முழுமையான உணவு முசிலி!



ஸ்பெஷல்

‘‘உடனடி ஆற்றல், புத்திகூர்மை மற்றும் இதய ஆரோக்கியம் இவை எல்லாவற்றுக்கும் காலை உணவு முக்கியம். காலை உணவைத் தவிர்க்கக்கூடாது என பல ஆய்வுகள் வலியுறுத்தினாலும், நிறைய பேர், ‘நான் காலையில் எதுவும் சாப்பிட மாட்டேன்’ என்று சொல்வதை பார்க்கிறோம்.
அப்படியே சாப்பிட்டாலும் அவசர அவசரமாக எதையோ அள்ளிப் போட்டுக் கொண்டு, வேலைக்கு கிளம்புபவர்களும் கார்ன்ஃப்ளாக்ஸ், நூடுல்ஸ், பிரட் என பாக்கெட்டிலிருந்து அப்படியே போட்டு சாப்பிடுபவர்களும் அதிகம்.

ஊட்டச்சத்து பற்றியெல்லாம் கவலையில்லை. புரோட்டீன், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் என எல்லாம் நிறைந்த ஒரு முழுமையான காலை உணவு முக்கியம். அதற்கு முசிலி சரியான சாய்ஸ்’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஹேமாவதி.

முசிலி என்றால் என்ன?

‘‘வேலைக்காக வீட்டை விட்டு, வெளியூரில் தங்கியிருக்கும் பேச்சலர்ஸ்க்கு இட்லி, தோசை என விதவிதமாக செய்து சாப்பிட வாய்ப்பில்லை. ஹோட்டலில் ஒரே மாதிரி சாப்பிடுவதும் போரடித்துவிடும். ஓட்ஸ், கார்ன்ஃப்ளாக்ஸ் போன்று இவர்களின் இன்ஸ்டன்ட் உணவு பட்டியலின் வரிசையில் கூடுதலாக சேர்ந்துள்ளது Muesli. ஆனால், முசிலி ஒரு முழுமையான, ஆரோக்கியமான உணவு.

ஃபைபர் மற்றும் புரோட்டீன் நிறைந்த வறுத்த தானியங்கள், கொட்டைகள், பழம் மற்றும் கோதுமை ஃப்ளாக்ஸ்களால் தயாரிக்கப்பட்ட உலர்ந்த உணவு. கார்போஹைட்ரேட்டும் சிறிதளவு உள்ளது. முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் காலை சாப்பிடலாம். இதில் சேர்க்கப்பட்டுள்ள தானியங்கள், புதிய அல்லது உலர்ந்த பழங்கள், விதைகள், கொட்டைகள் ஆகியவற்றில், வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளன. முசிலியோடு சோயா பால், பாதாம் பால், மாட்டுப்பால், தயிர் அல்லது பழச்சாறு சேர்த்து கலந்து சாப்பிடலாம்.

தேனும் கலந்து சாப்பிடலாம்.‘க்ரனோலா’ என்று சொல்லப்படும் முசிலி போன்றே மற்றொரு உணவு வகை உண்டு. முசிலியைப் போலவே அதிலும் ஓட்ஸ், தானியங்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும் ரோல் செய்ய வசதியாக, பசைத் தன்மைக்காக கொஞ்சம் கொழுப்பு சேர்த்து பேக் செய்வார்கள். அதனால், க்ரனோலா கொழுப்பு சேர்ந்ததாகிவிடுகிறது. அதைவிட சிறந்தது முசிலி.

எந்த ஒரு தானியத்தையுமே ஊறவைத்து எடுக்கும்போது அதில் கூடுதல் புரோட்டீன் கிடைக்கும். முசிலியையும் முதல்நாள் இரவு ஊறவைத்து மறுநாள் காலை சாப்பிடுவதால் கூடுதலாக புரோட்டீன் கிடைக்கும். இதுதான் சரியான முசிலி என்று நிர்ணயிக்கப்படுவதில்லை. அடிப்படையாக தானியங்கள் என்று எடுத்துக் கொண்டு அதனோடு எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

வாழைப்பழம், ஆப்பிள், பேரீட்சை என எந்த பழமும் சேர்க்கப்படுகிறது. இன்னும் கூடுதல் நன்மைக்காக ஆலிவ் ஆயில், ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த ஃப்ளாக்ஸ் சீட்ஸ் முதலியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். முதல் நாள் இரவு ஊற வைத்து சாப்பிடுவதால் வைட்டமின்கள், மினரல்கள் கிரகிக்கப்பட்டு நல்ல சத்தான உணவாக உட்கொள்ள முடியும்.

‘முசிலி’ நீண்ட நேரம் வயிறுநிறைந்த உணர்வைத் தருவதால், நடுவில் ஸ்நாக்ஸ் சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது. இதிலிருக்கும் Resistance starch பசியுணர்வை அடக்கிவிடும். செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, ஆரோக்கியமான குடலியக்கத்தை தூண்டுவதால் செரிமான சக்தி அதிகரிக்கிறது. எல்லா வைட்டமின்களும், புரோட்டீன்களும் இருப்பதால் ஒரு சரிவிகித உணவாக இருக்கிறது.

கார்ன்ஃப்ளாக்ஸில் சர்க்கரைதான் அதிகமாக இருக்கிறது. ஆனால் முசிலியில் காலைநேர உடலாற்றலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடுகிறது. உடலின் கெட்ட கொழுப்பை குறைப்பதால் இதயநோயாளிகளுக்கும் உகந்தது. முசிலியோடு தினமும் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டு வருவார்களேயானால், கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.’’

- என்.ஹரிஹரன்