பல் துலக்கவும் மெஷின் வந்தாச்சு!



விநோதம்

காலையில் தூங்கி எழுந்தால் பல் துலக்குவதே பெரிய வேலையாக இருக்கிறது என்று அலுத்துக் கொள்கிறவர்களுக்கு இது ஆனந்தமான செய்தி. ஆமாம்... அதை செய்யவும் மெஷின் வந்தாச்சு!

இரவு தாமதமாகத் தூங்க வேண்டிய வாழ்க்கை முறை. ஆனால், காலையில் சீக்கிரமாக எழுந்து ஓட வேண்டிய அவசரம். இதனால், காலையில் ஒவ்வொரு சின்னச் சின்ன வேலையுமே அழுத்தம் தருவதாக அமையும்.

ஆண்களாக இருந்தால் ஷேவிங் செய்வதா, அன்றைய நாளிதழைப் படிப்பதா என்பது போன்ற கவலை. பெண்களுக்கு வீட்டு வேலைகளுடன் கண்ணுக்கு மை தீட்டுவதா, நெயில் பாலிஷ் போடுவதா என்று வேறு குழப்பம். ஆனால், இந்த வேலைகளுக்கு இடையிலேயே பல் துலக்கிவிட முடியும் என்பதுதான் Automatic brush என்று குறிப்பிடப்படும் இந்த
Ama brush-ன் தனிச்சிறப்பு.

பல் செட் போல இதனை வாயில் பொருத்திக் கொண்டு மற்ற வேலைகளை வழக்கம் போல செய்து கொண்டிருக்கலாம். மற்ற வேலைகளைச் செய்யும் இடைவெளியே போதும் என்று சத்தியம் செய்கிறார்கள் இதன் கண்டுபிடிப்பாளர்கள். வழக்கமாக ஒருவர் தன்னுடைய பற்களை ஆரோக்கியமான முறையில் துலக்குவதற்கு, 3 நிமிடங்களாவது தேவை. ஆனால், இந்த Amabrush மூலம் 10 வினாடிகளில் பற்களை சுத்தம் செய்ய முடியுமாம்.
அதுவும் 360 டிகிரியில் பல் துலக்குமாம். இதனாலேயே, இதற்கு 10 Second tooth brush என்ற பெயரும் உண்டு.

உக்ரைனை சேர்ந்த Chiiz என்கிற தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ள இந்த பிரஷ் அந்த நிறுவனத்தின் பெயராலேயேயும் அழைக்கப்படுகிறது. சரி... இப்படி ஒரு டூத் பிரஷ் வடிவமைப்பின் அவசியம் என்னவென்று கேட்டால், அதற்கான லாஜிக்குகளை அடுக்குகிறார்கள்
Chiiz நிறுவனத்தினர்.

‘ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் பல் துலக்குவதற்கு மட்டுமே 108 நாட்களை செலவு செய்கிறார். இன்றைய அவசர வாழ்க்கையில் இது மிகவும் அதிகமான காலகட்டம். அதேபோல், சராசரியாக ஒருவர் 60 விநாடிகளில் பல் துலக்குகிறார். ஆனால், பல் மருத்துவர்களோ 180 விநாடிகள் பரிந்துரைக்கிறார்கள்.

முக்கியமாக, பல் மற்றும் ஈறு தொடர்பான 90 சதவிகித பிரச்னைகள், தவறான பல் துலக்கும் முறையாலேயே வருகின்றன. முக்கியமாக, மாலை நேரத்தில் யாரும் பல் துலக்க விரும்புவதில்லை. களைப்பு மற்றும் சோம்பல் காரணமாக இரவு நேர பல் துலக்குவதை வேண்டாத வேலையாகவே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். இத்தனை பிரச்னைகளுக்கும் Amabrush தீர்வு தருகிறது’ என்று பெருமையாக சொல்கிறார்கள் அதன் தயாரிப்பாளர்கள்.

இந்த சீஸ் பிரஷின் மேல் பற்பசையை போட்டு மேல், கீழ் பற்களில் வைத்து லேசாக கடித்துக்கொண்டு ஸ்விட்ச்சை ஆன் செய்தால் போதும். நடுவே இருக்கும் ஒலி அலைகளை எழுப்பும் மோட்டார் இயங்க ஆரம்பிக்கும். பிரஷின் நார்கள் அதிர்ந்து, நுரை கிளம்பி பற்களின் இண்டு இடுக்குகளை அசைக்கிறபோது அழுக்கு மற்றும் உணவுத் துணுக்குகள் போன்றவை ஆட்டம் கண்டு நுரையோடு வந்துவிடும்.

அதன் பிறகு பற்கள் பளிச்சென்று ஆகிவிடும். ஒலி அலை ஏற்படுத்தும் அதிர்வுகளால் வினாடிக்கு 25 ஆயிரம் தடவை பிரஷ்ஷை தேய்த்தது போன்ற பலன் கிடைக்கும் என்கின்றனர். அடிக்கடி வெளியூர் பயணம் செய்கிறவர்கள், அதிகாலை அவசரக்காரர்களுக்கெல்லாம் இது நிச்சயம் பலனளிக்கும் என்றும் நம்பிக்கையோடு விற்பனை செய்யவும் ஆரம்பித்துவிட்டார்கள். முன் பதிவு விலை சராசரியாக 5 ஆயிரம் ரூபாய்!

- க.கதிரவன்