மகிழ்ச்சியாய் இருப்பதன் ரகசியம்!



ஆராய்ச்சி

‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே’ என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா...

அதுபோல் மகிழ்ச்சியாய் இருப்பதற்கான சிம்பிள் வழி ஒன்றை உளவியல் நிபுணர்கள் தற்போது பரிந்துரைக்கிறார்கள். ‘உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும், வெளித்தோற்றத்தில் புன்னகைத்துப் பழகுங்கள். அது காலப்போக்கில் நிஜமாகவே உங்கள் உள்ளத்திலும் மகிழ்வை உண்டாக்கிவிடும்’ என்பதுதான் அந்த சிம்பிள் டெக்னிக்...

மகிழ்ச்சிக்கும் புன்னகைக்கும் என்ன தொடர்பு என்று அறிவதற்காக ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 11,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 138 ஆய்வுகளின் தரவுகளை இதில் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். ஆய்வின் முடிவில் நமது மனம் சார்ந்த உணர்வுகள், பிறருடைய முக பாவனைகளின் வெளிப்பாடுகளால் பாதிக்கப்படுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து விளக்கமளிக்கும் ஆராய்ச்சியாளர்கள், ‘புன்னகைப்பதன் மூலம் மக்கள் தங்களுடைய மகிழ்ச்சிக்கான வழியை அடைய முடியும் என்பதை நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், நமது உணர்ச்சிகளின் அனுபவத்தை வடிவமைக்க நமது மனமும் உடலும் எவ்வாறு ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்கின்றன என்பதற்கான ஒரு குறிப்பை வழங்கியிருப்பதன் மூலம் இந்த கண்டுபிடிப்பு எங்களுக்கு உற்சாகமளிப்பதாக இருக்கின்றன.

புன்னகை போன்ற பிற முக பாவனைகளால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நாம் இன்னும் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும். ஆனாலும் இந்த ஆய்வு, உணர்ச்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாங்கள் புரிந்து கொள்வதற்கு மனதுக்கு கொஞ்சம் நெருக்கமாக இருக்கிறது என்கிறார்கள்.
புன்னகையின் மகிமையை விளக்கிய இந்த ஆய்வுக்கட்டுரை Psychological Bulletin என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

- கௌதம்