நம் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது



க்ரைம் டைரி

பனிப்பொழிவு மற்றும் விவசாயப் பணிகள் காரணமாக டெல்லியில் காற்றில் அதிகளவு மாசு கலந்து புகை மண்டலமாக மக்களை அவதியடையச் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பலர் அங்கிருந்து பிற இடங்களுக்கு வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது.

டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும் கடந்த சில வாரங்களாக  காற்று மாசு 2 மடங்கு அதிகரித்து வருவதாக சென்னையைச் சேர்ந்த தனியார் வானிலை ஆய்வாளர்கள் ஒரு தகவலை வெளியிட்டனர். அதில் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு, கிழக்கு கடற்கரை வரை பரவும். அப்போது அது சென்னைக்கும் பரவும் என்றும் மாசுப்புள்ளிகள் 200-300 வரை எட்டும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், சென்னை வானிலை மைய அதிகாரி ஒருவர்,  டெல்லி மிக நீண்ட தூரத்தில் உள்ளது, அங்கிருந்து சென்னைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்றும், பூமத்திய ரேகையில் இருந்து நாம் 8-12 டிகிரி அட்ச ரேகையில் இருக்கிறோம், அவ்வளவு தூரம் பயணம் செய்து காற்று மாசுபாடு சென்னைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் டெல்லி காற்று மாசுபாட்டால் சென்னைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் மறுத்து கூறினார். இது பற்றி பல்வேறு விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

காற்று மிக முக்கியமான தேவைகளில் ஒன்று. ஒரு மனிதனால் உணவு இல்லாமல் 120 நாள் வரையிலும், நீர் இல்லாமல் 5 நாட்கள் வரையிலும் உயிர் வாழ முடியும். காற்று இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. தலைநகர் டெல்லியிலேயே மருத்துவ எமர்ஜென்சி அறிவித்துள்ளது. முதலில் காற்று மாசு இருக்கிறது என்பதையே ஒப்புக்கொள்ளாத நிலை உள்ளது.

கடந்த 7-ம் தேதி காலை 9.30 மணி அளவில், தில்லியில் காற்றில் மிதக்கும் நுண்துகள் (பி.எம் 2.5) அளவு 254 மைக்ரோ கிராமாக இருந்த நிலையில் சென்னையில் 264 மைக்ரோ கிராம் இருந்ததாக தனியார் காற்று தர ஆய்வு மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக, வேளச்சேரி, ராமாபுரம், மணலி, கொடுங்கையூர், அண்ணா நகரில் சராசரி காற்று மாசு 341 புள்ளிகளாக இருந்தது. இதில் அதிகபட்சமாக வேளச்சேரி மற்றும் ஆலந்தூரில் 273 புள்ளிகளாக இருந்தது.

இப்படி இருக்க வானிலை மைய அதிகாரி இவ்வாறு சென்னையில் காற்று மாசு ஏற்பட வாய்ப்பில்லை என்று மறுத்தார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த அளவு மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இந்தியாவின் விஷக்காற்று ஒவ்வோர் ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொல்கிறது. கடந்த ஆண்டு ஐ.நா.சபை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உலகின் 15 மாசுபட்ட நகரங்களில் 14 இந்தியாவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் வழக்கத்திற்கு மாறாக அதிக காற்று மாசுபாடு குறித்து இலங்கை கடந்த 6-ம் தேதி புதன்கிழமை எச்சரிக்கை விடுத்ததுடன், சுவாச நோய்கள் உள்ளவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டது. இலங்கையின் வடமேற்கில் இருந்து இந்தியாவில் இருந்து வீசும் காற்று வழக்கத்திற்கு மாறாக அதிகக்காற்று மாசுபடுத்தக் கூடியதாக இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள். சாட்டிலைட் படம் மற்றும் காற்று மாசை அளக்கக்கூடிய கருவி இரண்டும் இதை உறுதி செய்துள்ளது.

டெல்லியிலிருந்து வரும் மாசு காற்று இலங்கைவரை செல்லும் என்று சொல்லப்படும் நிலையில், எப்படி தமிழ்நாட்டில் வர சாத்தியம் இல்லை என்று வானிலை அதிகாரி சொல்கிறார்?! முதலில் காற்று மாசுக்கு அரசின் திட்டமிடல் அவசியம். அரசு அந்த மாசின் அளவை சரியாக அளந்து துல்லியமான தரவுகளைத் தருவதில்லை. அடுத்து, தொலை நோக்குத் திட்டமிட வேண்டும்.

காற்று மாசு அளவைத் தீர்மானிக்க மத்திய அரசின் மாசுகட்டுப்பாடு வாரியம் ஒரு முறையையும், தமிழ்நாடு அரசு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஒரு முறையையும்  கடைபிடிக்கிறார்கள். இரண்டு அரசுகளும் சொல்லும் அளவுமுறை வித்தியாசப்படுகிறது. காற்று மாசு இல்லை என்று முதலில் மறுத்த அரசு, இப்போது சரியான ஆதாரங்களுடன் தரவுகள் வெளிவந்ததும் மௌனம் சாதிக்கிறது.

25 சதவீதம் டெல்லியிலிருந்து வந்த மாசு என்று தனியார் வானிலை மையம் சொல்கிறது. சாட்டிலைட் இமேஜை வைத்துப் பார்த்தால் சென்னைக்கு மேல் வானில் 5 கிலோ மீட்டர் வரை காற்று மாசு இருப்பதாகவும், மணலியில் மட்டும் 365 நாட்களில் 119 நாட்கள் காற்று மாசு கூடுதலாக இருப்பதாகவும். சொல்கிறார்கள். மாசுகட்டுப்பாட்டு வாரியம் சொல்லும் தகவலும் உண்மையானதாக இல்லை.

காற்று மாசை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். 24 மணி நேரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரங்களில் 2 மணி நேரங்கள் மட்டும் அளந்துவிட்டு சராசரி அளவுகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தருகிறார்கள். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தையே கண்காணிக்க ஒரு ஆணையம் உருவாக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து சொல்கிறார்கள்.

தேசிய சுத்தமான காற்றுத் திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியபோது, தமிழ்நாட்டில் தூத்துக்குடி மட்டும்தான் அதிக காற்று மாசு உள்ள இடமாக அறிவித்தது. அப்போது சென்னையைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. Urban mission மேற்கொண்ட ஆய்வுப்படி சென்னையைப் பொருத்தவரை, காற்று மாசை கண்காணிக்கும் நிலையங்கள் 38 வரை இருக்க வேண்டும் என்றும், தற்போது சென்னையில் 11 கையேடு நிலையங்களும் 3 தானியங்கி தொடர்ச்சி நிலையங்கள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கிறது. நிலைமை இப்படியிருக்க மாசுகட்டுப்பாட்டு வாரியம் எப்படி காற்றின் மாசு அளவை துல்லியமான தரவுகளாக வெளியிட முடியும்?

தற்போது, மாசு அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஆர்வலர்களும் நிபுணர்களும் அழைப்பு விடுத்துள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களான ஸ்வேதா நாராயண் மற்றும் நித்யானந்த் ஜெயராமன் ஆகியோர் நகரத்தை தேசிய தூய்மையான காற்று திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் நகரத்தில் மோசமான காற்றின் தரம் அதைக் குறைக்க எதுவும் செய்யப்படவில்லை என்பதற்கு
சான்றாகும்.

மாசுபாட்டின் ஆபத்துகள் பற்றிய புரிதல் வேண்டும். மாசுபடுத்துகிறவர்களின்மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை கண்காணிக்கும் மற்றொரு நிறுவனம் எங்களுக்கு தேவை என்று இவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நவம்பரில் இந்த பனி மூட்டம் மாசுபாட்டின் குறியீடாக இல்லை. ஆஸ்துமா உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆண்டு முழுவதும் நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். அதிகளவு மாசுபடுவதற்கு இது போதுமானது மற்றும் அதிக சான்று, மாசுபடுத்தியை மட்டுமே நாம் பார்க்க முடியாது நம்முடையது மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட ஒரு பெருநகரமாகும், மேலும் நாம் நல்ல காற்றின் தரத்தை அடைய வேண்டும்.

எனவே, காற்று மாசைக் கட்டுப்படுத்துவது என்பது நம் தேசிய வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் அல்லது இன்னும் வேகம் பெறும் செயல்திட்டமாக மாற வேண்டும். தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு மாசு ஒரு காரணம் மட்டும் இல்லை. காற்றின் திசை, காற்றின் ஈரப்பதம், விவசாயக் கழிவுகள் எரிப்பு, தொழிற்சாலை உமிழ்வுகள், கட்டிட தூசுகள், வாகனங்கள் மூலம் வெளிப்படும் புகை, எலக்ட்ரானிக் பொருட்கள் எரிப்பு இவை எல்லாம் சேர்ந்து காற்று மாசுக்கு காரணமாகிறது.

விவசாய கழிவுப்பொருட்களை மறு சுழற்சிக்கான திட்டமாக வகுக்கலாம். மற்ற நாடுகளில் மோட்டார் வாகன உமிழ்வுகளுக்கு வரி போட்டிருக்கிறார்கள். வாகன உற்பத்தியை கட்டுப்படுத்துதல், ஏற்கனவே வாகனம் வைத்திருப்பவர்கள் அதிகப்படியான வாகனம் வாங்குவதை தடுக்க ரேஷன் முறையை கொண்டு வருவது, பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்களை வலியுறுத்தல் போன்ற சார்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். நீண்டகாலத் திட்டங்களை வரையறுக்க வேண்டும்.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புல்புல் புயல் சென்னையில் காற்று மாசை வடக்கு நோக்கி இழுத்துச் செல்ல வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். எது எப்படி இருந்தாலும், ஒவ்வொரு வருடமும் காற்று மாசுபடும் சூழல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு வந்தபின் கவலைப்படுவதை விடுத்து, வருமுன் காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கு, அரசு, பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசர நிலையில் நாம் இருக்கிறோம்!

- உஷா நாராயணன்