பட்டாசு கட்டுப்பாட்டால் பலன் கிடைத்ததா?!



நாட்டு நடப்பு

அதிகப்படியான ஒலி, காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு பட்டாசு வெடிப்பதற்காக 2 மணி நேர விதிமுறையை இந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வரையறுத்திருந்தது. மக்களின் கொண்டாட்டத்துக்கு இடையூறான தீர்ப்பு என்றும், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் விமர்சனங்களும் எழுந்தது. இப்போது ஒருவழியாக தீபாவளி முடிந்துவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பினால் ஏதேனும் நன்மைகள் நடந்திருக்கிறதா என்று கேட்டால், ‘ஓரளவு நடந்திருக்கிறது’ என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தாக்கத்தைக் கண்டறிய சுற்றுப்புற காற்றின் தர ஆய்வையும், ஒலி அளவையும் ஆய்வு செய்தது. அதன்படி சென்னையில் திருவல்லிக்கேணி, பெசன்ட்நகர், நுங்கம்பாக்கம், சவுகார்பேட்டை, தி.நகர் ஆகிய 5 இடங்களில் தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவும், தீபாவளி அன்றும், தீபாவளிக்கு 7 நாட்களுக்கு பின்பும் காற்று மாசு கண்டறியும் பணிகள் நடைபெற்றது.

ஆய்வின்படி காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் 48 முதல் 114 மைக்ரோகிராம்/கனமீட்டர் ஆக இருந்தது. ஆனால், அது கடந்த 2017-ம் ஆண்டு 387 முதல் 777 மைக்ரோகிராம்/ கனமீட்டர் அளவில் இருந்தது.

(நிர்ணயிக்கப்பட்ட அதிக அளவு 100 மைக்ரோகிராம்/கனமீட்டர்). இந்த ஆண்டு சவுகார்பேட்டை கண்காணிப்பு நிலையத்தில் மட்டும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட சற்றே கூடுதலாக (114 மைக்ரோகிராம்) இருந்தது. வளிமண்டல ஒலி மாசின் அளவு தீபாவளிக்கு முன் 58-ல் இருந்து 75 டெசிபல் அளவாக இருந்தது. தீபாவளியன்று 68-ல் இருந்து 89 டெசிபல் அளவில் மட்டுமே அதிகரித்து இருந்தது. இதுவும் கடந்த ஆண்டைவிட குறைவே.

இதேபோல், தீபாவளியன்று தீக்காயத்தால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்வதும் ஒவ்வோர் ஆண்டும் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு தீக்காயங்களின் எண்ணிக்கை 148-ல் இருந்து 98 ஆக குறைந்துள்ளது.

தீபாவளியன்று தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறையில் மாநிலத்தில் 152 தொலைபேசி அழைப்புகளும், நகர்ப்புறத்தில் 61 அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டன. 151 அழைப்புகள் சிறிய வெடி விபத்து சார்ந்ததாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு 229 அழைப்புகள் பதிவாகி இருந்ததாகக் கூறியிருக்கிறார்கள்!

- அஜி