தொடரும் கட்டண குழப்பத்துக்கு என்ன தீர்வு?!சர்ச்சை

அண்மை காலமாக கொரோனாத் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை அதிகம் தேவைப்படுகிறது. படுக்கைகள் கிடைக்காதது ஒரு புறம் இருக்க, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவரை அனுமதித்தால் அதிக கட்டணம் வசூலிப்பதால் பொது மக்கள் மத்தியில் அதிக கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளரான மகப்பேறு மருத்துவர் சாந்தியிடம் பேசினோம்...

‘‘சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கான பராமரிப்பிற்கு 17,500-க்கும் மேற்பட்ட படுக்கைகளை கோவிட் கேர் சென்டர்களில் தமிழக அரசு உருவாக்கியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்காக 4900 படுக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும், கோவிட் நோயாளிகளுக்கான பராமரிப்பிற்கு 75,000 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த எண்ணிக்கை போதாது. தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் வென்டிலேட்டர்கள் போன்றவற்றை அனைத்து மாவட்டங்களிலும் கட்டாயமாக அதிகப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் பாதிக்கும் மேல் மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றன. இக்கொேரானா காலத்திலும் தனியார் மருத்துவமனைகளின் சேவை முன்பை விட அதிகமாக தேவைப்படுகிறது. தமிழகத்தில் கொேரானாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர உயர தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டமும் அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவமனைகள், பல நேரங்களில் கடும் கட்டணக் கொள்ளைகளில் ஈடுபடுகின்றன.

இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. மிகவும் காலதாமதமாக அதைச் செய்துள்ளது. நிர்ணயித்துள்ள கட்டணங்களும் அதிகமாக உள்ளன. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற சில மாநிலங்களின் கட்டணங்கள் தமிழகத்தை விட குறைவாகவே உள்ளன.

முதலமைச்சர் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 1.58 கோடி குடும்பங்கள் பயனடைகின்றன. தமிழக மக்களில், ஏறத்தாழ 77 விழுக்காட்டினர் இதில் பயனாளிகளாக  உள்ளனர். இந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூ 2 லட்சம் வரை மட்டும்தான் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இவர்களுக்கெல்லாம் இந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம், கோவிட் 19-க்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என அரசு கூறுகிறது. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்து பயன் பெற தகுதியான குடும்பங்களுக்கு இவை பொருந்தும்.

இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்க அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் உள்ள மொத்த படுக்கைகளில் குறைந்தபட்சம் 25 விழுக்காட்டை முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கொேரானா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்க வேண்டும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணத்தையும் கூடுதலாக செலுத்தத் தேவையில்லை.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக கட்டணம் செலுத்தக் கோரும்  மருத்துவமனைகளுக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மேலும் விவரங்கள் அறியவும், புகாருக்கும் 1800 425 3993 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.’’

முதல்வர் காப்பீட்டுத் திட்டம் பயன் தருமா?

‘‘தமிழக அரசின் இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் மக்களுக்கு முழுமையாக பயன் அளிக்காது. ஏனெனில், பல குடும்பங்கள் இந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தை ஏற்கனவே வேறு சில சிகிச்சைகளுக்கு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பயன்படுத்தி இருக்கலாம். அவ்வாறெனில் அக்குடும்பத்தினர்  இக்காப்பீடு திட்டத்தை கொேரானா சிகிச்சைக்கு பயன்படுத்த இயலாது.

கொரோனா கடுமையான தொற்று நோய் என்பதால் ஒரு குடும்பத்தில் ஒரே நேரத்தில் பலருக்கும் வர வாய்ப்புள்ளது. அவர்களில் பலருக்கும் சிகிச்சை தேவைப்படலாம். ஒரு நபருக்கு 15 அல்லது 20 நாட்கள் வரை தீவிர சிகிச்சை தேவைப் பட்டு, அவரது சிகிச்சைக்கு இக்காப்பீட்டை பயன்படுத்திவிட்டால், பிற உறுப்பினர்களுக்கு கட்டணம் செலுத்த இக்காப்பீட்டில் பணம் இருக்காது. எனவே இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் முழுமையாக மக்களுக்கு பயன் அளிக்காது.

கொரோனாத்தொற்றை  உறுதி செய்வதற்காக செய்யப்படும் பி.சி.ஆர் டெஸ்ட்டே 50 முதல் 60 விழுக்காடுதான் நம்பகத்தன்மை உள்ளது. எனவே சிகிச்சை பெறும்போது கொரோனா என்று பரிசோதனையில் உறுதியாகவில்லை எனில், இந்த காப்பீட்டு நிதி கிடைக்காது.

எனவே, இதன் காரணமாகவும், வேறு சில தொழில்நுட்ப காரணங்களாலும் முடிவுகள் தொற்று இல்லை என வந்தால் இந்த மருத்துவக் காப்பீட்டுப் பணம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

இத்தகைய பிரச்னைகள் பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்திலும் இருக்கின்றன. மருத்துவக் காப்பீடுகள் மூலம் கொரோனாவிற்கு சிகிச்சை வழங்குவது என்பது அனைவருக்கும் முழுமையான பயனளிக்காது.’’ தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை நடப்பதாக வரும்
புகார்கள் பற்றி...

‘‘தனியார் மருத்துவமனைகளில் கொேரானா சூழலைப் பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு படுக்கை கட்டணமாக 40,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.அதனால் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் வராத பிரிவினருக்குமான, தனியார் மருத்துவமனை படுக்கைக் கட்டணங்களையும் அரசு நிர்ணயித்துள்ளது.

அறிகுறிகள்  இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு ரூ.5000,     அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைக்கான கட்டணம் கிரேடு 1-க்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலும், கிரேடு 2-க்கு     ரூ 9 ஆயிரம் முதல் ரூ.13,500 வரையிலும் வசூலிக்கலாம். பி.சி.ஆர் பரிசோதனை செய்ய கட்டணம் ரூ 2500. வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்ய கூடுதலாக ரூபாய் 500 சேர்த்து ரூபாய் 3000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்துள்ள, கொேரானா சிகிச்சைக் கட்டணங்கள் சாதாரண மக்களுக்கு அதிகமானதே. அரசு நிர்ணயித்துள்ள, இந்தக் கட்டணங்களில் தனியார் மருத்துவமனைகள், ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களுக்குத் தேவைப்படும்  எல்லா மருந்துகளையும், சிகிச்சைகளையும் வழங்கும் என உத்தரவாதம் கொடுக்க முடியுமா? ஏனெனில் பல முக்கியமான மருந்துகளின் விலை மிக மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக ரெம்டிசிவிர் மற்றும் டொசிலிசுமேப் போன்ற மருந்துகள் அளித்திட ஒன்று முதல் ரூ 2 லட்சம் வரை செலவாகும்.

கொரோனா பரிசோதனை  உட்பட அனைத்து பரிசோதனைக் கட்டணங்களும் மிக அதிகமாக உள்ளன. இந்த மருந்துகள் எல்லாம், இந்த கட்டண நிர்ணயத்திற்குள் வராது. இந்த மருந்துகளுக்காக சாதாரண மக்கள் செலவு செய்யவும் இயலாது. தனியார் மருத்துவ மனைகளாலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் வழங்க இயலாது.

தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சை செலவுகளை அரசே ஏற்க வேண்டும். பெருந்தொற்று காலங்களில் அனைவருக்கும் சிகிச்சை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் கொேரானா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்க முடியுமா? என உயர்நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளது.

அவ்வாறு அரசு, தனியார் மருத்து சிகிச்சைக் கட்டணங்களை செலுத்துவது என்பது கூடுதல் செலவையும்,சில நடைமுறை சிக்கலையும் அரசுக்கு உருவாக்கும்.  எனவே, பெரிய தனியார் மருத்துவமனைகளை அரசே தனது முழுமையான கட்டுப்பாட்டில் சில மாதங்களுக்கு மட்டுமாவது ஏற்க வேண்டும்.

மருத்துவமனை உரிமையாளர்களுக்கு வாடகையை மட்டும் வழங்கிவிட வேண்டும். இதர பராமரிப்பு செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும். இதை பல தனியார் மருத்துவமனைகளும்  நிச்சயம் ஏற்கும். ஏனெனில், கொரோனாவால், பல தனியார்  மருத்துவ மனைகள் இழப்பை சந்தித்து வருகின்றன.

ஏற்கனவே ஆந்திரா அரசு 58 தனியார் மருத்துவமனைகளை அவற்றின் ஊழியருடன் சேர்த்து எடுத்து நடத்திவருகிறது. மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகளை கையகப்படுத்தியுள்ளன.

எனவே, நமது மத்திய, மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளை ஏற்க வேண்டும். கொேரானா கொள்ளை நோயிலிருந்து மக்களைக் காத்திட வேண்டும்.கொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், ஆஸ்பத்திரிகளுக்கு சென்று ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இது தற்போது நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.’’

- அ.வின்சென்ட்