கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்!



செய்திகள் வாசிப்பது டாக்டர்

கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கான திட்டத்தின் விரிவாக்கத்தை தமிழக அரசு தொடங்கி இருக்கிறது. இந்த சேவையை 1962 என்ற கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக பெறலாம் என்றும்
அறிவித்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களில் அனைத்து சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சில தருணங்களில் உயிர்காக்கும் அவசர சிகிச்சைகள் வழங்க வேண்டியுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு நடமாடும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவைத்திட்டம் கடந்த 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டமானது காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது.

இந்த சேவையானது நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், இதர மாவட்டங்களும் பயன்பெறும் வகையில் 22 கால்நடை அவசர மருத்துவ ஊர்திகளின் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கால்நடைகளின் நோய் தன்மையை அறிந்து அங்கேயே அவசர சிகிச்சை வழங்கும் வகையில் தேவையான அனைத்து அத்தியாவசிய கருவிகள், உபகரணங்கள், மருந்துகள் ஆகியன இந்த ஆம்புலன்சில் வைக்கப்பட்டுள்ளன. சிறிய கால்நடைகளை பரிசோதனை செய்வதற்கு மடக்கும்
நிலையிலான பரிசோதனை மேஜைகளும் இதில் அமைக்கப்பட்டுள்ளன.

வாகனம் செல்லாத இடங்களில் உள்ள நடக்க இயலாத கால்நடைகளை அவசர ஊர்திக்கு எடுத்துச்செல்ல தள்ளுவண்டி வசதி செய்யப்பட்டுள்ளது. நடக்க முடியாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்ற ஏதுவாக ஒரு டன் எடை கொண்ட கால்நடையையும் தாங்கக்கூடிய வகையில் சக்தி வாய்ந்த தூக்கும் வசதி பொருத்தப்பட்டுள்ளது.

மின் இணைப்பு தங்குதடையின்றி கிடைத்திடவும், இரவில் மின்சார வசதியில்லாத இடத்தில் சிகிச்சை அளிக்க ஏதுவாக ஜெனரேட்டர் மூலம் செயல்படக்கூடிய அதிகளவில் வெளிச்சம் தரக்கூடிய பெரிய ஒளிவிளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு ஒரு நடமாடும் ‘அம்மா அவசர சிகிச்சை’ ஊர்தியானது இயக்கப்படும்.

- அ.வின்சென்ட்