வேப்பேரி கால்நடை மருத்துவமனை



ரவுண்ட்ஸ்

தமிழ்நாடு வெட்னரி மற்றும் அனிமல் சயின்ஸ் பல்கலைக்கழகத்தின்(TANUVAS) கட்டுப்பாட்டின் கீழ் அடங்கியுள்ள  கல்லூரிகளில், முதலாவது இடத்தைப் பெறுவது மெட்ராஸ் கால்நடை கல்லூரி(Madras Veterinary College). இந்த  மருத்துவமனையின் வசதிகள் பற்றியும், அதன் வரலாறு பற்றியும் மருத்துவமனையின் உதவிப்பேராசிரியர் டாக்டர் சந்திரசேகரன் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

‘‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள வேப்பேரி என்ற இடத்தில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கல்லூரியில்தான் கால்நடை மருத்துவம் தொடர்பான பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயம். அதன்பின்னர் மாதவரம் பால் பண்ணையில் தமிழ்நாடு வெட்னரி மற்றும் அனிமல் சயின்ஸ் யூனிவர்சிட்டி(TANUVAS) நிறுவப்பட்டது. பின்னர், படிப்படியாக நாமக்கல், திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை கல்லூரி மற்றும் ஆய்வகங்கள் தொடங்கப்பட்டன.

வேப்பேரியில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனை மற்றும் கல்லூரி, 1989-ம் ஆண்டு இந்தியாவின் முதல் கால்நடை பல்கலைக்கழகமாகச் சிறப்பு தோற்றம் பெற்றது. சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதன்மை நிர்வாக பிரிவு இந்தோ-சாராசைனிக் கட்டடக்கலை தொழில்நுட்பத்தைப் பின்புலமாக கொண்டு கட்டப்பட்டது.

 தற்போது அந்த இடத்தில் டீன் அலுவலகம் மற்றும் எஜுகேஷன் செல் திறம்பட இயங்கி வருகிறது. 9 பிளாக்குகளாக செயல்பட்டு வரும் இந்தப் பாரம்பரியமிக்க மருத்துவமனை மற்றும் கல்லூரியில் ரிஜிஸ்ட்ரேஷன் கவுன்ட்டர், சிறு பிராணிகள் கிளினிக்ஸ்(அவுட் பேஷண்ட் மெடிசன், அவுட் பேஷட்;ட் சர்ஜரி), தோல் பிரிவு, இனப்பெருக்க பிரிவு, டயட் பிரிவு மற்றும் பார்மசி என 33 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன.

சென்னை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர்ஆகிய மாவட்டங்களில் இருந்தும், நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளையும், ஆடு, மாடு, குதிரை முதலான வீட்டு விலங்குகளையும் இங்கு அழைத்து வருகின்றனர். காலை 7.45 மணிக்கு இந்த மருத்துவமனை செயல்படத் தொடங்கும். செல்லப் பிராணிகளுக்கு 50 ரூபாயும், ஆடு, மாடு, குதிரை போன்றவற்றிற்கு 20 ரூபாயும் பதிவு கட்டணமாகப் பெறப்படுகிறது. ஒரு தடவை பதிவு கட்டணம் செலுத்திய பின்னர், அடுத்த பத்து நாட்களுக்கு இக்கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

கவுன்ட்டர் சரியாக 8 மணிக்குத் திறக்கப்படும். அங்கு பிராணிகளின் உரிமையாளர் விவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு
என்ன பிரச்னை போன்றவை கம்ப்யூட்டரில் முறையாகப் பதிவு செய்யப்படும். அதன்பின்னர், பிரச்னைக்கு ஏற்றவாறு, அந்தந்த கவுன்ட்டர்களுக்கு விலங்குகளை, அதனதன் உரிமையாளர் துணையுடன் அனுப்புவோம்.

உதாரணத்துக்கு, எலும்பு பாதிப்பிற்கு ஆர்த்தோ வார்டுக்கும், இனப்பெருக்கப் பிரச்னைகளுக்கு OG வார்டு, காயம் என்றால் சர்ஜரி வார்டு, உண்ணி போன்ற தோல் சம்பந்தமான பாதிப்புகளுக்கு டெர்மாட்டலஜி வார்டு, வாந்தி, பேதி முதலான பிரச்னைகளுக்கு மெடிசன் வார்டு ஆகியவற்றிற்கும், பிராணிகளின் உரிமையாளரை அனுப்புவோம். அவர்கள் சம்பந்தப்பட்ட வார் டுக்கு எளிதாக செல்ல கேஷ் ஷீட்டில் வார்டு எண் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஒரு தடவை எக்ஸ்-ரே எடுக்க 50 ரூபாயும், கான்ட்ராஸ்ட் எக்ஸ்-ரேக்கு 200 ரூபாயும்(ஒரு தடவை) அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் ஒரு தடவை பார்க்க 150 ரூபாயும், குடும்ப கட்டுப்பாடு செய்தல், கட்டி அகற்றல் போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு 500 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது’’.

டாக்டர் வேலவன் (எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு)‘‘எலும்பு முறிவு பிரிவில் நாய்கள், பூனைகள், பறவைகள், முயல்கள் போன்ற விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 35 முதல் 45 விலங்குகள் இங்கு எலும்பு முறிவு சிகிச்சைக்காக எடுத்து வரப்படுகின்றன. அதிநவீன வசதிகளான எக்ஸ்-ரே(X-ray), சி.டி.ஸ்கேன் (CT scan) மற்றும் ஸி-ஆர்ம்(C-Arm) கண்டுபிடிப்புகளைக் (கருவிகளை) கொண்டு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாதாரண எலும்பு முறிவாக இருந்தால் பஞ்சு கட்டு அல்லது மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்படும். எலும்பு முறிவு அல்லது எலும்பு நொறுங்கி இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் டைட்டானியம் தட்டு அல்லது டைட்டானியம் மற்றும் இரும்பு கம்பிகள் எலும்புக்குள் பொருத்தப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படும். அறுவைச்சிகிச்சை நாள் அன்று வெறும் வயிற்றில் மயக்க ஊசி போடப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும். உடைந்த கால்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு வருவதற்கு 3 மாதமாவது ஆகும்.

எலும்பு தேய்மானம் முதிர்ந்த நாய்களுக்கு பொதுவாக ஏற்படும் மூட்டு தேய்மானம்(Arthritis) ஆகும். வயது முதிர்ந்த நாய்களுக்கு எலும்பு தேய்மான பிரச்னைக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்றைக்குப் பொதுவாக மாடியாக இருந்தாலும் வீடாக இருந்தாலும் பெரும்பாலும் அதிகமாக தரைக்கு டைல்ஸ் போடப்பட்டிருக்கிறது.அதனால் நாய்களுக்கு மூட்டு தேய்மானம் குறைந்த வயதிலேயே எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனவே, மூட்டு தேய்மானத்தை தவிர்க்க வீட்டு தரைகள் வழுக்காத சொரசொரப்பான தரைகளாக இருப்பது நல்லது என்கிறார்.’’

டாக்டர் ரமணி (அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சியல் துறை)‘‘வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளுக்கும் கண் பார்வை பிரச்னை உள்ளது. அதில் முதன்மையாக கண்புரை நோய் (Cataracts) ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கண்புரைக்கான சிகிச்சை இங்கு அளிக்கப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளுக்கு கண்புரை நோய் அல்லாது கண்ணுக்கு உள்ளே அல்லது கண்ணுக்கு வெளியே கண் பிரச்னைகளான கண்ணில் நீர் வடிதல், கண்ணில் காயம் ஏற்படுத்தல், திடீர் கண் பார்வை குறைதல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட விலங்குகளை இங்கு அழைத்து வருகின்றனர்.

பலவித பரிசோதனைகள் செய்து கண்புரை நோய் கண்டுபிடிக்கப்படுகிறது. அதற்கான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. நீரிழிவு கண்புரை(Diabetes cataracts) நோயால் கூட கண் பார்வை பாதிக்கப்படலாம் அல்லது கண் அழுத்த நோயாக (Glaucoma) கூட இருக்கலாம். அப்படி இருக்கும் பிராணிகளுக்கு கண்ணில் லென்ஸ் (Lens) பொருத்தப்படுகிறது. ரத்த குறைபாட்டால் விழி உள்திரையில் பிரச்னை இருக்கலாம். கண் முகாம் அமைத்து விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 10 வருடமாக இந்தப் பணியைச் செய்து வருகிறோம்.

விலங்குகளின் கண் மருத்துவமனையாக கண்ணுக்கென்று இந்தியாவிலேயே இந்த மருத்துவமனையில்தான் பெயர் சொல்லும் அளவுக்கு திகழ்கிறது. நாய், பூனை, பறவை, யானை, புலி, ஆடு, கோழி ஆகியவற்றிற்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்துள்ளோம். கண்ணிற்கான(Ophthalmology) பட்டயப்படிப்பு படித்தவர்கள்தான் இந்த மருத்துவத்தை முறைப்படி செய்து வருகின்றனர். கண் புரை நோய் 8 வயதில் விலங்குகளுக்கு இயல்பாக வரும். தற்போது இளம் வயதிலேயே அதாவது 2 வயதிலேயே வந்துவிடுகிறது. ஒரு நாளைக்கு 20 உயிரினங்களுக்கு இந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது.’’

வைரமுத்து (லேப் ஆய்வக பேராசிரியர்)

‘‘பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முன்பாக ரத்த மாதிரிகள் பரிசோதனை மூலம் ரத்தசோகை, கல்லீரல், சிறுநீரகம், இதயநோய், தோல் சம்பந்தமான பிரச்னைகளுக்கு இங்குள்ள அதிநவீன உபகரணங்களைக் கொண்ட ஆய்வுக்கூடத்தில் வைத்து ஆய்வுசெய்து மருத்துவர்களால் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டதுபோல ஆய்வுக்கூடத்திற்கு தினமும் 80 முதல் 100 மாதிரிகள் எடுத்துவரப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

நாள்பட்ட புண் ஆறாமல் இருந்தால் Antibiotic sensitivity test(ABST) பரிசோதனை செய்தல் உடம்பில் கட்டிகள் இருந்தால்  biopsy மாதிரி எடுத்து நோயின் தன்மை கண்டயறியப்படுகிறது. Fine needle aspiration cytology, அதாவது ஊசியின் மூலம் fluid எடுத்து சோதனை செய்து அது எந்த மாதிரியான கட்டி புற்றுநோய்க் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்று ஆய்வில் முடிவு செய்து அதற்கான சிகிச்சைமுறையை மருத்துவர்கள் கொடுப்பார்கள் அல்லது அறுவைசிகிச்சை செய்து குணப்படுத்துவர்.

Haemoglobin, ரத்தசோகை, ரத்தத்தட்டுகள் குறைவாக உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்படுகிறது. உண்ணி காய்ச்சல் (Tick fever) பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது, சிறுநீரக பாதிப்புள்ள இளவயது நாய்களுக்கு சிறப்புபிரிவில்  dialysis செய்யப்படுகிறது. லேப் ஆய்வக மையம் பிராணிகளுக்கு சிகிச்சை கொடுக்கவும் மருத்துவர்களுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுவதுடன் விரைவில் ஒரே நாளில் நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்த முடிகிறது.

பிராணிகளுக்கு உடம்பில் உள்புற கட்டிகளில் உள்ள திரவம் எடுத்து இங்கு ஆய்வுப்படுத்தப்படுகிறது. ஆய்வு முடிவை வைத்து நோயின் தன்மையை முடிவு செய்து அதன் அடிப்படையில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை கொடுக்கப்படுகிறது.’’

டாக்டர் சுரேஷ் குமார் (ஈனியல் துறை வார்டு அதிகாரி)  

‘‘சினையுற்ற மாடுகளின் சினைக்காலத்தில் கருசிதைவு ஏற்படலாம். கருசிதைவின்போது, கருப்பைவாய் திறந்து, உள்ளே இருக்கும் வளர்க்கரு(foetus) உயிருடனோ அல்லது இறந்த நிலையிலோ வெளியே தள்ளப்பட்டுவிடும்(Abortion). அவ்வாறு கன்று வெளியே வர முடியாத
தருணத்தில், அதைமருந்துகள் செலுத்தியோ, கைகளினாலோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ வெளியே எடுப்போம்.

சினைகாலம் முடியும் நேரம், கன்று ஈனும் சமயம் முதிர்ந்த வளர்க்கரு இயல்பாக, தன்னிச்சையாக வெளியே வராமல் போகலாம். இது தாய்மாட்டின் குறைபாட்டினாலோ அல்லது கன்றுகுட்டின் குறைபாட்டினாலோ ஏற்படலாம். தாயின் இடுப்பெலும்பு குறுகியோ அல்லது முறிந்தோ, கருப்பைவாய் (Cervix) முழுமையாக விரியாமலோ கர்ப்பப்பையின் மந்தநிலை (uterine inertia), கர்ப்பப்பை முறுக்கிக் கொள்தல்(uterine inertia) கர்பப்பை முறுக்கிக் கொள்ளுதல்(uterine torsion) போன்ற பிரசனைகள் தாய்வழிகாரணிகள் கன்றுகுட்டியின் தலை கால்கள் திரும்பியோ, கன்றுக்குட்டியில் மரபணுக் கோளாறுகளினால் ஏற்படும் பிரச்னைகள் (இரட்டைதலை, தலை மற்றும் வயிற்று பகுதியில் நீர்கோர்த்தல்). நஞ்சுகொடியில் நீர்கோர்த்தல், இறந்து அழுகிய நிலையில் உள்ள கன்று போன்றவை கன்று குட்டியினால் ஏற்படும் காரணிகளாகும்.

இவ்வகையான அனைத்து பிரச்னைகளுக்கும் இங்கு முறையான மற்றும் தரமான சிகிச்சை அளிக்கப்படும். இந்த சமயத்தில் நாங்கள் எங்கள் கைகளால் கன்றை சரிசெய்து வெளியே எடுப்போம், முடியாத தருவாயில் சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் சரி செய்வோம்.’’

டாக்டர் முகமது சஃபி (சிறு பிராணிகள் அறுவை சிகிச்சை பிரிவு)

‘‘நாய், பூனை முதலான செல்லப்பிராணிகள் சின்ன மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகளுக்காக இங்கு தினமும் கொண்டு வரப்படுகின்றன. முக்கியமாக, விபத்துக்களில் சிக்கி பலத்த காயம் அடைதல், கர்ப்பப்பை தொற்று, கட்டி, மற்றும் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, துன்பப்படும் பெட் அனிமல்ஸ்தான் ஏராளமாக வருகின்றன. ஒருநாளில், 3, 4 மைனர் கேஸ்களும், 5 அல்லது 6 மேஜர் கேஸ்களும் எங்களிடம் வருகின்றன. சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சிறுநீர் பாதையில் அடைப்பு, குட்டி போடாமல் இருத்தல், GDV எனச் சொல்லப்படுகின்ற வயிறு உப்புதல் போன்ற மேஜர் கேஸ்கள் வரும். இவற்றில், வயிறு உப்புதல் மிகவும் ஆபத்தானது. இதற்கு 2, 3 மணி நேரத்துக்குள் அறுவை சிகிச்சை செய்துவிட வேண்டும்.   

இதற்காக எங்களுடைய யூனிட்டில், உடன் பணிபுரியும் மருத்துவர்கள், ஆபரேஷன் தியேட்டர் ஊழியர்கள் அறுவை சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் 24 மணிநேரமும் தயார்நிலையில் இருப்பார்கள். இந்தியாவின் தலைசிறந்த கால்நடை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் இதுவும் ஒன்று. அந்த அளவிற்கு இங்கு சுகாதாரம் பேணப்பட்டு வருகிறது.

தத்தம் உணர்வுகளைத் தெரிவிக்க இயலாத, வாய் பேச முடியாத செல்லப்பிராணிகளைப் புரிந்துகொள்வது என்பது எங்களுக்குச் சிரமமான செயல் இல்லை. ஏனென்றால், அவற்றுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். ஆனால், பெட் அனிமல்ஸ் உரிமையாளர்களைச் சமாளிப்பதுதான் சிரமமான விஷயம். நிறையப் பேர் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு, வாயில்லா ஜீவன்களுக்கு நாங்கள் குறையில்லாமல் வைத்தியம் செய்வதைப் பார்த்து இறுதியில் சமாதானம் ஆவார்கள்’’.

டாக்டர் உமாமகேஸ்வரி (கிளினிக் துறை)

‘‘இந்தத் துறையில் இனப்பெருக்க மேலாண்மை Breeding Mangement) தொடர்பாக, சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சினைக்காலம் ஒவ்வொரு செல்லப் பிராணிக்கும் வேறுபடும். மாடுகளுக்கு 21 நாட்களாகவும், நாய்களுக்கு, 65 முதல் 67 நாட்களாகவும்(அனைத்து இனத்திற்கும்) நாய்களின் இனச்சேர்க்கைக்குப் பின்னர் 30 நாட்கள் கழித்து, ஸ்கேன் எடுத்துப் பார்ப்போம். கருவுற்றிருந்தால், குட்டியின் வளர்ச்சி தெரியும். நாய்கள் கருத்தரிக்காவிட்டாலும், வயிற்றில் குட்டிகள் இருப்பதைப்போல், நிறைய சாப்பிடும். குட்டி போடுவதைப்போல் மறைவான இடம் தேடும். இதனைப்
பொய்சினை(Pseudo Pregnancy) எனக் குறிப்பிடுவோம்.

இந்தத் துறையில், ஆண் நாயின் விந்தணுக்கள் குறைப்பாடு, மலட்டுத்தன்மை, கர்ப்ப பையில் சீழ் கோர்த்தல்(pyometra) ஆகிய பிரச்னைகளுக்குச் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கிறோம். கர்ப்ப பையில் சீழ் கோர்த்தல் பாதிப்பு எல்லா வயது நாய்களிடத்தும் காணப்படுகிறது. சோர்வாக இருத்தல், குறைவாகச் சாப்பிடுதல், அதிக காய்ச்சல் போன்றவை இப்பாதிப்பிற்கான அறிகுறிகள். படுத்த படுக்கையாய் உள்ள நாய்களைச் சிகிச்சைக்காக கொண்டு வருவார்கள். பத்து வருடங்களுக்கு முன்னர் ரத்தத்தை மொத்தமாக செலுத்தினோம். தற்போது, ப்ளாஸ்மா, ப்ளேட்டேட் இவற்றில் எது தேவை என்பதைக் கண்டறிந்து அதை மட்டும் செலுத்துகிறோம். நாய், பூனை என எந்தச் செல்லப்பிராணியாக இருந்தாலும் மருத்துவருடைய அறிவுரை முக்கியம்’’.

டாக்டர் பரணிதரன் (ரத்த வங்கி)

‘‘இந்த ரத்த வங்கி 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. எங்களிடம் நாய்க்கு மட்டுமில்லாமல்,, மாடு, ஆடு மற்றும் பூனை முதலான செல்லப்பிராணிகளுக்கும் ரத்தம் மாற்றும் வசதி உள்ளது. நாய் இனத்தில் பதினோரு வகையான ரத்தப்பிரிவுகள் காணப்படுகின்றன. DEA என்பது ரத்தப்பிரிவு. அதில், DEA-1 என்பது முக்கியமான ரத்தப்பிரிவு. இதைப் பரிசோதிப்பதற்கான நவீன வசதிகள் இங்கு உள்ளன. மேலும் DEA-1 ஐக் கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் இந்த மருத்துவமனை மற்றும் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.

இந்த ஆய்வுக்குழுவில், நான் உட்பட 4 பேர் பணியாற்றி வருகின்றனர். ரத்தக்கூறுகளைத் தானம் செய்யும் வசதி மட்டுமில்லாமல், ரத்த தட்டணுக்கள், ப்ளாஸ்மா ஆகியவற்றை மாற்றும் வசதி இங்கு உள்ளது. திரவ வடிவில் காணப்படுகிற தட்டணுக்களைத் தூளாக மாற்றும் ஆராய்ச்சியும் தற்போது இந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வுப்பணிக்கு, Indian Council Of Medical Research நிதியுதவி அளித்துள்ளது என்று கூறுகிறார்.’’

டாக்டர் சந்தியாபவானி(தோல் சிகிச்சை பிரிவு)

‘‘இஞ்செக்‌ஷன் வார்டில் பணியாற்றிய அனுபவம் நிறைய இருக்கிறது. உண்ணி சேருதல், முடி உதிர்தல் போன்ற தோல் சம்பந்தமான பாதிப்புகளுக்குத்தான் இங்கு நிறைய செல்லப்பிராணிகள் கொண்டு வரப்படுகின்றன. முக்கியமாக, நாய், பூனை போன்றவைதான் அதிகளவில் வருகின்றன.

இவற்றிற்கு, நரம்பில் ஊசி போடுவதா? அல்லது தசையில் ஊசி போடுவதா? என முதலில் பார்ப்போம். ஊசி போடும்போது, சில பிராணிகள் முரண்டு பிடிக்கும். அதுதான் எங்களுக்குச் சவாலான விஷயம்.  அப்போது, உரிமையாளர் உதவியுடன் ஊசியைப் போட்டு விடுவோம் என்றார்.’’

- விஜயகுமார், அ.வின்சென்ட்

படங்கள்: ஜி.சிவக்குமார்