வேலை இழப்பு... பொருளாதார சிக்கல்... நோய் அச்சம்...



நம்பிக்கை

நெஞ்சே எழு!

‘சிவாவுக்கு அன்றைய சூரியன் எழ மறுத்து இருள் சூழ்ந்தது போல இருந்தது அந்த செய்தி. இதயம் உடைந்து சிதறியதாய் உணர்ந்தான். கண்களில் மழை மேகம். அவன் ஆண் என்பதால் தனக்கு நேர்ந்த வேதனையை வெளிப்படுத்தாமல் விழுங்கினான். அவனது பிளட் பிரஷர், எகிறியது, சுகர் லெவல் தாறுமாறானது. அவனது உடல்நலம் உருக்குலைந்தது.
அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி அவனை பலம் கொண்ட மட்டும் தாக்கியது. தன்னம்பிக்கையின் கரம் பிடித்தபடி அவன் மனம் வாழும் ஆவலில் தத்தளித்தது. ஆம்… இது சிவாவுக்கு மட்டுமில்லை; பலருக்குமான இப்போதைய பதைபதைப்பு.

கொரோனாவுக்குப் பின்பான நீண்ட விடுமுறை, சம்பளக் குறைப்பு, கட்டாய வேலை நீக்கம், வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டிய அழுத்தம்… இது தவிர அடுத்தகட்ட ஊரடங்கு எப்போது, எப்படியிருக்கும் என்ற பயமும் பலரையும் துண்டாடுகிறது. இச்சூழ்நிலையை எப்படி எதிர்கொண்டு வெல்வது... உளவியல் ஆலோசகர் பாபு ரங்கராஜன் பதிலளிக்கிறார்.

பல வேதனைகளையும், சவால்களையும் மனித இனம் எல்லாக் காலகட்டங்களிலும் சந்தித்துக் கடந்து வந்துள்ளது.  இதைத் தாண்டியும் அடுத்தடுத்த மகிழ்வான நாட்களை தனக்காக உருவாக்கிக் கொள்ளும் தெளிவும் மனித இனத்துக்கு உண்டு. வாழ்வது மட்டுமே மனித இனத்தின் இலக்கு. இதற்கு இடையில் வருகிற எல்லா துக்கங்களும் கடந்து போய்விடும் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி. கோவிட் 19 உடலளவிலும் மனதளவிலும் பலவிதமான  பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வாழ்க்கை நடத்த பணம் என்பது மிக முக்கியமான ஆதாரமாக இருக்கிறது. அந்த பணம் என்பது நம் தொழிலில்/வேலையில் இருக்கிறது. மாத வாடகை, உணவுக்கான செலவுகள், போக்குவரத்து, பொருட்களை வாங்கியதற்கான ஈ.எம்.ஐ., சேமிப்பு என பணம் இருந்தால் பெரும்பாலான பிரச்னைகளை சமாளித்துவிட முடியும். ஆனால் சம்பளக் குறைப்பும், வேலை இழப்பும் இயல்பான வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. அடுத்து என்ன என்கிற பயமே பலரையும் நோயாளியாக மாற்றுகிறது. நாமும் பிரச்னைகளையே யோசித்து, பலரிடவும் அதையே பகிர்ந்துகொள்ளும்போது மன வருத்தம், மனக்கவலையாக மாறும்.

இந்த சோகம், கவலை, மன வருத்தம் எல்லாம் சேர்ந்து உடல் நலத்தையும் பாதிக்கிறது. ஏற்கெனவே ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சர்க்கரை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை இன்னும் இந்த சூழலால் மோசமாகிறது.

இதுவரை குடும்பத் தலைவனின் சம்பாத்தியத்தில் குடும்பம் நடந்திருக்கும். கணவருடைய வேலை பறிபோகும்போது குடும்பத்தை எப்படி நடத்துவது என்று பயம் மனைவிக்கு எழும். இதனால் இருவருக்குள்ளும் ஏற்படும் விவாதங்கள், சண்டையாக மாறும். குழந்தை வளர்ப்பும் சவாலாகும். குழந்தைகளை வசதிக்குறைவை ஏற்றுக்கொள்ள வைப்பது மிகவும் கஷ்டம். அடம்பிடிப்பார்கள். புரிந்துகொள்ளாத குழந்தைகள் மனதளவில் சங்கடங்களை சந்திப்பார்கள்.

எப்படியோ ஓரிரு மாதம் நிலைமையை சமாளிக்கலாம். ஆனால், அடுத்தடுத்த மாதங்களிலும் இதே நிலை நீடித்தால் மனக்கவலை, மனப்பதற்றம், மனக்குழப்பம், எப்படி வாழ்வது என்கிற பயம் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வாழப் பிடிக்காமல் தற்கொலைக்கு முயல்வது, சாப்பிடப் பிடிக்காமல் உணவை மறுப்பது, தூக்கம் இல்லாமல் தவிப்பது என்று பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.

இந்த சமயத்தில் மனதை திடமாக எப்படி வைத்துக் கொள்வது? எப்படி இந்த சூழ்நிலையைக் கடப்பது?

இது உங்களுக்கு மட்டுமான பிரச்னை இல்லை. உலகம் முழுக்க எல்லா மக்களுக்குமான சவால். பணத்தை இழந்து, உறவுகளை இழந்து, வாழ்வதற்கு அஞ்சி என அவரவருக்கான சவால்கள் ஆயிரம். உதவுகிற குணமும் மக்களிடம் அதிகரித்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.

ஒரு மாதத்துக்கான மளிகைப் பொருட்கள், மாஸ்க், சானிட்டைசர் இப்படி பலவிதமான உதவிகள் எங்கிருந்தோ யார் யாரையோ சென்றடைகிறது. எனவே, இந்த சூழலைக் கடக்க நாம் முதலில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த சூழலில் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். தன்னம்பிக்கையை இழந்துவிட்டால், சாதாரண பிரச்னைகள் கூட பெரிய பிரச்னைகளாக வளர்ந்து நிற்கும்.

எனவே நல்ல நிலைமைக்கு/பழைய நிலைக்குப் போக முடியும் என்று நம்ப வேண்டும். எல்லாமே மாறிவிடும் என்றும் நம்புங்கள். இதற்கு முதற்கட்டமாக உங்களுக்குள் நடக்கும் சுய உரையாடலைக் கவனியுங்கள். நாம் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம், நமக்குள் என்ன புலம்பிக் கொண்டு இருக்கிறோம் என்று பாருங்கள்.

நாம் பேசிக்கொண்டிருக்கிற விஷயங்கள்தான் நம்மை டிஸ்டர்ப் பண்ணிக் கொண்டு இருக்கும். ‘வாழ முடியல, பணக்கஷ்டம், பணம் இல்லாம என்ன பண்றது, அடுத்து என்ன பண்றது, பணம் வர்ற வழியில்லை...’ இப்படி உங்கள் மனசுக்குள் சோகமான விஷயத்தையே சொல்லிக்கொண்டு இருப்பீர்கள். இப்போது உங்களுடைய நிலைமையும் அப்படிதான் இருக்கும். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்... நீங்கள் யோசிக்கும் முறையை மாற்ற வேண்டும்.

நிலைமை மாறிக் கொண்டு இருக்கிறது, சூழல் மாறிவிடும், கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறது என்று பாசிட்டிவாக உணரலாம். இதற்கு முன்பு வாழ்வில் நடந்த பாசிட்டிவான விஷயங்களை நினைவுகூறலாம். பணம் வரும், நான் இன்னும் கூடுதலாக உழைக்கப் போகிறேன். என்னுடைய திறமை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

எனக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்ப வேண்டும். சிறிய இலக்குகளை நிர்ணயித்து அதை அடைய முயற்சி செய்ய வேண்டும். (பெரிய இலக்குகள் இந்த சூழலில் பதற்றத்தை உண்டுபண்ணலாம்.) அது உங்களுக்குள்ள நம்பிக்கையை
அதிகப்படுத்தும்.

உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி, தட்டிக் கொடுப்பதால் மூளைத்திறன் அதிகரிக்கும். எதையும் செய்வதற்கு மூளை தயாராக இருக்கும். நம் சிந்தனைகள்தான் நம்மை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். சிந்தனையை மாற்றாமல் நேர்மறை எண்ணங்களை மட்டும் சேர்த்து வையுங்கள். உங்களது திறமைக்கான எந்தவொரு சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்பின் சூழல் மெல்ல மெல்ல உங்களுக்கு சாதகமாக மாறுவதை உங்களாலேயே புரிந்துகொள்ள முடியும்.

இதனால் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களுடைய மனக்கவலைகளை ஒரு பேப்பரில் எழுதுங்கள். பிறகு அவையெல்லாம் சரியாகிவிடும் என்று அந்த காகிதத்தைக் கிழித்துப் போட்டுவிடுங்கள். பாசிட்டிவான மாற்றங்களை ஏற்றுக் கொள்ள உங்களைத் தயார் படுத்துங்கள். உங்கள் வார்த்தையும் மாறும்; வாழ்க்கையும் மாறும். இதனால் உடல் நலக் குறைவுகள் ஏற்படாமலும் தடுக்கலாம்!

குடும்பத்தினர் செய்ய வேண்டியது…

திடீர் லாக்டவுன், எதிர்பாரா நிதிச்சுமைகளும் மாதக்கணக்கில் அடுத்து என்ன நடக்கும் என்ற சஸ்பென்சுடனேயே நம்மை வைத்திருக்கிறது. இதில் யாருக்கு எப்போது வேலை போகும் என்ற அதிர்ச்சி மனதில் இடியாய் இறங்கி பாதிக்கப்பட்டவர்களை நிலைகுலையச் செய்துள்ளது.

ஒருவர் வேலையில் இருந்தபோது அதற்கான பலன்களை அவரது குடும்பம் அனுபவித்திருக்கும். இந்தச் சூழலில் முதலில் ஆதரவுக் கரம் கொடுத்து நம்பிக்கை அளிக்க வேண்டிய பொறுப்பு குடும்பத்தினருக்கு உண்டு.

கணவரோ மனைவியோ வேலை இழந்த தகவலைக் கேட்ட உடன் உங்கள் அன்பு ஆதரவாக மாறட்டும். இத்தனைக் காலம் உழைத்தவர்கள் இந்தச் சூழலில் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளட்டும். சேமிப்பு மற்றும் கடன் பெறுவதற்கான வாய்ப்புக்களை வைத்து ஒரு சில மாதங்கள் சமாளிக்கலாம் என்று ஆதரவாகப் பேசுங்கள். இன்னொரு வேலைக்கு முயற்சி செய்யவும் உதவி செய்யுங்கள்.

கொரோனா காலத்தில் எவ்வளவு சிக்கனமாகவும் குடும்பம் நடத்த முடியும் என்பதையும் கற்றுக் கொண்டுள்ளோம். இதனால் குறைந்த வருவாயில் வேறு வேலை கிடைத்தால் கூடச் சமாளிக்கலாம் என்று உற்சாகப்படுத்துங்கள்.

வேலை இல்லாவிட்டாலும் குடும்பத்தினர் இணைந்து சுய வேலை வாய்ப்பு மூலமாக குடும்பத்தின் செலவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும். அதனால் வேலை இழந்த பின்னர் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல் அதனைக் கடப்பதற்கான வாய்ப்புகளைப் பற்றி மட்டும் பேசுங்கள். இழப்பில் இருந்து விடுபட்டும் அவர்கள் தனது குடும்பத்தையே பலமாக உணர வைக்கலாம்.

வயதானவர்களும் வேலை இழப்பும்

இன்னும் ஒரு ஆண்டில் ரிட்டயர்ட் ஆகப் போகிறவர்களையும் வேலையை விட்டு அனுப்ப நிறுவனங்கள் தயங்குவதில்லை. மகன் அல்லது மகளின் திருமணம் இருக்கலாம், வீடு கட்டுவதற்காக வாங்கிய லோன் முடிவடையும் தருணமாக இருக்கலாம். இப்படி அவர்களது கனவு நனவாகும் தருணத்தில் வேலை இழப்பு மற்றவர்களை விட அவர்களை வெகுவாக பாதிக்கும். வயது அதிகமாவதால் இது போன்ற பேரிழப்புகளை எதிர்கொண்டு மீளும் தன்னம்பிக்கை இவர்களிடம் குறைவாக இருக்கும்.

வயது மற்றும் அனுபவம் நிறுவனத்துக்கும் இவர்களுக்கும் இடையில் உருவான பந்தம் எல்லாம் உடையும்போது இவர்கள் தங்களது வேதனையை வெட்கப்படாமல் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும். பகிர்ந்து கொள்வதன் மூலம் மனதின் பாரத்தைக் குறைத்துக் கொள்ளலாம். இது உங்கள் துயரம் மட்டும் இல்லை. பலருக்கும் நடந்துள்ளது. இப்போதைக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வர வேண்டும்.

சர்க்கரை மற்றும் இதய நோயாளிகள் வேலை இழப்பை எதிர்கொள்ளும் விதம் கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் ஏற்கனவே சர்க்கரை மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய் உள்ளவர்களின் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். இந்தக் காலகட்டத்தில் வேலை இழப்பினால் உண்டாகும் மன அழுத்தம் இவர்களைத் தாக்கும்போது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் இவர்களை சோம்பல் அடையச் செய்யும்.

இதனால் தான் எந்த வேலையும் செய்யத் தகுதி இல்லாதவன் என்ற மனநிலை ஏற்படும். தூங்கிக் கொண்டே இருப்பார்கள் அல்லது தூக்கம் இன்றித் தவிப்பார்கள். அதிகம் பசிக்கும் அல்லது சாப்பிடப் பிடிக்காமல் இருக்கும். இதனால் இவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேலும் குறையும். மனதளவில் பலவீனம் அடையச் செய்யும். மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தால் தான் இவர்கள் நோய்க்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட வேலை செய்யும்.

மன உளைச்சல், மன அழுத்தம் மற்றும் மனப்பதற்றம் போன்ற நிலைகளுக்குச் செல்லாமல் தவிர்க்க இயல்பு நிலையில் இருக்க வேண்டியது அவசியம். இவர்களுக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாகப் பேசலாம். புதிய வேலை மற்றும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளலாம். பாதிப்புகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் வாய்ப்புகள் பற்றிப் பேசலாம். பாசிட்டிவாக இந்தச் சூழலை எதிர்கொண்டால் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

வேலை இழப்புக்குப் பெண்களால் உண்டாகும் பாதிப்பும் தீர்வும்

ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் வேலைகளுக்குச் செல்கின்றனர். பெண்களின் வருமானம் முழுக்க குடும்பத்தை நடத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. திருமணம் ஆகாத பெண்களின் வருவாய் இழப்பு அவர்களது எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. திருமணம் ஆன பெண்கள் குடும்ப நிர்வாகம், குழந்தை வளர்ப்பு ஆகிய இரண்டு பணிகளையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் செல்கின்றனர். திடீர் வேலையிழப்பு பெண்களை பாதுகாப்பற்ற உணர்வில் தள்ளும்.

அந்தப் பெண்ணின் தந்தை அல்லது கணவர் அவர்களுக்கு ஆதரவாகப் பேச வேண்டும். இவ்வளவு காலம் நீ உழைத்தது போதும். இந்தக் காலகட்டத்தில் ஓய்வெடுத்துக் கொள். அடுத்த வாய்ப்பு கண்டிப்பாக உண்டு என்ற நம்பிக்கை கொடுங்கள். நம்பிக்கை  தான் நாம் இந்தச் சூழலைக் கடப்பதற்கான ஒரே மருந்து!

- யாழ் ஸ்ரீதேவி