ஹெல்த் காலண்டர்
சிறப்பு தினங்கள்... சிறப்பு கட்டுரைகள்...
தேசிய மாசு தடுப்பு தினம் - டிசம்பர் 2
1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இரவு மற்றும் 3-ம் தேதி அதிகாலைப் பொழுதில் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் மீத்தைல் ஐசோ சயனைடு என்ற நச்சுவாயு விபத்தால் 2,500 பேர் இறந்தனர். கண் எரிச்சல், மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் கண்பார்வையையும் இழந்தனர்.
 இந்த விபத்து உலகளவில் தொழிற்சாலை மாசால் நிகழ்ந்த மாபெரும் பேரிடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விபத்தில் மரணம் அடைந்தவர்களின் நினைவாக இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 2-ம் தேதி தேசிய மாசு தடுப்பு தினம் (National Pollution Prevention Day) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தொழிற்சாலைக் கழிவுகளாலும், மனித அலட்சியத்தாலும் உருவாகும் மாசுகளைத் தடுத்தல். தொழிற்சாலைப் பேரிடர்களைத் தடுப்பது, அவற்றை சரியான முறையில் கையாள்வது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வது. சட்டரீதியிலான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடமும், தொழிற்சாலை நிர்வாகத்திடமும் ஏற்படுத்துதல் போன்றவையே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம்.
 மனித நடவடிக்கைகளால் உண்டாகும் பலவிதமான மாசுகளால் நீர், நிலம், காற்று, காடு போன்ற இயற்கை வளங்கள் தற்போது பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. ஆகவே, சுற்றுச்சூழல் மாசுபாடுகளைக் குறைக்க வேண்டியது அவசியம்.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் - டிசம்பர் 3
மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 3-ம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்(International Day of Persons with Disabilities) கடைபிடிக்கப்படுகிறது.
மக்களைத் திரட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவு அளிக்கச் செய்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு எதிர்வரும் காலத்தில் பெருமளவில் வாய்ப்புகளை வழங்குவதற்கான அடிப்படைகளை உருவாக்க, மாற்றுத் திறனாளிகளின் உரிமை குறித்த கருத்தரங்கு மற்றும் இலக்குகளின் நிலையான வளர்ச்சி ஆகியவற்றின் தற்போதைய நிலைமைகளை மதிப்பிடுவது போன்ற இவையாவும் இதன் முக்கிய நோக்கங்கள்.
ஊனம் என்பது உடல் அல்லது மனக் குறைபாடுகளை மட்டுமன்றி மனநலிவு, தண்டுவட மரப்பு, பெருமூளை வாதம் போன்ற நோய்களையும் உள்ளடக்கியது. இந்தக் குறைபாடுகளால் உடலியக்கம் பாதிக்கப்படுவதால் இதற்கு விரிவான மருத்துவப் பராமரிப்புகள் தேவைப் படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றவர்களுக்கு ஏற்படும் மேலும் சில நோய் பாதிப்புகளோடு முதுமை சார்ந்த பிரச்னைகளும் உண்டாக வாய்ப்புள்ளது.
ஏதோ ஒரு வகையில் குறைபாடு உடையவர்கள் உலகில் 100 கோடி மக்கள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் மட்டும் 2 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரத்து 557 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இது நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.21 சதவிகிதம். இவர்களில் ஆண்கள் 1 கோடியே 49 லட்சம் பேரும், பெண்கள் 1 கோடியே 18 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களில் 70 சதவிகிதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் வகைபாடு
மாற்றுத் திறனாளிகளை அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகளின் அடிப்படையில் உடல் உறுப்புகளில் குறைபாடு உடையோர், பார்வைக் குறைபாடுடையோர், காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர், மனவளர்ச்சி மற்றும் மனநலம் குன்றியவர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுடையவர்கள் (Multiple Disability) என்று ஆரம்பத்தில் 5 வகைகளாகப் பிரித்திருந்தனர். ஆனால், தற்போது இதோடு மேலும் சிலவற்றைச் சேர்த்து 22 வகைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொழுநோய் பாதிப்பிற்குள்ளானவர்கள், மூளை முடக்குவாதம், உயரக் குறைபாடுடையவர்கள், தசை அழிவு நோய், அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், பகுதியளவு பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் முழுவதும் பார்வை இழந்தவர்கள், பகுதியளவு செவித்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் முழுவதும் செவித்திறன் இழந்தவர்கள், முழுவதும் பேச்சுத்திறன் இழந்தவர்கள், வாசித்தல், சொல் அல்லது எழுத்து விளக்க இயலாமை போன்ற மேலும் சில கற்றல் குறைபாடுகள், கவனச்சிதறல் குறைபாடு, மனநோய்கள் என்று அவை வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தற்போது இந்த பட்டியலில் Multiple Sclerosis மற்றும் நடுக்குவாதம் போன்ற நரம்பியல் சார்ந்த நோய்கள், ஹீமோபிலியா என்கிற ரத்த ஒழுக்கு நோய், தலசீமியா என்கிற ரத்த அழிவுச் சோகை நோய், Sicklecell Disease என்கிற ரத்தசோகை நோய் போன்றவையும் இணைந்துள்ளது.
மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்
போதுமான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளின்மை, மருத்துவ பராமரிப்பு அளிக்க முறையான பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை, நவீன காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற கட்டுமான வசதிகளின்மை போன்ற பிரச்னைகள் உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான தேசியக் கொள்கை 2006-ன் கீழ் சில திட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் அது எல்லோருக்கும் கிடைக்கும்படி நடை முறைப்படுத்த வேண்டியது அவசியம்.
மாற்றுத் திறனாளிகளுக்கு தகுந்த வழிகாட்டுதல் இல்லாததே இதுபோன்ற திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு தடையாக உள்ளது. சமூகப் புறக்கணிப்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான மக்களின் மனோபாவமும் இன்று அவர்கள் எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
சிலர் அவர்கள் மீது இரக்கம் காட்டுகின்றனர். ஆனால், சிலர் அவர்களை அலட்சியப்படுத்துவதோடு, எள்ளி நகையாடுகின்றனர். மேலும் அவர்களுடைய உணர்வுகளை சரியாக புரிந்து கொள்வதில்லை. நாம் அவர்களைப் பார்த்து நகைக்காமல் பொறுப்போடு நடந்து கொள்வதோடு, அவர்களுக்கு சரியான முறையில் ஆதரவளிக்க வேண்டும். சிகிச்சை முறைகள்
மாற்றுத் திறனாளிகளுக்கான சிகிச்சை என்றாலே பிசியோதெரபி மட்டும்தான் என்ற கருத்து நிலவி வருகிறது. உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவ முறை (Physical Medicine and Rehabilitation) மூலம் மாற்றுத்திறனாளிகள் சிகிச்சை பெற முடியும் என்பதையும் அறிந்துகொள்வது அவசியம். தற்போது நவீன புனர்வாழ்வு மருத்துவ சிகிச்சையிலும் ரோபோட்டிக் முறைகள் நல்ல பலனளித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது சென்னை, சேலம் போன்ற இடங்களில் அதிநவீன புனர்வாழ்வு மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கிறது.
இந்த சிகிச்சையின் மூலமாக கை, கால்களின் இழந்த செயல்பாடுகளை மீட்டெடுக்கலாம். இதன் மூலம் செயல்திறனை அதிகரிக்கச் செய்வதோடு, நடக்க இயலாதவர்களை நடக்க வைப்பதும் சாத்தியமாகிறது. இதேபோல் தற்போது மனநலம் சார்ந்த சிகிச்சை பிரிவுகளிலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தாண்டி, அவர்கள் ஒரு குடும்ப உறுப்பினராகவும், சமூக அங்கமாகவும் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
அவர்களுடைய உடல் மற்றும் மனநலக் குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க வேண்டும். அவர்களுடைய திறமைக்கான வாய்ப்புகளை வழங்கி, அங்கீகரிக்க வேண்டும். அவர்களின் தேவைகளை புரிந்துகொண்டு அதை பூர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாற்றுத் திறனாளிக்கும் தனிப்பட்ட திறமைகளும், ஆர்வமும் உண்டு. மாற்றுத் திறனாளிகளை ஒரு சுமையாக கருதும் நமது பார்வையை மாற்றிக் கொள்வோம்.
சர்வதேச நோயாளிகள் பாதுகாப்பு தினம் - டிசம்பர் 9
நோயாளியின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 9-ம் தேதி சர்வதேச நோயாளிகள் பாதுகாப்பு தினம் (World Patient Safety Day) அனுசரிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் இடமே மருத்துவமனை.
இருப்பினும் சில நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலைகளும் இங்கு ஏற்படுவதுண்டு. நோய் பராமரிப்பு மற்றும் சிகிச்சை முறைகளில் ஏற்படும் தவறுகளால் நோயாளியின் பாதுகாப்பில் பிரச்னைகள் உண்டாகிறது. இதுபோன்ற பிரச்னைகளைக் குறைத்து நோயாளியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இந்த தினத்தை அனுசரிப்பதன் நோக்கம்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் மருத்துவமனை பராமரிப்பில் 10-க்கு ஒரு நோயாளி ஏதாவதொரு பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம். இந்த பாதிப்பு பல விதமான தவறுகளாலோ, எதிர் நிகழ்வுகளாலோ ஏற்படலாம்.
அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சி சுகாதாரப் பராமரிப்பை சிக்கலான ஓர் அமைப்பாக மாற்றியுள்ளது. இதனால் நோயாளியை பாதுகாப்பாக பராமரிக்கப் பணியாளர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஏராளமான நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டாலும் தவறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. இதனால் நாம் அனைவரும் மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்பு குறித்த சரியான புரிதலைப் பெற வேண்டியது அவசியம். நோயாளியின் பாதுகாப்புப் பிரச்னைகள்
* தவறுதலான, தவறவிட்ட அல்லது அறியாமல் ஏற்படும் தாமதமான நோய் கண்டறிதல்.
* நோயாளிக்கு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சுகாதாரப் பராமரிப்பின்போது உண்டாகும் தொற்றுகள்.
* நோயாளிகள் தவறான மருந்துகளைப் பெறுதல் அல்லது சரியான மருந்துகளைத் தவறான அளவுகளில் பெறுதல்.
* உள்நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, 30 நாட்களுக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுதல்.
* தவறான உடல் பகுதியில் அல்லது தவறான நபருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுதல்.
* மருத்துவமனைப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையில் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாத நிலை இதுபோன்ற காரணங்களால் நோயாளியின் பாதுகாப்பில் பிரச்னைகள் உண்டாகிறது.
நோயாளியின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு…
* ஒவ்வொரு நோயாளிக்கும் சரியான அடையாளம் மற்றும் குறியீட்டை உறுதிசெய்வது நல்லது.
* மருந்துச்சீட்டில் சுருக்கக் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டாம். கூடியவரையில் பெரிய எழுத்தில் எழுதினால் நோயாளியும் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
* சுகாதாரப் பணியாளர்களுக்கு போதிய பயிற்சியளிப்பதும், அவர்களை குழுவாக இணைத்து பணியாற்றச் செய்வதும் தவறுகளைக் குறைக்க உதவும்.
* தகுந்த சுகாதாரப் பராமரிப்புக் கட்டுமானத்தை உருவாக்கினால் அது நோயாளிகள் அடையும் தீங்கைக் குறைக்க உதவியாக இருக்கும்.
* மருத்துவமனை பராமரிப்பின்போது தெளிவான குறியீடுகள் வழங்குவது தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க உதவும்.
* பணி மாற்றங்களின்போது சரியான பணி ஒப்படைப்பும், பணி ஏற்பும் இருக்க வேண்டும். குறிப்பாக நோயாளி ஒப்படைப்பின்போது அதைப் பின்பற்றுவது அவசியம்.
* நோயாளியை அவருடைய குடும்பத்தார் கவனித்துக் கொள்ளுமாறு வைத்திருக்க வேண்டும். மேலும் நிலையான இயக்க செயல்முறை (Standard Operative Procedure- SOP) அளவுகோல்களைப் பின்பற்றுவதன் மூலம் நோயாளி பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.
* மருத்துவர்களுக்கு மருந்துகளைப் பகுத்தாய்ந்து பயன்படுத்துவதற்கு, குறிப்பாக மிகை அளவை தவிர்க்க, பயிற்சி அளிக்க வேண்டும்.
உங்கள் பாதுகாப்பிற்கு நீங்கள் செய்ய வேண்டியவை
* உங்களுக்கு இருக்கும் ஒவ்வாமை உட்பட அனைத்து சுய விவரங்களையும் அளித்து மருத்துவமனை ஊழியர்களுக்கு உதவ வேண்டும்.
* உங்களுக்கு ஏதாவது சந்தேகமோ அல்லது நோய் கண்டறிதலில் நம்பிக்கை இல்லாமலோ இருந்தால், அதற்குரிய பதிலை உடனடியாக கேட்டுப்பெற வேண்டும். அதன்பிறகும் சந்தேகம் இருந்தால் இரண்டாவது மருத்துவரின் கருத்தைப் பெறலாம்.
* உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைமுறை பற்றிய அனைத்து தகவலையும் மருத்துவரிடம் கேட்க வேண்டும். பக்க விளைவு ஏதாவது இருக்குமா என்று தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம் - டிசம்பர் 12
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 12-ம் தேதி சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம் (Universal Health Coverage Day) கடைபிடிக்கப்படுகிறது. உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் மலிவான தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு முதன் முதலில் அறைகூவல் விடுத்த ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு மனதான தீர்மானம் நிறைவேறிய நாள் டிசம்பர் 12.
உலகின் எந்தப் பகுதியிலும் இருக்கும் அனைத்துக் குடிமக்களுக்கும் வருமான அளவு, சமூக நிலை, பாலினம், சாதி அல்லது மத வேறுபாடுகளின்றி சுகாதாரப் பராமரிப்பைப் பெற சமமான வாய்ப்பை உறுதி செய்வதே சர்வதேச சுகாதாரப் பாதுகாப்பு என்பதன் பொருள்.
மலிவான, பொறுப்பான, தகுந்த சுகாதாரச் சேவையை உறுதியான தரத்தோடு அளிப்பதே இந்த தினத்தை அனுசரிப்பதன் நோக்கம். அதில் தடுப்பு, குணப்படுத்துதல் மற்றும் புனர்வாழ்க்கைப் பராமரிப்புகள் யாவும் அடங்கியுள்ளன. ஐக்கிய நாடுகளால் தழுவப்பட்ட புதிய நிலையான வளர்ச்சி இலக்குகளில் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த சுகாதார பாதுகாப்பு பின்வருமாறு இருக்க வேண்டியது அவசியம். ஏழைகள் மற்றும் மிகவும் பலவீனமானவர்கள் உட்பட்ட அனைவருக்கும் நோய்த்தடுப்பு, மருத்துவம், மருத்துவமனைப் பராமரிப்பு, வலி நிவாரணம் அனைத்தையும் உள்ளடக்கிய முழு அளவிலான இன்றியமையாத சுகாதாரச் சேவைகள் எவ்வித பாரபட்சமும் இன்றி வழங்கப்பட வேண்டும்.
நோயாளிகள் மட்டுமன்றி அனைத்து மக்களும் செலவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதாவது முன்பணமாக செலுத்துவதோ, நோய் ஆபத்தைப் பொறுத்து தொகுதிகளாகப் பிரித்தோ மருத்துவச் செலவை பகிர்ந்துகொள்ள வேண்டும். மக்களின் பணம் கொடுக்கும் திறனைப் பொறுத்து அல்லாமல், அவர்களுடைய தேவைக்கு ஏற்ப பெற்றுக் கொள்ளும் நிலை இருக்க வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி, உலக அளவில் ஏறத்தாழ 100 கோடி மக்களால் தங்களுக்குத் தேவைப்படும் சுகாதார சேவைகளைப் பெற முடிவதில்லை. மருத்துவச் செலவுகளினால் ஆண்டுதோறும் 1.50 கோடி பேர் வரை பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். 1 கோடி பேர் வரை வறுமைக்கோட்டிற்குக் கீழாக உள்ளனர்.
2012 முதல் 2017 வரையிலான 12-வது திட்டக் காலத்தில் நாட்டில் உள்ள அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்பை வழங்க இந்தியா உறுதி எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. திட்டக் குழுவால் உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பிற்காக ஒரு மேனிலை வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொருளியல் பாதுகாப்பே இந்த முன்முயற்சியின் முக்கிய நோக்கமாக இருந்தாலும், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை வழங்க போதுமான சுகாதாரப் பராமரிப்பு கட்டுமானமும், பயிற்சி பெற்ற பணிக்குழுவும், மலிவான மருந்துகளையும் தொழில்நுட்பத்தையும் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது மிகவும் அவசியம். நீண்ட கால பொருளாதார மேம்பாட்டுக்குச் சிறந்த ஆரோக்கியமே அடிப்படை. உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பைத் தழுவிக்கொள்ளும் நாடுகளுக்கு ஆரோக்கியமான சமுதாயம் மற்றும் வலிமையான பொருளாதாரம் என்கிற இருவித நன்மைகள் கிடைக்கின்றன.
சர்வதேச சுகாதாரப் பாதுகாப்பானது 1948-ம் ஆண்டின் உலக சுகாதார நிறுவன அமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அதில் சுகாதாரம் அனைவரின் அடைப்படை உரிமை என்பதும், எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொகுப்பு : க.கதிரவன்
|