உளவியல் ரயில்அடடே ஜப்பான்...

உள்ளூர் பயண அமைப்புகள் மற்றும் நீண்ட தூர வழித்தடங்களைக் கொண்டிருக்கும் ஜப்பானின் ரயில்கள், அவற்றின் வேகம், செயல்திறன் மற்றும் நேரம் தவறாமையை பின்பற்றி வருவதால், ஜப்பான் நாட்டின் பெரும்பாலான மக்களால் பெருமையோடு பயன்பாட்டில் இருக்கும் ஒரு போக்குவரத்துத்துறையாக இருக்கிறது.

ரயில்வே துறையின் ஒட்டுமொத்த செயல்திறன், ஜப்பானின் தனித்துவமான புவியியல் அமைப்பு, போக்குவரத்து திட்டமிடல் ஆகியவை மட்டுமின்றி, நிமிடத்துக்கு நிமிடம் மாறி வரும் தேவைகளுக்கேற்ப சில உளவியல் தந்திரங்களின் அடிப்படையிலும் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

ரயிலை இயக்கும் ஓட்டுநரின் நடத்தை மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரயில் நிலையங்களில் பயணிகளின் உணர்வுகளையும் பாதிக்கக்கூடிய சின்னச்சின்ன சிக்னல்களிலும், நட்ஜ் தியரியை(Nudge theory) ஜப்பான் ரயில்களில் கடைபிடிக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, ரயில் வந்து நிற்கும்போதும், எடுக்கும்போதும் காதைக் கிழிக்கும் ‘சைரன்’ ஒலிக்குப் பதிலாக மெல்லிய ஒலிகள் இசைக்கும் வகையில் வைத்துள்ளார்கள். ‘திடீரென்று கேட்கும் சத்தத்தால் வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் நிலைதடுமாறி, கீழே விழுந்து காயம் ஏற்படக்கூடும்’ என்ற ஆய்வின் அடிப்படையில் மெல்லிய ஒலிகளை எழுப்புகிறார்கள். மேலும், பெருத்த ஒலிகளை கேட்கும் ரயிலை இயக்கும் ஓட்டுநர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகி தவறாக இயக்கவும், விபத்துக்களை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

அடுத்தபடியாக, ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை குறைக்கவும் உளவியலாளர்கள் பரிந்துரைத்த மெல்லிய நீலநிற ஒளியைப் பரப்பும் விளக்குளை ஜப்பானிய ரயில் நிலையங்களில் நிறுவியிருக்கிறார்கள். இதனால் தற்கொலைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதையும் ஜப்பான் ரயில்வேத்துறை உறுதி செய்துள்ளது.

- என்.ஹரிஹரன்