மாணவர்களுக்கான மகத்தான திட்டம்



தகவல்

மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை மாணவர் குழுக்கள் மூலம் கண்டறியும் திட்டம் விரைவில் மாநகராட்சிப்  பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

அனீமியா குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க போசன் அபியான் என்ற திட்டத்தை கடந்த மார்ச் மாதம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியது.
இந்த திட்டமானது சென்னையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், கல்வித்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட 13 துறைகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் 13 துறை அதிகாரிகள் அடங்கிய மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை  கண்டறிய மாணவர் குழுக்களை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் 280 மாநகராட்சி பள்ளிகளும், இதைத் தவிர்த்து அரசுப் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்றால் பெரிய ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும். இதற்காக பல மாதங்கள் ஆகலாம். எனவேதான் மாணவர்களிடம் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை மாணவர்களை வைத்தே கண்டறியும் முறையானது பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

முதல் கட்டமாக இந்தத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் 4 முதல் 8 மாணவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். ஆசிரியர்கள் இந்த குழுவில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களின் பள்ளிகளில் உள்ள சக மாணவர்களிடம் பேசி அவர்களுக்கு எந்த மாதிரியான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்பதை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். மாணவர்கள் அளிக்கும் தகவல்களைப் பொறுத்து ஆசிரியர்கள் அது எந்த மாதிரியான பிரச்னை என்பதைக் கண்டறிந்து அதிகாரிகளுக்கு அறிக்கை அளிப்பார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பல்வேறு துறையினரையும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும்போது மாணவர்களின் உடல்நலம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது.

- அஜி