற்ற அளவில் மாஸ்க் வாங்க வேண்டும். அளவில் பெரியதை மாட்டிவிட்டால் இடைவெளிகளில் வைரஸ் புகுந்துவிடும்.

* இடையிடையே, மாஸ்க்கை கழுத்தில் தொங்க விடுவதோ, கீழே இழுத்துவிட்டு பேசுவதோ கூடாது.

* பொதுப் போக்குவரத்தில் அலுவலகம் செல்பவர்கள், மாற்று மாஸ்க் ஒன்றை கைப்பையில் (சின்னதாக ஒரு கவரில் போட்டு) வைத்துக் கொண்டு, அலுவலகம் சென்றவுடன் வேறு ஒன்றை மாற்றிக் கொள்ளலாம்.

* முக்கியமாக எந்த மாஸ்க்காக இருந்தாலும் கிழிந்தோ, அழுக்காகவோ இருக்கக் கூடாது.