டியர் டாக்டர்



*மழைக்காலம் இனிதாக எளிய ஆலோசனைகளைக் கொடுத்து, அத்துடன் இதமான சூப்களையும் பட்டியலிட்டு எங்கள் மனதைக் கதகதப்பாக்கிவிட்டீர்கள். யூகலிப்டஸை நாட்டு வைத்தியம் போல நீண்ட நாட்களாகவே பயன்படுத்தி வருகிறோம். அது மருத்துவரீதியாகவும் பயன் மிக்கதே என்ற விளக்கத்தைத் தெரிந்துகொண்டோம். மருத்துவ செய்திகளை வாரி வழங்கும் உங்களின் ஒவ்வொரு இதழும் இலவச மருத்துவ முகாம் என்று சொல்லலாம்... தொடர்க... வளர்க!
- அ. யாழினி பர்வதம், சென்னை - 78.

*எலும்புகளின் நலன் குறித்த தகவல்களை வழங்கிவந்த தொடர் நிறைவு பெற்றது சற்றே வருத்தம்தான். மருத்துவரீதியிலான பல தகவல்களை எளிமையாக புரிந்துகொள்ளும்படி விளக்கிய டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுகளும், நன்றியும்!
- எஸ்.ஜெகன், பாளையங்கோட்டை.

*‘எது எனக்கான டயட்?‘ தொடர் எல்லோருக்கும் பயனுள்ள உணவுமுறைகளைப் பேசுவது நல்ல முயற்சி. கடந்த இதழில் தைராய்டு பிரச்னைக்கான உணவுமுறை குறித்து தெளிவாகக் கூறியிருந்தது. இதே பாணியில் ஒவ்வொரு வகை நோய்களுக்கான டயட்டை வழங்குங்கள்... எதிர்பார்க்கிறோம்!
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

*எந்தெந்த காலக்கட்டத்தில் எதையெதைப்பற்றி சொல்லி விளக்கினால் அது மக்களைப் போய்ச்சேரும் என்பதனைப் குங்குமம் டாக்டர் நன்கு புரிந்துகொண்டுள்ளது. அந்த வகையில் தற்போதைய மழைக்காலம் குறித்து எடுத்துச்சொல்லிய கவர் ஸ்டோரி மழைத்துளிகள்போல் முத்துமுத்தாக இருந்தது. கண்களில் உண்டாகும் காயங்கள், விபத்து அவற்றுக்கு நிவர்த்தி என சொல்லியவை நல்ல விழிப்புணர்வு.
- சுகந்தி நாராயண், வியாசர் காலனி.

*என்னது இப்படி ஒரு எக்சர்சைஸா என்று வாய் பிளக்க வைத்தது Inch worm walking. நோய்கள் பெருகப் பெருக அதற்கேற்றார் போல தீர்வுகளும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. மருத்துவ உலகில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்?! எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள்?!
- எல்ஜின் ஜோசப், செங்குன்றம்.

*‘சிறுதானியங்களின் சூப்பர் ஸ்டார்’ என்ற குதிரைவாலி பற்றிய கட்டுரை, கடந்த இதழின் சூப்பர் ஸ்டாராக இருந்தது. குதிரைவாலி பற்றிய பயன்கள் குறித்த தகவல்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக  இருந்தது. திப்பிலி குறித்த பயன்களும் படித்து வியந்தேன். உணவே மருந்து என்று சும்மாவா சொன்னார்கள்?!
-  மாதவன், திருச்சி.